
உள்ளூரம் ஒரு வித பதட்டத்தோடு அறைக்குள் நுழைந்த மூத்த மருமகளுக்கு அங்கே கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. பேய் அறைந்தது போல் அப்படியே நின்றுவிட்டாள்.
ஆனால் அவளுக்கு எதிரே நின்றிருந்த சின்ன மருமகளின் மகளோ விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் பார்த்து அறைக்குள் நுழைந்த அவளது கணவன், அங்கே அண்ணி நிற்பதைக் கண்டு,
"என்ன அண்ணி? நீங்க இங்கே? என்னாச்சு?" என்று கேட்டான்.
அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல், பல கேள்விக்குறிகளை விழிகளில் தேக்கியபடி, தன் கையை நீட்டி அவனது மனைவியைக் காட்டினாள்.
அதைக் கண்ணுற்ற சந்திரனும் எந்தக் கவலையும் இன்றி சிரிக்க ஆரம்பித்தான்.
அதைப் பார்த்த மூத்தவள்,
"என்ன கொழுந்தனாரே! நீங்களும் சிரிக்கிறீர்கள். அவளுக்கு என்னாச்சோ என்று நான் பயந்துகிட்டு நிற்கிறேன்," என்றாள்.
அதற்கு அவன்,
"அண்ணி, நானும் அதைத்தான் நினைக்கிறேன். மூளை குழம்பிவிட்டது போல இருக்கிறது இவளுக்கு!" என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தான்.
ஒன்றும் புரியாத மூத்தவள் குழந்தையைப் பார்த்து,
"மா... நீ போய் அம்மாவைத் தட்டி எழுப்பு," என்றாள்.
குழந்தையும் சிரித்துக்கொண்டே தன் அம்மாவிடம் சென்று,"அம்மா... அம்மா... எழுந்திருங்க!" என்று உசுப்பினாள்.
திடீரெனக் கண்விழித்த சின்னவள்,
"உன்னிடம் எத்தனை தடவை சொல்வது? போய் எடுத்துக் குடி, குடி என்று! எதற்கும் லாயக்கில்லை நீ. இந்தத் தண்ணீரைக்கூட உனக்கே எடுத்துக் குடிக்கத் தெரியாதா? நான் வரமாட்டேன்... கதை முடியும் வரை!" என்று அதட்டினாள்.
அதைக் கேட்ட குழந்தை வியப்புடன்,
"என்னது? தண்ணீரா? யார் கேட்டது? நானா? முடி இரட்டை சடை போடவே வந்தேன். தண்ணீர் எப்போ கேட்டேன்?" என்று கூறியபடி மீண்டும் தோளை உசுப்பினாள்.
அப்போதுதான் தூக்கம் முழுவதும் தெளிந்து சின்னவள் கண்களைத் திறந்தாள்.
சுற்றும் முற்றும் பார்த்தவள்,
"விடிஞ்சுட்டதா?" என்றாள்.
உடனே மூத்தவள்,
"என்னாச்சு உனக்கு? ஏன் ஏதேதோ பினாத்தினாய்? நான் பயந்தே போனேன்!" என்றாள்.
அதற்கு சின்னவள் குழப்பத்தோடு,
"நானா பினாத்தினேன்? எப்போ?" என்று திருப்பிக் கேட்டாள்."ம்க்கும்... சரியாப் போச்சு. போ!" என்று தலையசைத்தாள் மூத்தவள்.
அருகில் நின்றிருந்த சந்திரன் உடனே,
"நான் கூட நினைத்தேன், இன்று விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும் என்று!" என்றான்.
அதை கேட்ட சின்னவள்,
"எதற்கு நீங்க விடுமுறை எடுக்கப் போறீங்க?" என்று முகத்தைப் பார்த்தவாறே கேட்டாள்.
"ஆமாம்! மெண்டல் மருத்துவமனை போக வேண்டுமென்றால் விடுமுறை போட்டாத்தானே முடியும்!" என்றான்.
அதுவரை கவலையோடு நின்றிருந்த மூத்தவள் கூட அந்த வார்த்தையைக் கேட்டு சிரித்துவிட்டாள்.
சிரித்தபடியே அறையை விட்டு வெளியேறினாள்.
சின்னவளோ கட்டிலில் அமர்ந்தபடியே சிந்திக்கத் தொடங்கினாள்.
ஏன் அக்கா நம் அறைக்குள் வந்தார்?
ஏன் காலையிலேயே என் கணவர் கேலி கிண்டலைத் தொடங்கினார்?
மகள் ஏன் தண்ணீர் பற்றி பேசினாள்?
நான் கேட்காத தண்ணீரை யார் கேட்டார்கள்?
என்னதான் நடந்தது?
ஒன்றும் புரியவில்லை...
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments