Ticker

6/recent/ticker-posts

எல்ல சுற்றுலாத்துறையை மேம்படுத்த ரூ.1,000 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள்


எல்ல பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவதற்காக ரூ.1,000 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இத்திட்டங்களின் மூலம் எல்ல பிரதேசத்தில் காணப்படும் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகளைத் தீர்ப்பதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 26 ஆண்டுகளாக எவ்வித புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்ததுடன், அதிகளவான சுற்றுலாப் பயணிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த எல்ல வாட்டர்போல் வீதி (Waterfall Road) தற்போது கொங்கிரீட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட இந்த வீதி மக்கள் பயன்பாட்டிற்காகவும் கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, எல்ல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் முக்கிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் பணிகளும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, ரூ.500 மில்லியன் செலவில் துன்ஹிந்த – பல்லகெடுவ – தெமோதர வீதியும், ரூ.370 மில்லியன் செலவில் எல்ல – பசறை வீதியும், ரூ.270 மில்லியன் செலவில் கந்தேகும்புர வீதியும், ரூ.59 மில்லியன் செலவில் பியரபந்தொவ வீதியும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வீதி அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்த பின்னர், எல்ல பிரதேசத்தின் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதுடன், முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கான அணுகல் வசதிகளும் மேலும் இலகுவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ல நகருக்கான புதிய சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்கள் வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மேலதிகமாக, எல்ல நகரத்தின் சுற்றுலா ஈர்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் பல புதிய திட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

எல்ல நகருக்குள் நுழைவதற்காக புதிய சுரங்கப்பாதை ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நகரத்தின் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கான நகர அணுகல் வசதிகளையும் மேலும் வினைத்திறனாக்க எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், எல்ல நகர மத்தியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (RDA) சொந்தமான சுமார் 2.5 ஏக்கர் காணியை நவீன சுற்றுலா மற்றும் வர்த்தக வளாகமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஆரம்பகட்டமாக ரூ.50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ், குறித்த காணியில் நவீன சுற்றுலா வளாகம், வர்த்தக மையம் மற்றும் கண்காட்சிக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட பிரம்மாண்ட வளாகமொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எல்ல நகரின் குப்பைப் பிரச்சினைக்கும் தீர்வு
எல்ல நகரில் நீண்டகாலமாக நிலவி வரும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான குப்பைக் குவியல் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் நகரில் காணப்படும் குப்பைக் குவியல் முழுமையாக அகற்றப்பட்டு, குறித்த பிரதேசத்தை அழகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக எல்ல பிரதேச சபையுடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், முறையான கழிவுப் பொருள் முகாமைத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், வெல்லவாய – ஆனபல்லம பகுதியில் ரூ.10 மில்லியன் செலவில் புதிய குப்பை கொட்டும் நிலையமொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், குப்பைகளை முறையாகச் சேகரித்து புதிய குப்பைத் தளத்திற்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக மேலும் ரூ.10 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எல்ல பிரதேசத்தின் வீதி, போக்குவரத்து, கழிவுப்பொருள் முகாமைத்துவம் மற்றும் சுற்றுலா உட்கட்டமைப்பு ஆகிய துறைகளை ஒருங்கிணைந்த வகையில் மேம்படுத்துவதன் மூலம், எல்லவை மேலும் கவர்ச்சிகரமான மற்றும் வசதியான சுற்றுலா மையமாக மாற்றுவதே இந்தத் திட்டங்களின் பிரதான நோக்கமாகும்.

lankatruth


 


Post a Comment

0 Comments