
இதோ பாட்டி ஆரம்பித்துவிட்டார் கதை கூறிட...
அரண்மனை அமைதியாகக் காணப்பட்டது.
மறுநாள் வழக்கம்போல் அரசசபை கூடியது. சில முக்கியமான விடயங்கள் விவாதிக்கப்பட்டு, சில மணி நேரங்களுக்குள் சபை முடிவடைந்தது. அப்போது ராஜகுமாரி அங்கு இல்லை. தனது தோழிகளுடன் பூங்காவனத்திற்கும் கனித் தோட்டத்திற்கும் சென்று, சுற்றிப் பார்த்து மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார்.
சபை கலைந்ததும் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர். ஆனால் மகாராணியும் மந்திரியாரும் மட்டும் அங்கேயே அமர்ந்து முக்கியமான ஒரு விடயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினர்.
அந்த நேரத்தில் படைத்தலைவன் வந்து வணங்கி,"மகாராணி அவர்களே, நமது தெற்குப் புறத்து தென்னாட்டு இளவரசி தங்களைச் சந்திக்க விரும்புவதாகவும், அதற்கான நாளை தாங்களே குறிப்பிட்டு அனுப்புமாறும் ஓலை அனுப்பியுள்ளார்," என்றான்.
அதைக் கேட்ட மகாராணி அதிர்ச்சியடைந்தார்.
"என்னைச் சந்திக்க அனுமதி கேட்டார்களா? அவர்கள் எதற்காக என்னைச் சந்திக்க விரும்புகிறார்கள்? மந்திரியாரே, நம் ராஜ்ஜியத்தைத் தவறாகப் பேசி, நம்மீது போர் தொடுத்த அரசி அல்லவா அவர்? என் மன்னவரின் மனதையே கஷ்டப்பட வைத்தவர். இப்போது திடீரென்று எதற்காக வர வேண்டும்? அவர்களைச் சந்திக்க விரும்பவில்லை என்று கூறிவிடலாமா?" என்று கேட்டார்.
மந்திரி சிறிது நேரம் சிந்தித்துவிட்டு,
"வேண்டாம், அரசே. அவர்கள் வருவதைத் தடுக்க வேண்டாம். வரட்டும். ஏன் வருகிறார்கள் என்பதை அவர்கள் வந்த பிறகே அறிவோம்," என்றார்.
"நீங்கள் கூறுவதால் ஒத்துக்கொள்கிறேன், மந்திரியாரே. ஆனால் என் மனம் முழுமையாக சம்மதிக்கவில்லை. சாதாரண பிரச்சினைக்கே போர் தொடுத்த அரக்கி அல்லவா அவர்!" என்று மகாராணி தனது வெறுப்பை வெளிப்படுத்தினார்.
"புரிகிறது, அரசே. தங்களின் ஆதங்கம் நியாயமானதே. ஆனால் தாங்கள் தங்களின் ராஜ்ஜியத்தின் பெருமைக்கும், அவர்களின் பதவிக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும். ஆகையால் அழைப்பை அனுப்புங்கள்," என்றார் மந்திரி.
மகாராணியும் அதன்படி ஒரு நல்ல நாளைக் குறித்து, ஓலையைத் தயாரித்து அந்த நாட்டிலிருந்து வந்திருந்த ஒற்றனிடம் கொடுத்து அனுப்பினார்.
ஆனால் ஒரு கேள்வி மட்டும் அனைவரின் மனதிலும் சுழன்றது.
இரு நாடுகளும் கடும் போரில் மோதிய பெரும் எதிரிகள். அப்படியிருக்க, அந்த நாட்டின் இளவரசி எதற்காக இங்கு வருகிறார்?
இதே குழப்பத்துடன்தான் மந்திரியும் எழுந்தார்.
"இந்த வருகையின் உண்மையான காரணம் என்ன? மீண்டும் புதிய மிரட்டலா? இல்லை நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு வருகிறாரா?"
என்று பல கோணங்களில் மகாராணியின் மனம் சிந்தித்தது.
ஆனால் அவர்கள் நினைத்தும் பார்க்காத ஒரு காரணத்திற்காகத்தான் அந்த இளவரசி வருகிறார்...
அதை அறிந்தவுடன் மகாராணி மறுமொழி பேச முடியாமல் அமைதியாகிவிடுவார்.
(தொடரும்)
ஆர்.எஸ்.கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments