
'மனாஸ்' நகரம் வழமைபோல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அதன் நெடுஞ்சாலையில் ஊர்திகள் பல ரகங்களில் கடும் வேகமாகப் போவதும் வருவதுமாக இருந்தன.
எதையோ தவறவிட்டவர்கள்போல், அதன் சாலை ஒரங்களில் மக்கள் வேகவேகமாக நடந்த வண்ணமிருந்தனர்.
நகரத்தின் இதயத்தில் வானுயர உயர்ந்து காணப்பட்ட கட்டிடங்களுக்கு மத்தியில் பல மாடிகள் கொண்ட ஒரு கட்டிடத்தில்தான் இர்வினின் அலுவலகம் அமைந்திருந்தது.
ஒருமுறை இர்வின் தனது அலுவலகத்தைக் காண்பிப்பதற்காக தன்னை அழைத்து வந்ததை நினைவுபடுத்திக் கொண்டவனாக சரியான இடத்தை இனங்கண்டுகொண்டு வந்த செரோக்கி, ரெங்க்மாவை அணைத்தபடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் வந்து நின்றான்!
அப்போதைய தருணத்தில், இர்வின் தன்னை அழைத்துக் கொண்டு கூடொன்றுக்குள் நுழைந்ததும், அது தம்மைச் சுமந்துகொண்டு வேகமாகச்சென்று ஒரிடத்தில் தரித்து நின்றதையும் செரோக்கி மறந்துவிடவில்லை.
பின்னர் அதுபற்றிக் கேட்டறிந்தபோதுதான், அது 'லிப்ட்' என்பதை செரோக்கியால் அறிய முடிந்தது.
இப்போது அந்த 'லிப்டி'ன் அருகில் ரெங்க்மாவோடு அவன் வந்து நின்றபோது, அஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஒருவன் அவர்களை அதற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினான். அவர்களிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்த அவன், அதன் பின்னர்... தன்னைத் தொடர்ந்து வரும்படி அவர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்த 'ரிசப்சன்' வரைக்கும் சென்றான்.
ரிசப்சனை அழங்கரித்துக் கொண்டிருந்த அந்த அழகிய மங்கையைக் கண்டதும் செரோக்கிக்கு, தான் இர்வினோடு சேர்ந்து உந்துருளி பழகிய காலத்தில், 'ஸ்ரோபெர்ரி' பருகிய இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த மங்கைதான் நினைவில் வந்துபோனாள்!
இந்த 'ரிசப்சன்' இளமங்கை தான் சந்திக்கவந்த நபரின் பெயரைக்கேட்டு அது இர்வின்தான் என்று உறுதி செய்துகொண்டவளாக, 'இன்டகம்மி'ல் இர்வினை அழைத்து அவனைக் காண வந்திருக்கும் சோடிப்புறாக்களின் பெயர்களைக் குறிப்பிடவே, உடன் அனுப்பிவைக்கும்படி இர்வினிடமிருந்து கிடைத்த பணிப்புரையை சிரமேற்கொண்டு செயற்படுத்த வினைந்த அந்த அஜானுபாகுவான தோற்றம் கொண்டவன், செரோக்கி தம்பதியினரை மரியாதையுடன் 'லிப்ட்' வரை அழைத்துச் சென்று, 'லிப்ட்' வரும் வரைக்கும் சற்று நேரம் காத்து நின்று, அது வந்ததும் அவர்களை அதற்குள் நுழையச் செய்து, ஏழாம் இலக்கத்தை அழுத்தி விட்டான்!
'லிப்ட்' எனப்படும் அந்த இரும்புக்கூடு அசுர வேகத்தில் மேல் நோக்கி நகர்ந்து, மெதுவாக ஏழாவது இலக்க மாடியில் நின்றதும், அலுவலக வாயிலில் தனது நண்பனின் வரவுக்காகக் காத்திருந்த இர்வின் செரோக்கியைக் கட்டிப்பிடித்து ஆரத்தழுவிக் கொண்டான்.
கொஞ்ச நேரத்தில் தழுவல்களிலிருந்து விடுபட்டுக்கொண்ட நண்பர்கள், இணைந்தவாரே முன் சென்றுகொண்டிருக்க, ரெங்க்மா அவர்களைத் தொடரலானாள்.
தன் 'கெபினு'க்குள் நுழைந்ததும் இர்வின், அவர்கள் இருவரையும் அமரச்செய்துவிட்டு, 'இண்டகம்மி'ல் இரண்டு 'கப்பச்சோனா' கொண்டு வரும்படி பணித்தான்.
வனப்பகுதியில் கிடைக்காத இந்த அரிய பானத்தை
செரோக்கியும் ரெங்க்மாவும் விரும்பி அருந்தியதை அவனது பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்தபோது, இர்வின் கவனித்து வைத்திருந்தான்.
சிறு பிராய முதல் இணைந்து பழகிய 'மெங்கோ' நண்பர்களாகிய அவர்கள், ஒவ்வொருவர் பற்றியும் பரஸ்பரம் அறிந்தும் தெரிந்தும் வைத்திருந்தார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை!
பணியாள் கொண்டுவந்து தந்த அந்தக் கோப்பிப் பானத்தை செரோக்கி சுவைத்துப் பருகியவாறு, இதமான அதன் வாசனையை நுகர்ந்து ரசித்துக்கொண்டே கடைக் கண்ணால் தன் பார்வையை ரெங்க்மாவின் பக்கமாகச் சுழலவிட்டான்!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments