Ticker

6/recent/ticker-posts

மைதிலி என்னைக் காதலி! =8


மாலை நேரமானதும்...
தீப்தி பாடசாலையிலிருந்து  உற்சாகமாக வீட்டுக்குள் வந்தாள்.

“அம்மா! நாளைக்கு ஸ்கூல்ல ‘குடும்ப நாள்’ கொண்டாட்டம்.”

மைதிலி சிரித்தாள்.

“சரி… நான் வர்றேன்.”

தீப்தியின் முகம் உடனே சுருங்கியது.

“ஒவ்வொருத்தரும் அம்மா அப்பாவோடதான் வரணுமாம்…”

அந்த ஒரு வரி மைதிலியின் இதயத்தை கிழித்தது.

“நம்மளோட அப்பவா... யாராச்சும் வருவாங்களா அம்மா…?”

மோகனை நினைத்துக் கொண்டுதான் குழந்தை கேட்கின்றது என்று புரிந்து கொண்ட மைதிலி, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள். 

அந்த இரவு முழுவதும் அவள் தூங்கவே முடியவில்லை; இறுதியாக, மோகனிடத்தில் சில வார்த்தைகளாக பேசிவிட்டு, தூங்கப் போனாள்!

மறுநாள் காலை…
பாடசாலை வளாகம் முழுவதும் குழந்தைகளும்,  குடும்பங்களும் அவற்றின் சிரிப்புகளும்  நிரம்பியிருந்தன.

தந்தைகளின் தோள்களில் குழந்தைகள்;
அம்மாக்களின் கைகளில் உணவுப் பொதிகள்.

அந்த கூட்டத்துக்குள் மைதிலியும் தீப்தியும் மட்டும் தனியாக நின்றனர்.

தீப்தி சிரிக்க முயன்றாலும்... அது அவளால் முடியாதிருந்தது.

மைதிலியின் கண்கள் மட்டும் எதையோ தேடின; இரவு தூங்கச் செல்லுமுன்... மோகனிடம் பேசியவைகள்  அவளது நினைவில் வந்து போயின!

அப்போது பாடசாலை வாசலில் வந்து நின்ற காரிலிருந்து மோகன் இறங்கினார்.

வெள்ளை சட்டை… எளிய சிரிப்பு…

மைதிலி அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

அவன் மெதுவாக அவர்கள் அருகே வந்தார்.

“தீப்தி… லேட்டாயிட்டேனா?”

குழந்தையின் முகம் உடனே மலர்ந்தது!

“அங்கிள் வந்துட்டாரே!” என்று கத்திக்கொண்டு ஓடிப்போய் அவள் மோகனை வாரியணைத்துக்கொண்டதும், மைதிலியின் கண்கள் ஈரமானது!

“நீங்க ஏன் வந்தீங்க…?” என்று அவள் மெதுவாக கேட்டாள்.

“ஒரு குழந்தை ஏமாற்றமா நிற்கக் கூடாதுன்னு தோணிச்சு... அதுதான்!" என்றான் அமைதியாக.

அந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், ஏனைய பெற்றோர்கள் கூட அவர்களை ஒரு குடும்பமாகவே நினைத்தனர்.

“தீப்தி, உங்க அப்பாவா?” என்று ஒருத்தி சிரித்தபடி கேட்டபோது…

தீப்திக்கு ஒரு கணம் முழு உலகமும் அமைதியாகிவிட்டது போலிருந்தது;
மோகன் திகைத்து நின்றான்.

ஆனால் தீப்தி எவ்வித தயக்கமின்றி பதில் சொன்னாள்!

“இல்ல… ஆனா எனக்கு அப்படித்தான்.”
அந்தச் சொல்லைக் கேட்ட நொடியில் மைதிலி அழுதுவிட்டாள்!

மோகன் மெதுவாக அவளைப் பார்த்தான்.
அவள் கண்களில் இருந்த பயம்…குழப்பம்…
அவற்றைக் கடந்து, முதல் முறையாக ஒரு 'முடிவு' தன் குழந்தையால் உருவாகிக் கொண்டிருந்ததை மைதிலி உணர்ந்தாள்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது, மழை பெய்யத் தொடங்கியது.

மூவரும் பாடசாலை மண்டபத்தின் ஓர் ஓரமாக நின்றிருந்தார்கள்.
தீப்தி கூரையிலிருந்து வழிகின்ற நீருக்கு கைகளை நீட்டி விளையாடிக் கொண்டிருந்தாள்.

மைதிலி திடீரென்று கேட்டாள்,

“மோகன்… உங்களுக்கு ஒருநாளும் பயமா இல்லையா?”

“எதுக்கு?”

“என்னைக் காதலிக்கிறதுக்கு…”

மோகன் சில நொடிகள் மழையைப் பார்த்தான்.

“பயமிருக்கு,” என்றான் மெதுவாக.

“நீங்க மறுத்துடுவீங்களோன்னு இல்ல…
நீங்க காயப் படுவீங்களோன்னுதான்.”

அவளது கண்களில் மீண்டும் கண்ணீர் தேங்கியது.

“நான்... உடைஞ்ச மனசு மோகன்…”

“தெரியும்!” என்றான் அவன்.

“அதனால்தான் கவனமா காதலிக்கிறேன்…”

மழை இன்னும் நின்றிருக்கவில்லை.
தீப்தி தண்ணீர் துளிகளைப் பிடிக்க முயன்றபடி சிரித்துக்கொண்டிருந்தாள்.
அவளது சிரிப்பு, அந்த இரு மனங்களுக்கிடையிலிருந்த கனத்தை மெதுவாக கரைத்தது.

மைதிலி மோகனைப் பார்த்தாள்.
“என்னைப் பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியும் மோகன்…
ஆனா உங்களைப் பற்றி நான் எதுவுமே தெரியாமல்தான் இருக்கேன்.”

அவன் சிரித்தான்.

“என்னைப் பற்றி தெரிஞ்சுக்க ரொம்ப எதுவுமில்ல.”

“அதுதான் பொய்,” என்றாள் அவள் முதல் முறையாக சற்றே உரிமையுடன்.

“எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்குறவங்களுக்குள்ளதான் அதிக காயமிருக்கும்.”

அந்த வார்த்தை மோகனின் முகத்திலிருந்த சிரிப்பை ஒரு நொடி அமைதியாக்கியது.

மழையை பார்த்தபடியே மெதுவாக பேச ஆரம்பித்தான்.

“நான் ஒருத்தியை காதலிச்சிருக்கேன்…”

அவள் அமைதியாக அவனை நோக்கினாள்.

“கல்லூரி நாட்கள்ல. வீட்டில சொல்லி நிச்சயதார்த்தம் வரைக்கும் போச்சு. ஆனா… ஒரு விபத்து..."

மைதிலியின் இதயம் திடுக்கிட்டது.

“அவளை காப்பாத்த முடியல.”
மோகனின் குரல் உடைந்தது.

“அதுக்கப்புறம் நான் யாரையும் காதலிக்கவே கூடாதுன்னு நினைச்சேன்.
ஏன்னா… நம்மள நம்பி வர்றவங்க எல்லாரையும் வாழ்க்கை எடுத்துடுமோன்னு பயம்.”

மைதிலி எதுவும் பேசவில்லை.
இப்போது தான் அவளுக்குப் புரிந்தது —
மோகனின் வார்த்தைகளில் ஏன் இவ்வளவு பொறுமை இருந்தது என்று.

அவன் காதலை விட இழப்பை அதிகம் அறிந்தவன்!

“அப்போ… என்னை ஏன் காதலிச்சீங்க?” மைதிலி மெதுவாகக் கேட்டாள்.

மோகன் சிரித்தான்.

“நீங்க உங்க ஒவ்வொரு பதிவுலயும் சிரிக்க முயற்சிப்பீங்க; ஆனா அந்த வார்த்தைகளுக்குள்ள இருக்கும் அழுகையை நான் பார்த்துட்டேன்.”
அவன் அவளை நேராகப் பார்த்தான்.

“வாழணும்னு நீங்க மனதுக்குள்ளால போராடுறது எனக்கு பிடிச்சிருக்கு மைதிலி.”

அந்த நொடியில்தான் அவளது கண்களில் தெரிந்த கடைசி சுவர் கூட மெதுவாக உடைய ஆரம்பித்தது!

(தொடரும்)


 


Post a Comment

0 Comments