Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம் –135


அப்படி இப்படி என்று உருண்டு புரண்டு, எப்படியோ தூங்கிவிட்டாள் சின்ன மருமகள். எத்தனை மணிக்குத் தூங்கினாள் என்பது அவளுக்கே தெரியாது; ஏனையோருக்கும் தெரியாது.

காலை சீக்கிரம் எழுந்து பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளின் வேலைகளில் இரு மருமகள்களும் தீவிரமாக இருப்பது வழக்கம். குழந்தைகளை அனுப்பிவிட்டு, கணவன்மார்களுக்குப் பணிக்குத் தேவையான அனைத்தையும் ஒழுங்குபடுத்தி, மதிய உணவைத் தயார் செய்து கட்டிக் கொடுத்து, அவர்களையும் வழியனுப்பிவிட்டுத் தான் இரு மருமகள்களும் "அக்கடா" என்று அமர்ந்து சிறிது ஓய்வு எடுப்பார்கள்.

இவை தினமும் அரங்கேறும் வழக்கமான காட்சிகள்.

ஆனால் இன்று...

மணி ஏழாகியும் சின்னவள் இன்னும் எழுந்து வரவில்லை.

மூத்தவள், சின்னவளின் அறைப் பக்கம் பார்ப்பதுமாகவும், தோசை சுடுவதுமாகவும் இருந்தாள்.

அந்த நேரத்தில், சின்னவளின் மூத்த மகள் குளித்துவிட்டு முடியைத் திருத்திக்கொள்ளத் தாயைத் தேடி அடுப்படிக்கு வந்தாள்.

"என்னம்மா வேண்டும்?" என்று மூத்த மருமகளே முதலில் கேட்டாள்.

"பெரியம்மா, அம்மாவை வரச் சொல்லுங்கள். நான் குளித்துவிட்டேன். இரட்டைச் சடை போட்டுக் கொள்ள வேண்டும்," என்றாள் அந்தச் சிறுமி.

"கொஞ்சம் அருகே வருவாயா, மா?" என்று மெதுவாக அழைத்தாள் மூத்த மருமகள்.

"இதோ வருகிறேன், பெரியம்மா," என்று கூறியவள், முடியைக் கோதி கொண்டை போட்டபடி அடுப்படிக்குள் நுழைந்தாள்.

உள்ளே வந்தவுடனே அவளது கண்கள் தாயைத் தேடின.

அதைப் பார்த்த மூத்த மருமகள்,

"அம்மாவைத் தேடுகிறாயா?" என்று கேட்டாள்.

"ஆமாம் பெரியம்மா. அம்மா எங்கே? பூஜையில் இருக்காங்களா? நீங்க ஏன் கூப்பிட்டீங்க?" என்று கேள்விகளைத் தொடர்ந்தபடியே தோசையைப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டாள்.

அப்போது மூத்த மருமகள் மெதுவாக,

"உங்க அம்மா இன்னும் எழுந்து வரலை. பாட்டி எழுந்திருக்கும் முன்னாடி ஓடிப் போய்ப் பார்த்துவிட்டு வா. அதைத்தான் சொல்லக் கூப்பிட்டேன்," என்றாள்.

அதைக் கேட்டதும் அந்தக் குழந்தைக்குமே ஆச்சரியமாக இருந்தது.

"என்ன? அம்மா இன்னும் எழுந்து வரலையா? உண்மையாவா, பெரியம்மா?" என்று கேட்டவள், அவசரமாக அறையை நோக்கித் திரும்பினாள்.

அந்தச் சமயத்தில்...

வாசல் பக்கம் இருந்து பாட்டியின் குரல் கேட்டது.

மருமகளை அழைக்கும் குரல்!

மூத்த மருமகளும் சின்னவளின் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

பாட்டிக்கு யார் பதில் சொல்வது?

என்ன பதில் சொல்வது?

உண்மையைக் கூறலாமா?

இல்லை, ஏதாவது காரணம் சொல்லலாமா?

இத்தனை கேள்விகளும் இருவரது மனதிலும் சுழன்றுகொண்டிருந்தன.

அதே நேரத்தில் இன்னொரு எண்ணமும் இருவரது மனதிலும் தோன்றியது.

ஏன்?

என்றும் இல்லாதவாறு இத்தனை நேரமாகியும் சின்னவள் அறையை விட்டு வெளியே வரவில்லை ஏன்?

அதுதான் இப்போது அவர்களை அதிகம் பதற வைத்த கேள்வியாக இருந்தது...

(தொடரும்)


 


Post a Comment

1 Comments