Ticker

6/recent/ticker-posts

சபரிவர்மன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்; தற்காலிக அரசுப் பணி வழங்கிய அரசு


நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைது சபரிவர்மன் மரணம் அடைந்த நிலையில், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தற்காலிக அரசுப் பணியையும், ரூ. 10 லட்சம் நிவாரண நிதியையும் வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

நாகர்கோவிலில் 200 கிராம் குட்கா வைத்திருந்ததாக சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி வியாபாரி கைது செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து சபரிவர்மன் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சபரிவர்மன் இறந்த நிலையில், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து இது குறித்து காவல்துறை விசாரணையை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், சபரிவர்மன் பிரேதப் பரிசோதனையில், அவரது உடலின் 19 இடங்களில் காயம் இருப்பதாக தெரியவந்தது. குறிப்பாக வலது கை, கால்களிலும், இடது காலிலும், இடது நெஞ்சுப் பகுதியிலும், தலைப் பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த சபரிவர்மன் மர்ம மரணம் வழக்கில், சிறைக்காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தற்போது, நாகர்கோவில் சிறையின் தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார், திருவிடைநம்பி ஆகியோரை நேசமணிநகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறிய திமுக எம்.பி. கனிமொழி, "அரசு சார்பில், அமைச்சர், முதலமைச்சர் என யாருமே வாய் திறந்து அந்தக் குடும்பத்திற்கு ஒரு ஆறுதல்கூட சொல்லவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர்கள் ஸ்ரீநாத், ராஜேஷ் குமார் ஆகியோர் இன்று சபரிவர்மனின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், சபரிவர்மன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம், ஊரக வளர்ச்சித் துறையில் தற்காலிக அரசுப்பணி, 2 சென்ட் வீட்டு மனைப் பட்டா ஆகியவற்றை வழங்கினர்.

news18


 


Post a Comment

0 Comments