Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் (அன்வரய்யா எளிய உரை)-2

2. வான் சிறப்பு 
மழையின் சிறப்பு
1.வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

2.துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

3.விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

4.ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

5.கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

6.விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

7.நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

8.சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

9.தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

10.நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. 

2.வான் சிறப்பு மழையின் சிறப்பு

1.மழையால் உயிரினம் வாழ்கின்ற காரணத்தால் அம்மழையே அமிழ்தம் ஆகும்.

2.மழையானது உண்ண உணவினை விளைவிப்பதுடன் தானே உணவாகவும் பயன்படுகிறது.

3.மழை வராது போனால் நீர் சூழ்ந்த இவ்வுலகில் பசியானது தொடர்ந்து வருத்தும்.

4.மழைவளம் குறைந்தால் உணவு விளைவிக்கும் உழவர்கூட ஏர்பிடித்து உழ முடியாது.

5.பெய்யாமல் வாழ்வைக் கெடுப்பதும், கெட்டவர்களின் வாழ்வை வளமாக்கத் துணையாவதும் மழையே.

6.வானிலிருந்து மழைத்துளி பெய்யாவிட்டால் பூமியில் புல் நுனி கூட வளராது.

7.மழை வராமல் தவறினால் பெருங்கடலும் தன் வளம் குறைந்துவிடும்.

8.மழை தவறினால் நாளும் நடைபெறும் பூசைகளும், விழாக்களும் நடைபெறாது போகும்.

9.மழை பொழியாவிட்டால் கொடுத்தலும், தவமும் இல்லாது போகும்.

10.நீரில்லாமல் உலகமில்லை. அதுபோல மழை தவறினால் உலகில் ஒழுக்கமில்லை.
 

உரையாசிரியர்
தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர் 
தமிழ்ச்செம்மல் பல்திறன்வளர் 
இலக்கியமாமணி 
முனைவர் 
மு.க.அன்வர்பாட்சா
தமிழாசிரியர் (பணி நிறைவு)

(தொடரும்)

 


Post a Comment

0 Comments