Ticker

6/recent/ticker-posts

மறைந்த ஈரான் தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியின் அலுவலகங்களில் விலை உயர்ந்த கம்பளங்களுக்கு பதில் எளிய ஸிலோ விரிப்புகள் ஏன்?


பல ஆண்டுகளாக, அதிகாரப்பூர்வ கூட்டங்கள், பொது விழாக்கள் பார்க்கும் மக்கள் ஒரு கேள்வியை கேட்டு வந்தனர். இமாம் கொமேனி ஹுசைனியாவிலும், மறைந்த ஈரான் தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியின் அலுவலகங்களிலும் தரையில் விலை மதிப்புள்ள பாரசீக கம்பளங்கள் இல்லை. அதற்கு பதிலாக நீல நிறமும் வெள்ளை நிறமும் கொண்ட எளிய ஸிலோ தரை விரிப்புகள் போடப்பட்டிருந்தன. ஏன் என்று பலர் யோசித்தனர்.

பெய்த்-இ ரஹ்பாரி என்று அழைக்கப்படும் இந்த இடம், 1989 முதல் 2026 பிப்ரவரி 28 ஆம் தேதி வான்வழித் தாக்குதலில் சேதமடையும் வரை கமேனியின் உத்தியோகபூர்வ வீடு, அலுவலகம் மற்றும் முக்கிய பணியிடமாக இருந்தது.

இந்த விஷயத்தை நெருக்கமாக அறிந்தவர்கள் கூறுவது என்னவென்றால், ஸிலோ பயன்படுத்தியது சிக்கனமாக இருக்க வேண்டும் என்று மட்டும் அல்ல. பாரம்பரிய ஈரானிய கைவினைஞர்களை ஆதரிக்க வேண்டும், நூற்றாண்டுகள் பழமையான நெசவு தொழிலை காப்பாற்ற வேண்டும், உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் மத்திய பகுதிகளில் பாரம்பரியமாக செய்யப்படும் ஸிலோ என்பது கையால் நெய்யப்படும் பருத்தி விரிப்பு. இது நீண்ட நாள் நீடிக்கும், பராமரிப்பதும் எளிது. எனவே நீண்ட காலமாக மசூதிகள், மதப் பள்ளிகள், மக்கள் கூடும் இடங்களில் இதுதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த முடிவுக்குப் பின்னால் இருக்கும் கதை

இந்த கதை நீண்ட நாள் வெளியில் சொல்லப்படாமல் இருந்தது.

ஈரானிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் அப்பாஸ் மவ்ஸூன் கூறும் விவரம் இது: 

பக்தர்களும் நன்கொடையாளர்களும் பல விலை உயர்ந்த கம்பளங்களை கொடுத்து வந்தனர். அவற்றை ஹுசைனியாவிலும் தலைவர் அலுவலகத்திலும் பயன்படுத்தும்படி கேட்டனர். ஆனால் கமேனியோ அந்த கம்பளங்களை அங்கு பயன்படுத்த வேண்டாம் என்று தொடர்ந்து சொல்லி வந்தார்.

ஒரு முறை அவர் கவனிப்பாரா என்று சோதிக்க ஒரு கம்பளத்தை ஹுசைனியாவின் ஒரு மூலையில் விரித்து வைத்தனர். உள்ளே வந்த அவர் உடனடியாக அதைப் பார்த்து "இது ஏன் இங்கே?" என்று கேட்டார். "இது நன்கொடையாக கிடைத்தது, எங்களுக்கு செலவு ஒன்றும் இல்லை" என்று சொன்னார்கள். உடனே அவர் "இது போன்ற விலை உயர்ந்த கம்பளங்களை எல்லாம் மசூதிகள், ஹுசைனியாக்கள், பிற வழிபாட்டு இடங்களுக்கு கொடுத்து விடுங்கள். இங்கே முன்பு போட்டிருந்த நீல வெள்ளை ஸிலோ விரிப்புகள் அப்படியே இருக்கட்டும்" என்று உத்தரவிட்டார்.

தொழிலை காப்பாற்ற எடுத்த முயற்சி

கமேனியை நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்: 

பல தலைமுறையாக ஈரானிய கைவினைஞர்கள் இந்த ஸிலோ நெசவு தொழிலை செய்தே தங்கள் குடும்பத்தை காப்பாற்றி வந்தார்கள். இந்த தொழிலுக்கு தேவையான ஆதரவு கிடைக்காமல் போனால், ஒரு பாரம்பரிய தொழில் மட்டும் போகாமல் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமும் போய்விடும்.

தேசிய தயாரிப்புகளை ஆதரிப்பது வெறும் பேச்சு மட்டும் அல்ல, முதலில் நாமே செயல்பட்டு காட்ட வேண்டும் என்று அவர் நினைத்தார்.

யாஸ்த் மாகாணத்தில் கிடைத்த பதில்

யாஸ்த் மாகாணத்திற்கு சென்றிருந்தபோது இந்த விஷயம் மேலும் தெளிவானது. உள்ளூர் மக்களை சந்தித்தபோது ஒரு ஸிலோ நெசவாளர் "எங்கள் தொழிலுக்கு போதுமான ஆதரவு இல்லை" என்று குறை சொன்னார்.

அதற்கு கமேனி பதில் சொன்னது: "அரசு உத்தரவு போட்டு மக்களை ஸிலோ வாங்கச் சொல்ல முடியாது. ஆனால் நாம் முன்மாதிரியாக இருந்தால் மக்களே விரும்பி வருவார்கள்" என்று. அதனால்தான் அவர் தனது வீடு, அலுவலகம், ஹுசைனியா அனைத்திலும் ஸிலோ விரிப்புகளை போட முடிவு செய்தார். தான் முதலில் பயன்படுத்தினால் பிறரும் பின்பற்றுவார்கள் என்று அவர் நம்பினார்.

மீண்டும் உயிர் பெற்ற தொழில்

அதன் பிறகு அதிகாரப்பூர்வ புகைப்படங்களில் நீல வெள்ளை ஸிலோ விரிப்புகள் அதிகம் வந்தன. மக்கள் கவனம் முழுவதும் இந்த பாரம்பரிய விரிப்பு மீது திரும்பியது. மசூதிகள், கல்லூரிகள், தனி நபர்கள் என அனைவரும் ஸிலோ வாங்க ஆரம்பித்தனர். குறிப்பாக யாஸ்த் மாகாணத்தைச் சேர்ந்த மெய்போத் நகரத்தின் விரிப்புகளுக்கு பெரும் தேவை வந்தது.

முன்பு கிட்டத்தட்ட மறந்து போன இந்த தொழில் இப்போது மீண்டும் செழித்து வருகிறது. பல வாடிக்கையாளர்கள் "தலைவர் அலுவலகத்தில் பயன்படுத்தும் அதே ஸிலோ தான் எங்களுக்கும் வேண்டும்" என்று கேட்கிறார்கள் என்று மூத்த நெசவாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

ஸிலோ பற்றி சிறிய விவரம்

ஸிலோ என்பது ஈரானின் வறண்ட மற்றும் விவசாய பகுதிகளில் செய்யப்படும் பருத்தி விரிப்பு. கையால் நெய்யப்படும் இதற்கு மெய்போத் நகரம் மிகவும் பிரபலம்.

விலை உயர்ந்த பட்டு, கம்பளி விரிப்புகளை விட இது மிக எளியது. நீண்ட நாள் நீடிக்கும், பயன்படுத்தவும் எளிது. பொதுவாக சதுரம், செவ்வகம் போன்ற எளிய வடிவங்களிலும், குறைவான வண்ணங்களிலும் தான் செய்வார்கள். நீலமும் வெள்ளையும் தான் மிகவும் பிரபலமான நிறங்கள்.

கல்ஹின்னை மீஹன் 

 


Post a Comment

0 Comments