Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-128


வனத்திலிருந்து கனிவர்க்கங்களைத் தேடியலைந்து பறித்து வந்த ரெங்க்மாவின் பெற்றோர், அவற்றை அடுக்கிக் கொள்வதற்கான கூடையினை, கிராமத்தில் மூங்கில் மரம் கிழித்து  கூடை பிண்ணும் இடத்திற்குச் சென்று வாங்கி வந்தனர்.

பணப்புழக்கமற்ற அப்பகுதி மக்கள் காலாகாலமாக,  பகரமாகத் தம்வசமிருக்கும் பண்டமொன்றைக் கொடுத்தே தமக்குத் தேவையான பண்டத்தினைப் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் ரெங்மாவின் பெற்றோர்    தம்வசமிடமிருந்த மாமிசத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து, மூங்கிற்பிறம்புக் கூடையை  வாங்கிக்கொண்டனர்.

நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் தனது  நண்பன் இர்வினைச் சந்திக்கவேண்டுமென்ற எண்ணமும், 'செக்கோவ்'வின் கருவாக்கம் பற்றிய மகிழ்ச்சிச் செய்தியை அவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற  ஆர்வமும் செரோக்கியிடத்தில்  வரவே, ரெங்க்மாவையும் அழைத்துக்கொண்டு அவன் நகர்ப்புறம் சென்றுவர நினைத்தான்.

ரெங்க்மாவிடத்தில் தனது எண்ணத்தைத் தெரியப்படுத்திய அவன், அவள் ஆயத்தப்படும் வரை, குகைக்குள் சென்று, கல்லிடுக்கினுள் சொறுவி வைத்திருந்த அந்தப் பழங்காலத்துப் பையினை எடுத்து அதற்குள்ளிருந்த நாணயக் கட்டிலிருந்து  சில தாள்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தபோதுதான் ரெங்க்மாவின் பெற்றோர் கூடைகளைச்  சுமந்துகொண்டு, அவனது மனை முன்றலில் அடியெடுத்து வைத்தனர்.

செரோக்கியின் கைகளில்  நாணயத் தாள்களைக் கண்டதும், புதுமையான ஏதோ ஒன்றைக் கண்டுவிட்டாவர்கள்போல் அவர்கள் திகைத்து நின்றனர்!

மிரண்டுபோய் நாணயத்தாள்களையே புதினமாகப் பார்த்துக் கொண்டிருந்த  ரெங்க்மாவின் பெற்றோருக்கு அதன் ரகசியத்தை மறைக்க விரும்பாத செரோக்கி, அவற்றை அவர்களின்  கைகளில் கொடுத்தான்.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments