
பூமியில் நாகரிக உலகோடு தொடர்பில்லாமல் வாழும் பழங்குடி மக்களில் “அமேசான்’ எல்லையில் வாழும் ‘புரோகொனிஷ்’ கிராமத்தவரும் அடங்குவர்.
இந்த தொடர்பின்மைக்கு புவியியல் காரணங்களோடு, வேறும் பல காரணங்களும் உண்டு. இப்பிரதேசத்தை பிரேசில் பாதுகாப்பு வலயமாக வரையறுத்து இருப்பது இன்னொரு காரணமாகும்! இதனால்தான் இம்மக்களின் தனித்துவம் இன்றுவரை காப்பாற்றப்பட்டு வருகின்றது. அதே நேரம் இதுவரை இங்கு வெளியாட்கள் வந்திருந்தாலும் கூட, சிலவேளை சந்திப்புகள் மோசமாகவே அமைந்துள்ளன!
இர்வின் வனவேஷத்தில் சென்றதன் காரணமாகவே சந்திப்புகள் சீராக அமைந்தன; வனவாசிகளின் வாழ்க்கை முறை பற்றி இர்வின் நன்கு அறிந்து கொள்வதற்கும், தனது பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஆவணப் படுத்தலுக்கான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும், அதன் பின்னர் “அமேசான்” சுற்றுச்சூழல் சஞ்சிகைக்கு வனத்தைப்பற்றிய ஆக்கங்களை அவன் படைப்பதற்கும் வனவாசிகள் வேசத்தில் நுழைந்தமைதான் அவனது சந்திப்புகள் சீராக அமைவதற்கு அனுகூலமாக இருந்துள்ளன.
செரோக்கியின் தந்தையை ஒருவாறு சமாளித்து விட்டதாகத் தனக்குள் திருப்தியடைந்துகொண்ட இர்வின், பெரியகல்லடிவாரத்தில் தவத்தில் ஈடுபட்டு, அங்கேயே தனித்து வாழ்ந்துவரும் முதியவர் பற்றிய மேலும் அரிதான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் மறுபடி அவர்முன் ஆஜரானான்!
"குழந்தாய், உனது துடிப்புத்தனமும் புத்திக்கூர்மையும் எனக்குப் பிடித்திருக் கின்றது! உன்னால் எனக்கொன்று ஆகவேண்டியுள்ளது!” என்று நிதானமாக இர்வினை நோக்கினார், அந்தப் முதியவர்.
ஆச்சரியமடைந்த இர்வின், ‘அது என்ன?’ என்பதுபோல் பதிலுக்கு அவரை உற்று நோக்கினான்.
“ ‘கிரீடி’யிலிருந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர், எனது தந்தை ஏன் இங்கு வந்தார் என்பதை நீ அறியமாட்டாய்! இதோ பார்த்தாயா இந்தப் புராதன நூலை. அவர் அங்கு இதனை வைத்துக் கொண்டு ‘பஆல்’ பார்ப்பதில் ஈடுபட்டு, அத்துறையில் பிரசித்தியும் பெற்றிருந்தார். இந்த நூலைக் கொண்டும், தனது பகுத்தறிவைப் பயன்படுத்தியும் ‘அமேசான்’ வனப்பகுதியிலுள்ள ‘பெரியகல்’ ஒன்றிற் கருகில் குகையொன்றினுள் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த நூலொன்று இருப்பதை அறிந்துள்ளார்! அந்த நூலைத்தேடியே அவர் தன் குடும்பத்தாருடன் பல வருடங்களுக்கு முன்னர் இங்கு வந்தார்! அந்தப்பயணம் எங்களுக்கு சுவாரஷ்யமாக இருந்தது. நாங்கள் அனைவரும் அன்று இந்தக் கல் மேல் ஏறினோம். எனது தந்தை தனது நூல்கள் அடங்கிய பையை என்னிடம் தந்துவிட்டு, கல்லின்மேல் அங்குமிங்குமாக அலைந்தபடி எங்காவது குகை தென்படுகின்றதா என்று பார்க்கலானார்! அப்பொழுது எனக்கு வயது பத்து இருக்கலாம். நான் பையோடு கல்லின் அருகாமைக்கு வந்தபோது, கால் சறுக்கி விழுந்து விட்டேன்.” என்று தன் கதையை விலாவாரியாகக் கூறி முடித்த பெரியவர் சற்று நிதானமடைந்தார்; நீண்ட நேரம் இடைவெளியின்றிப் பேசியதால் அவருக்கு மூச்சு வாங்கியது!
ஊடகத்துறையில் முன்னோடியாகவிருந்த இர்வினுக்கு இவ்வரலாற்றுத் தடையங்கள் சுவாரசியமாக இருந்ததில் வியப்பில்லை !
முதியவர் கூறிக்கொண்டிருப்பதை விளங்கியும் விளங்காமலும் செரோக்கியும் அவனது தந்தையும் நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
முதியவரின் தந்தை தேடிவந்தது தன்னிடம் தற்போது இருக்கின்ற நூல்தான் என்பதை இர்வினால் உணர்ந்து கொள்ளமுடிந்தது! அந்த நூலிலிருந்து நான்கு பக்கங்களை குள்ளர்கள் திருடிச் சென்று விட்டார்களே; அவற்றை வைத்து அவர்கள் என்னதான் செய்யப் போகின் றார்களோ? பெரியவர் தன்னிடத்தில் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல், ‘சில காலங்களின் பின் உலகில் நிகழப்போகும் பாரிய மனித அழிவொன்றை என்னால் தடுத்து நிறுத்த முடியாமல் போவதற்கு அந்த நான்கு பக்கங்கள்தான் காரணமாக அமையப் போகின்றதோ?’
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments