Ticker

6/recent/ticker-posts

ராகுல் காந்திக்கு மூக்கில் கசிந்த ரத்தம்... டெல்லி போராட்டத்தில் பரபரப்பு! - என்ன நடந்தது? | Rahul Gandhi


நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாகவும், அவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், பிரதமர் இல்லம் அருகே போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி நேற்று முன்தினம் பேரணி சென்றபோது, காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காயமடைந்து சிகிச்சை பெறும் மாணவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இதே போன்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவும் காயமடைந்த மாணவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால் 2ஆவது நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கின. அதனைத் தொடர்ந்து, பிரதமர் இல்லம் நோக்கி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் நேற்று மாலை பேரணியாக சென்றனர். ராஜாஜி மார்க் பகுதியில் இருந்து கல்யாண் மார்க் வரை பேரணியாக சென்ற அவர்கள், பிரதமர் மோடியின் இல்லம் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது, நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் தொடங்கிய 20 நிமிடங்களில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், களத்துக்கு வந்து ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது, போராட்டத்தைக் கைவிடுமாறு ராகுல் காந்தியை அவர் கேட்டுக்கொண்டார்.

பின்னர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஜிதேந்திர சிங், நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை விடுத்ததாகவும், இதுகுறித்து அரசின் உயர்மட்டத்திடம் பேசி, விவாதத்துக்கு தயார் என உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், திடீரென தனது கோரிக்கையை ராகுல் காந்தி மாற்றி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று புதிய நிபந்தனையை விதித்து வார்த்தை தவறிவிட்டதாக ஜிதேந்திர சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், கலைந்து செல்ல மறுத்து தரையில் படுத்துக் கொண்டு எதிர்ப்புக் காட்டிய ராகுல் காந்தியை 7-க்கும் மேற்பட்ட காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று பேருந்தில் ஏற்றினர். இந்த தள்ளுமுள்ளுவின் போது ராகுல் காந்தியின் மூக்கில் லேசான காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இதே போன்று, பிரியங்கா காந்தி, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் வி.டி.சதீஷன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே உள்ளிட்ட தலைவர்கள் தனித்தனி வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

வடக்கு டெல்லியில் உள்ள சத்ரசல் மைதானத்திற்கு (Chhatrasal Stadium) ராகுல் காந்தி அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே, மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பிரியங்காவை அவரது தாயாரும், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தி சந்தித்தார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இரவு 9 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, ராகுல் காந்தி கைதைக் கண்டித்து, கர்நாடகா, ஜார்க்கண்ட், சண்டிகர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதேபோன்று தமிழ்நாட்டில், சென்னை, ஓசூர், செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்ட போதிலும், மாணவர்களின் நீதிக்கான போராட்டம் எக்காரணம் கொண்டும் ஓயாது என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

news18


 


Post a Comment

0 Comments