
அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி எதிர்க்கட்சியினருக்கு சபையில் சாட்டை
நீதிமன்றத்தில் வழக்குகள் நெருங்கும் போது கலக்கமடைந்து பாராளுமன்றத்தில் சபை நடுவில் வந்து முரண்படுவதால் எதுவுமே மாறப்போவதில்லை எனவும் சட்டத்தரணிகளின் உதவியுடன் வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ள தயாராவதே சிறந்தது என்றும் எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி பாராளுமன்றத்தில் அறிவுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு, சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள், இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான விதிமுறைகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நீதித்துறையின் மீது கடந்த அரசாங்கங்களினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. அரசியல் செல்வாக்குகள் ஆதிக்கம் செலுத்தின. அவ்வாறான நிலை நாட்டில் தற்போது கிடையாது. அதற்கான அவசியமும் தற்போதைய அரசாங்கத்துக்கு கிடையாது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை முன்னிலைப்படுத்தியே அரசாங்கம் செயற்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கடந்த அரசாங்கங்களில் எதிர்தரப்பில் இருந்து ஆளும் தரப்பிற்கு சென்றவர்கள், பாராளுமன்ற உறுப்புரிமையை விற்பனை செய்தவர்கள். பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் இன்றும் எதிர்த்தரப்பில் இருக்கின்றனர். முழு நாள் விவாதத்தை நடத்தி முன்னாள் பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்ட வரலாறு உள்ளது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்.
கடந்த கால கறுப்பு வரலாறு தற்போது நாட்டில் இல்லை.கட்சியை மாற்றினாலும் வழக்கு நடவடிக்கைகளிலிருந்து தற்போது தப்பிக்க முடியாது. வழக்கு விசாரணைகள் நெருங்கி வரும் போது ஊடகங்கள் முன்பாக புலம்பி போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். அரச நிதியை மோசடி செய்தவர்கள் சிறைக்கு செல்லும் போது தேசப்பற்றாளர்கள் போன்று கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். மக்களுக்காக குரல் கொடுப்பதால் அரசாங்கம் பழிவாங்குவதாக அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கின்றார்கள்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிச்சயம் பாதுகாக்கும். சட்டத்துக்கு அப்பால் எவரும் செயற்பட முடியாது. அரச நிதியை மோசடி செய்து சிறைக்குச் சென்று வருபவர்களை மாலை அணிவித்து வரவேற்கும் மனநிலையில் நாட்டு மக்கள் இப்போது இல்லை. அரச நிதியை மோசடி செய்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். தண்டனை வழங்கலை தாமதப்படுத்தக் கூடாது என்று நாட்டு மக்கள் தெரிவிக்கின்றார்கள். அந்த வகையில் மக்களின் கோரிக்கையையே ஜனாதிபதி நிறைவேற்றுகின்றார் என்றார்.
thinakaran

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments