
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையில் கணினி அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கான மும்முரம் மற்றும் போட்டி கணிசமாகக் குறைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் பறிபோகலாம் என்ற அச்சமே இதற்குக் காரணம் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் கல்வி ஆலோசகர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 'நடப்பு கல்வி ஆண்டில் கணினி அறிவியல் (சி.எஸ்.இ.), தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.), மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் (இ.சி.இ.) மற்றும் கணினி அறிவியல் சார்ந்த சைபர் செக்யூரிட்டி, ஏ.ஐ. அனலிட்டிக்ஸ் போன்ற நவீனப் படிப்புகளுக்கு மாணவர்களிடையே வழக்கம் போல் வரவேற்பு இருந்தாலும், கடந்த ஆண்டை விட அதன் வீரியம் குறைந்துள்ளது.
முன்னணித் தரம் வாய்ந்த கல்லூரிகளிலேயே கணினிப் பிரிவுகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் (மேனேஜ்மென்ட் சீட்ஸ்) இன்னும் முழுமையாக நிரம்பாமல் உள்ளன. அதே நேரத்தில், கடந்த சில ஆண்டுகளாகப் பின்னடைவைச் சந்தித்த மெக்கானிக்கல், சிவில் மற்றும் பயோமெடிக்கல் பொறியியல் படிப்புகளுக்கான தேவை இந்த ஆண்டு சற்று அதிகரித்துள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் தற்போது நிலவி வரும் ஆட்குறைப்பு மற்றும் மூத்த பணியாளர்கள் வெளியேற்றப்படும் சூழல் மாணவர்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக அனுபவம் மற்றும் 50 வயதைக் கடந்த ஐ.டி. ஊழியர்கள் இதுவரை கணிசமான ஊதியம் பெற்றுவிட்டதால் அவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், புதிதாகப் படிப்பை முடித்து வெளியேறும் இளநிலைப் பட்டதாரிகளின் (பிரெஷர்ஸ்) வேலைவாய்ப்புச் சூழல் தற்போது சவாலாக மாறியுள்ளது.
இனிவரும் காலங்களில் வெறும் பட்டப்படிப்பு சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு ஐ.டி. துறையில் வேலை பெற முடியாது. தனித்திறன், கூடுதல் தகுதிகள், சர்வதேச அளவிலான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல் மற்றும் புதிய தொழில்நுட்ப மாதிரிகளை உருவாக்குபவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன. இதனால், கல்லூரிகள் தங்களது மாணவர்களை வளாக நேர்காணலுக்கு (பிளேஸ்மென்ட்) தயார் படுத்தும் நோக்கில், வழக்கமான வகுப்புகளுக்குப் பிறகு இரவு 8 மணி வரை சிறப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கத் தொடங்கியுள்ளன.
துணை மருத்துவப் படிப்புகளுக்கான (அலைடு ஹெல்த் சயின்ஸ்) கட்டணங்கள் இந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களுக்கான கட்டணம் 55,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் என்ற அளவிலேயே நீடிக்கிறது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான 25,000 ரூபாய் கல்வி உதவித்தொகை சலுகையும் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 5,000 மாணவர்கள் என மொத்தம் 2.30 லட்சம் பேர் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
nakkheeran

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments