
காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக 44 நாடுகளைச் சேர்ந்த 428 ஆர்வலர்கள் 'குளோபல் சுமூத் ஃபுளோட்டிலா' என்ற கப்பல் குழுவில் காஸா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்தி, இலங்கையைச் சேர்ந்த ஸமீரா மெஹபூப்தீன் உட்பட கப்பலில் இருந்தவர்களைக் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட ஐரோப்பிய மற்றும் பிரெஞ்சு ஆர்வலர்கள் கைகள் கட்டப்பட்டு, தரையில் தலை குனிந்து அமர வைக்கப்பட்டிருந்தனர். அந்த இடத்திற்குச் சென்ற இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இத்தாமர் பென்-க்வீர் அவர்களைக் கேலி செய்யும் வீடியோ ஒன்றை "இஸ்ரேலுக்கு நல்வரவு" என்ற வாசகத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.
பின்னர் விடுவிக்கப்பட்ட ஆர்வலர்கள் தங்களை இஸ்ரேல் இராணுவத்தினர் அடித்ததாகவும், கடுமையான முறையில் நடத்தியதாகக் குற்றம் சாட்டினர். காயமடைந்த சில பிரான்ஸ் ஆர்வலர்கள் துருக்கியிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பிரான்ஸின் குடிமக்கள் அந்நிய நாட்டு அதிகாரி எவராலும் மிரட்டப்படுவதையோ அல்லது கொடூரமாக நடத்தப் படுவதையோ பிரான்ஸ் சகித்துக் கொள்ளாது என்பதால், இத்தாமர் பென்-க்வீர் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக,பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் தவிர மற்றும் பல நாடுகளும் இந்த விவகாரத்தில் இஸ்ரேல் அமைச்சர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில், போலந்து ஏற்கனவே பென்-க்வீர் தங்கள் நாட்டுக்குள் 5 ஆண்டுகள் நுழையக் கூடாது என்று தடை விதித்துள்ளது.
பிரித்தானியா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கடந்த ஆண்டே இவர் மீது பயணத்தடைகளை விதித்து விட்டன.
பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் இத்தாமர் பென்-க்வீர் மீது பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
பிரான்ஸ் அமைச்சர் விடுத்த இந்தத் தடையை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் விமர்சித்துள்ள நிலையில், பென்-க்வீரின் இத்தகைய செயல் "இஸ்ரேலின் விழுமியங்களுக்கு எதிரானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments