பல மாதங்களுக்குப் பிறகு மைதிலி தனது கணவரின் அலமாரியைத் திறந்தாள்.
அதற்குள் அழகாக மடிக்கப்பட்டிருந்த சட்டைகள்… வேஷ்டிகள், கைக்கடிகாரம், கைபேசி… உட்பட அவரது வாசனை இன்னும் மங்காமல் இருந்தது!
'அவரோட சட்டையைத் தொட்டாலே போதும்... நெஞ்சுக்குள்ள அப்படியே ஏதோ ஒரு பாரம் வந்து ஒட்டிக்கும். துணியைச் மடிக்கிறதுக்காக இரண்டு கைகளாலயும் அத்தனை லேசா ஏந்தி எடுக்குறப்போ, கைகள்ல ஒரு புது வேகம் பிறக்கும். துணியோட மடிப்புகள்ல இன்னும் காயாம இருக்குற அந்த அசல் ஈரமும், அதோட அசைவும் அவரோட நினைவுகளை அப்பிடியே அச்சு அசலா அவள் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தும். இன்னக்கி அவரோட உடைகளை அத்தனை கச்சிதமாத் திரட்டி மடிச்சி வச்சாலும், மனசு முழுக்க அவரோட ஞாபகமே அலை அலையா வந்து போகுது!'
அவள் ஒரு சட்டையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு அழுதாள்.
“நான் உங்களை மறக்கல…” என்று கதறினாள்!
“ஆனா… என் மனசு மீண்டும் உயிர்க்கின்றது...நான் என்ன செய்ய?”
அந்த நேரத்தில் அவளது பார்வை அலமாரிக்குள்ளிருந்த ஒரு சிறிய குறிப்பேட்டில் மீது விழுந்தது.
அது அவளது கணவரின் கையெழுத்துக்கள் அடங்கிய ஒரு டயறி;
நடுங்கும் கரங்களால் திறந்தாள்.
இரண்டொரு பக்கங்கள் தாண்டி, இப்படி எழுதப்பட்டிருந்தது:
“நான் இல்லாத நாளில் கூட,
மைதிலி சிரிச்சுக்கிட்டே வாழணும்.
அதுதான் என்னோட காதலின் வெற்றி.”
அவள் அந்த வரிகளைப் பார்த்தவுடன் மீண்டும் கதறியழுதாள்.
அந்த இரவு முழுவதும்…
அவள் அழுதாள்; சிரித்தாள்.
மீண்டும் அழுதாள்; ஆனால் அந்தக் கண்ணீருக்கு இன்று முதல் முறையாக ஒரு விடுதலை கொடுத்துவிட நினைத்தாள்!
*
மறுநாள் காலை…
மோகனின் வீட்டின் வாசலில் யாரோ மணி அடித்த சத்தம் கேட்டது.
கதவைத் திறந்தவன் உறைந்து நின்றான்.
அங்கே மைதிலி நின்றாள்!
முகநூலில் பார்த்த அதே எளிய மங்கிய வெள்ளை நிறத்தில் மஞ்சள் நிறப் பூப்போட்ட சேலை. சேலைக்கு 'மெச்'சாகாத, இறுக்கியணிந்த நீலநிற 'பிளவுஸ்' இரண்டுக்கும் இடையில் தரிசாகக் கிடக்கும் பரந்த பகுதி... அவளது கண்களில் பதட்டம்; ஆனால் முகத்தில் ஒரு தெளிவு.
“மைதிலி…?”
அவள் கைகளை இணைத்துப் பிசைந்து கொண்டு நின்றாள்.
“உள்ள வரச் சொல்ல மாட்டீங்களா?”
மோகன் உடனே விலகி நின்றான்.
அவள் வீட்டுக்குள் வந்ததும், சில நொடிகள் எதுவும் பேசவில்லை.
பிறகு மெதுவாக தனது கைப்பையைத் திறந்து ஒரு கைபேசியை எடுத்தாள்.
திரையில் அவளது கணவரின் புகைப்படம்.
மோகன் குழப்பமாக பார்த்தான்.
“இவர் என் வாழ்க்கையில எப்பவும் முக்கியமானவர்தான்" என்றாள் மெதுவாக...
“அவரை நான் மறக்க மாட்டேன்.”
மோகன் அமைதியாக அவளையே பார்தாதுக் கொண்டிருந்தான்.
மைதிலி கண்களில் நீருடன் தொடர்ந்தாள்,
“ஆனா… அவரை நினைச்சுக்கிட்டே சாகுறதுக்கு பதிலா… அவர் ஆசைப்பட்ட மாதிரி சிரிச்சுக்கிட்டு வாழ முயற்சிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.”
மோகனின் கண்கள் மெல்லக் கலங்கின.
அவள் நடுங்கும் குரலில் கேட்டாள்:
“அந்த வாழ்க்கையில…
நீங்க என்கூட வர்றீங்களா மோகன்…?”
அந்தக் கேள்வியைக் கேட்ட நொடியில், மோகனின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் மெதுவாக வழியலானது.
பல வருடங்களாக அவன் உள்ளத்தில் அமைதியாக அடக்கிவைத்திருந்த காதல் என்ற ஒன்று... அவன் இப்போது கேட்ட அந்த ஒரு வரியில் உயிர் பெற்றது!
அவன் உடனே பதில் சொல்லவில்லை;
மெதுவாக மைதிலியருகே வந்து நின்றான்.
“நீங்க இந்த முடிவை எடுக்க எவ்வளவு போராடிருப்பீங்கன்னு எனக்கு தெரியும்" என்றான்.
“அதனால… இதுக்கு நான் அவசரமா சந்தோஷப்பட மாட்டேன்.”
மைதிலி சிரித்தபடியே அழுதாள்.
“எப்பவும் இப்படித்தான் பேசுவீங்களா?”
“எப்படி?”
“மனசை இன்னும் கஷ்டப்படுத்துற மாதிரி…”
மோகன் சிரித்தான்.
“நான் ஒரு விஷயத்தில் மட்டும் புரமிஸ் பண்றேன் மைதிலி…”
அவன் அவளது கண்களை நேராகப் பார்த்தான்.
“நீங்க கடந்த காலத்தை மறக்கணும்னு ஒரு நாளும் சொல்ல மாட்டேன்.
ஆனா… அந்த நினைவுகளால நீங்க மீண்டும் உடையாம பார்த்துக்கிறேன்.”
அந்த நொடியில் மைதிலி அவன் தோளில் சாய்ந்து அழுதாள்.
அது காதலின் தொடுதல் மட்டுமில்லை…
நீண்ட நாட்களாக சுமந்த வலியை இறக்கி வைக்கும் ஒரு மனிதனை கண்டுபிடித்த நிம்மதி!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments