பயணக் களைப்பு அவனை, சிறிது நேரத்திலேயே தூங்கச் செய்துவிட்டது. ரெங்க்மா அவனைத் தொந்தரவு படுத்தாமல் மாமியாரின் ஜாகைக்குள் நுழைந்தாள். வழமைபோல் மாமி - மருமகள் சேர்ந்து இரவுநேர உணவைச் சமைத்தார்கள்.
செரோக்கிக்கும் தனக்குமான பங்கை எடுத்து வந்து தனது மனைக்குள் நுழைந்த அவள், செரோக்கி வழமைக்கு மாறாக நாசி நாதமிட்டுத் தூங்கிக்கொண்டிருப்பதைப்
பார்த்ததும், தான் எடுத்துவந்த உணவுத்தட்டை மூடி வைத்துவிட்டு, அவளும் தூங்கலானாள்!
மனைக்குள் இலேசாக வெளிச்சம் வர ஆரம்பித்தபோது… எப்போதும்போல் செரோக்கி கண் விழித்துக் கொண்டான்!
எழுந்திருந்தவன்… இரு கைகளையும் தலைக்குமேலாக நீட்டி… நிமிர்த்தி உடம்பை முறுக்கிவிட்டுக் கொண்டான்!
தலையை இடதும் வலதுமாகச் திருப்பியபடி இருந்தவனின் கண்கள் எதையோ தேடுவதாக இருந்தன!
அவன் தேடியது ரெங்க்மாவை; அவளை அங்கு காணவில்லை!
வாசலுக்கு வெளியே எட்டி நோக்கினான். குனிந்தபடி அவள் ஓங்காரமிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு பதறிப்போன அவன், சுதாகரித்துக் கொண்டு, அவளருகே ஓடினான்!
தன் இரு கைகளாலும் அவளது நெற்றியின் இரு மருங்குகளையும் இறுக்கிப் பிடித்துக்கொண்ட அவன், அவள் வாந்தி எடுப்பதை இலகு படுத்த உதவலானான்!
சிறிது நேரம்வரை ஓங்காரமிட்ட அவள், தலை நிமிர்ந்ததும் செரோக்கியை கட்டியணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பிலிருந்து சற்றும் விலகாமல், அவன் அவளைக் கைத் தாங்கலாக்கி படுக்கை விரிப்புவரை வந்து, அவளைச் சாய்ந்துகொள்ளச் செய்தான்.
திடீரென நடந்ததைப் புரிந்துகொள்ள முடியாத அவன் தன் தாயிடம் ஓடிச் சென்று, ரெங்க்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத செய்தியை அவளிடம் ஒப்புவித்தான்.
கதிகலங்கிப்போன தாய், அவனை அலவத்தைக்கு விரைந்து சென்று மருத்துவச்சியை அழைத்துவரும்படி கூறியதும், அவன் அம்பிலிருந்து விடுபட்ட வில்லானான்!
செல்லும் வழியில் ரெங்க்மாவின் பெற்றோரின் ஜாகைக்குள் நுழைந்த அவன், நிகழ்வை அவர்களிடமும் கூறிவிட்டு, தான் மருத்துவச்சியை அழைத்துவர அலவத்தை வரை செல்வதாகக் குறிப்பிட்டான்.
ரெங்க்மாவின் தாயார் அவனை அங்கு செல்லவிடவில்லை!
அவள், தான் மருத்துவச்சியை அழைத்துவருவதாகப் பொறுப்பெடுத்துக் கொண்டு, செரோக்கியைத் திரும்பிப் போகச்செய்தாள். தன் மனைக்கு விரைந்து வந்த செரோக்கி, அக்கம் பக்கத்தவர்கள் பலரும் ரெங்க்மாவைச் சூழ்ந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் பதறிப் போய்விட்டான்!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments