Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் (அன்வரய்யா எளிய உரை)-8


8.அன்புடைமை
அன்பு உடையவராக இருத்தல்

1.அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

2.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

3.அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

4.அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

5.அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.

6.அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

7.என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

8.அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
9.புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

10.அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

8.அன்புடைமை
அன்பு உடையவராக இருத்தல்

1.அன்பினை அடைத்து வைக்க இயலாது, அன்புடையவரின் கண்ணீர்த் துளிகளே அவரது அன்பைக் காட்டி விடும்.

2.தன்னலமுடையவர் அன்பில்லாதவர்களே, அன்பு உடையவர் சமுதாயத்திற்குத் தம்மை உரிமையாக்குவர்.

3.உடம்போடு உயிர் சேர்ந்த வாழ்க்கை என்பது பிற உயிர்களிடமும் அன்பு செலுத்தி வாழ்வதேயாகும்

4.அன்பு முதலில் பிறரிடம் விருப்பத்தைத் தரும். அதுவே மலர்ந்து நட்பு என்னும் பெருஞ்சிறப்பைத் தரும்.

5.அனைவரிடத்தும் அன்போடு வாழும் வாழ்க்கையே உலகில் இன்பமான வாழ்வாகும்.

6.நற்செயலுக்கு மட்டுமே அன்பு துணை என அறியாதவர்களே கூறுவர். வீரச்செயல் புரிவதற்கும் அன்பே துணையாகும்.

7.எலும்பற்ற புழுக்களை வெயில் துன்புறுத்துவது போல அன்பிலாதவர்களை அறக்கதிர்கள் சுடும்.

8.இதயத்தில் அன்பாகிய ஈரமற்ற வாழ்க்கையானது பாலைவனத்தில் பட்ட மரம் தளிர்ப்பதைப் போன்றது.

9.உடலின் உள்உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு வெளி உறுப்புகளால் ஒரு பயனும் இல்லை.

அன்பு கொண்டவரே உயிருடன் வாழ்பவர். ஏனையோர் எலும்பைத் தோல்போர்த்திய வெற்றுடல் பெற்றவரேயாவர்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments