
ஈரான் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை என்று நடக்கும், ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும், ஒப்பந்தத்தில் இருப்பது என்ன என்பது பற்றிய முழு விவரம் இங்கே...
ஈரானின் அணுஆயுத கொள்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த அமெரிக்கா, இஸ்ரேல் உடன் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது திடீர் தாக்குதலைத் தொடங்கியது.
இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 விழுக்காடு பங்களித்து வரும் ஹோர்மூஸ் நீரிணையையும் ஈரான் மூடியதால், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. அதேநேரத்தில், ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டன.
பல்வேறு நாடுகளின் கூட்டு முயற்சியால் அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கத்தார் தூதுக்குழுவினர் சுமார் 15 மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதனை தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில் நேற்று அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அமைதி ஒப்பந்தத்தின்படி ஹோர்முஸ் நீரிணை எவ்வித கட்டணமும் இன்றி திறந்துவிடப்படும் என்றும், ஈரான் கடல் பகுதிகளில் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையை உடனடியாக நீக்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்தம் கையெழுத்தானதும் எண்ணெய் விநியோகம் தாராளமாக நடைபெறும் என்றும் உறுதியளித்தார்.
அதேபோல, அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்திருப்பதாக அந்நாட்டு அதிபர் மசூத் பெஷஷ்கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் 14 அம்ச புரிந்துணர்வு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அதன்படி, லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் நிரந்தர போர் நிறுத்தம், ஈரானின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது, ஈரானிய துறைமுகங்களில் 30 நாட்களுக்குள் அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குதல், ஈரானிய கடற்பரப்பில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல், ஹோர்முஸ் நீரிணையை 30 நாட்களுக்குள் முழுமையாக திறப்பது என்று இரு நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஈரானை மறுகட்டமைப்பு செய்வதற்காக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் 28 லட்சம் கோடி ரூபாயை வழங்குதல், ஈரானிய எண்ணெய் மற்றும் எரிசக்தி பொருட்கள் மீதான தடைகளை நீக்குதல், அணுஆயுத தயாரிப்பை ஈரான் கைவிடுவது என்றும் அரபு நாடுகளில் அமெரிக்கா தனது படைகளை அதிகரிக்கவோ அல்லது புதிய தடைகளை விதிக்கவோ கூடாது என்றும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஈரானின் முடக்கப்பட்ட நிதியில் பாதி விடுவிக்கப்பட்டு, ஈரானின் எண்ணெய் மீதான தடை நீக்கப்பட்டு, கடற்படை முற்றுகை நீக்கப்படும் வரை இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை தொடங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி ஒப்பந்தம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்கப்படும் என்றும் ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, சுவிட்சர்லாந்தில் வரும் 19ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் செரீப் குறிப்பிட்டுள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments