4அறன் வலியுறுத்தல்
நற்செயல்களின் அவசியத்தை வற்புறுத்தல்

1.சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
2.அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
3.ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்.
4.மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
5.அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
6.அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
7.அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
8.வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.
9.அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.
10.செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
4.அறன் வலியுறுத்தல்
நற்செயல்களின் அவசியத்தை வற்புறுத்தல்
1.செல்வத்தையும், சிறப்பையும் தரும் அறமாகிய நற்செயல்களை விட நலம் தருவது வேறில்லை.
2.நற்செயலுக்குக் கிடைக்கும் நன்மைபோல் வேறொன்றும் இல்லை. அதை மறந்தால் வரும் தீமையைப் போல் கொடியதுமில்லை.
3.நற்செயல்களை இயன்றபோது எல்லாம் செய்தல் வேண்டும்.
4.ஒருவன் மனத்தில் குற்றமில்லாதவனாய் இருப்பதே உண்மை அறமாகும். மற்றவை எல்லாம் வெளிவேடமே.
5.பொறாமை, பேராசை, சினம், துன்பம் தரும்சொல் இந்த நான்கையும் நீக்கிச் செயல்படுவதே நற்செயலாகும்.
6.நற்செயல் புரியக் காலம் தாழ்த்தக்கூடாது. அப்படிச் செய்யும் நன்மைகள் இறக்கும் நிலையில் துணையாக நிற்கும்.
7.பல்லாக்கு தூக்குபவனையும், அதிலேறிச் செல்பவனையும் கொண்டு நற்செயல்களின் பயனை ஒப்பிடக்கூடாது.
8.நாளும் செய்யும் நற்செயல்களே ஒருவரின் வாழ்க்கை உயர்வதற்கான படிக்கல்லாக மாறும்.
9.நற்செயல்களால் மட்டுமே ஒருவனுக்கு நிலையான இன்பம் வரும். பிறவற்றால் புகழுமின்றித் துன்பமே வரும்.
10.வாழ்க்கையில் செய்யத்தக்கன நற்செயல்களே, செய்யாது தவிர்க்க வேண்டியவை பழிச்செயல்களே.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments