
இந்நாட்டில் முப்பது வருடங்களாக நிலவிய கொடும் யுத்தத்திற்கு காரணகர்த்தா யாரென்று நினைக்கிறீர்கள்? சாதாரண சிங்கள மக்களா அல்லது சாதாரண தமிழ் மக்களா? நிச்சயமாக, இவர்கள் கிடையாது.
சிங்கள மக்களுக்கு தமிழர்களைத் தமது எதிரிகளாகவும், தமிழர்களுக்கு சிங்கள மக்களைத் தமது எதிரிகளாகவும் காண்பித்து, சிங்களப் பேரினவாத மற்றும் தமிழினவாத அரசியல் மூலம் அதிகாரத்தையும் பதவிகளையும் கைப்பற்றி, அவற்றைத் தக்கவைத்துக்கொண்ட பிரபுத்துவ வர்க்கமே இதற்குக் காரணமாகும்.
பேரழிவை ஏற்படுத்திய யுத்தத்தில் தமிழ் – சிங்கள பிரபுத்துவ வர்க்கம் யுத்தக் களத்தில் இருந்து ஒதுங்கி நின்று, தம்மைப் பாதுகாத்துக்கொண்டு, சூட்டைக் கிளப்பும் வீர வசனங்களைப் பேசிக்கொண்டிருந்தது. அதேவேளை, சாதாரண தமிழ் – சிங்கள உழைக்கும் மக்கள் ஆயுதமேந்திப் போராடி தம்மையே அர்ப்பணித்தனர். தம் வர்க்க விடுதலைக்காக ஒன்றுபட்டு நின்றிருக்க வேண்டிய மக்கள், தம்மை ஆண்டாண்டு காலமாக அடக்கியாண்ட பிரபுத்துவ வர்க்கத்தின் தேவைக்காகப் பிரிந்து நின்று தங்களுக்குள் மோதிக்கொண்டனர்.
இந்த மோதலில் பாரிய அழிவைச் சந்தித்தது தமிழ் – சிங்கள உழைக்கும் மக்களாக இருந்ததோடு, அவர்களைக் காண்பித்து இன்னமும் அரசியல் இலாபம் ஈட்டும் நரித்தனத்தில் தமிழ் – சிங்கள பிரபுத்துவ அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருகின்றமை கண்கூடு.
2024ஆம் ஆண்டின் கடைப் பகுதியில் இலங்கையின் பாரம்பரிய அரசியலே கிடுகிடுத்துப் போனது. உற்று நோக்கினால், இப்பாரம்பரிய அரசியல் கட்சிகளின் கூறுகளாகவும் உரிமையாளர்களாகவும் விளங்கியது பிரபுத்துவ வர்க்கமே. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இக்கூட்டத்தைத் தோற்கடித்து, உழைக்கும் மக்களின் ஓர் அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்தது. அன்று தொட்டு இன்று வரை திசைகாட்டியின் ஆட்சியும் நாடும் வலிமைபெற்று எழுந்து வருவதுடன், தோல்வியுற்ற பிரபுத்துவ அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக சூனியமாகும் நிலையை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
அதாவது, கடந்த காலங்களில் மக்களை ஈர்த்து வைத்துக்கொள்ளக் கையாண்ட தந்திரோபாயங்கள் பலவும் காலாவதியாகியுள்ளதால், அவர்கள் நாளுக்கு நாள் மக்களின் செல்வாக்கை இழந்து வருகின்றனர். அச்சுறுத்தலுக்கு அடிபணியாத மற்றும் விலைபோகத் தயாரில்லாத மக்களிடம் இருந்து இந்த அரசியல் வியாபாரிகள் அந்நியப்பட்டுவிட்டார்கள். சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகம் என்ற ஒட்டுமொத்த அரசியல் களங்களின் நிலைமையும் இதுவாகத்தான் இருக்கிறது.
இந்த அரசியல்வாதிகளால் மக்களிடம் சென்று, “நாங்கள் நல்லவர்கள்! வல்லவர்கள்!” என்றோ இனிமேல் வாக்குக் கேட்க முடியாது. அதுபோல, எஜமானத்தனத்தைக் காண்பித்து மண்டியிட வைக்கவும் முடியாது. ஏனெனில், பழைய அரசியல் கலாசாரத்தை திசைகாட்டி அரசாங்கம் தகர்த்து வருவதுடன், கௌரவமான வாக்காளர்களையும் உருவாக்கியிருக்கிறது. தற்போது, பெரும்பாலான மக்கள் தமது ஆணையின் பெறுமதியை உணர்ந்துள்ளனர். அதிகார இருக்கையென்பது மக்களுக்கு உரித்தானது என்பதைப் புரிந்துகொண்டுள்ளார்கள்.
அதனால்தான், மன்னர்களைப் போல தங்களை அடையாளப்படுத்திய ராஜபக்ஸ குடும்பம் உள்ளிட்ட பழைய பிரபுத்துவ அரசியல் குடும்பங்கள் தற்போது செல்லாக்காசாகிப் போயுள்ளனர். அதிகாரம் தம் வர்க்கத்தை விட்டு பறிபோகாது என்ற மமதையில் ஆடிய ஆட்டத்திற்கெல்லாம், மக்கள் அரசாங்கத்தின் மூலம் நல்ல பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் இடம்பெற்ற ஒட்டுமொத்த குற்றச்செயல்களுக்கும் தண்டனை வழங்கும் படலம் சுயாதீன நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
ராஜபக்ஸ குடும்பத்தை யுத்தத்தை விற்றுத் தின்று ஏப்பம் விட்டவர்கள் என்றே சொல்லலாம். யுத்த வெற்றியை இவர்கள் குடும்பச் சொத்தாக்கியிருந்தார்கள். தமிழ் மக்களை சிங்கள மக்களிடம் வேண்டத்தகாதவர்களாகக் காண்பித்தனர். கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் வென்றபோது, “தான் சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியாகினேன்” என்று பகிரங்கமாகத் தெரிவித்ததையும் கவனிக்க வேண்டும்.
இவ்வாறான பிரிவினை அரசியலை மேடைபோட்டுக் காண்பித்து, திரைமறைவில் ஊழல் மோசடியில் ஈடுபட்டனர். யுத்தம் நடந்துகொண்டிருந்தபோதுதான், 2004ஆம் ஆண்டில் ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை முறைகேடும் நடந்தேறியது. 2006ஆம் ஆண்டில் மிக்-27 மோசடியும் இடம்பெற்றது.
சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போன, யுத்தத்தை விற்றுப் பிழைத்த ராஜபக்ஸ குடும்பத்தினர், சைக்கிள் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்ததாகக் கூறப்படுகிறது. இதை இன்னும் விரிவாக, “ராஜபக்ஸாக்கள் கஜேந்திரகுமாரை இயக்குவதாக” யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயரும் சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன், 2024 ஜனவரி மாதத்தில் உதயன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அவர் இதுகுறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “ராஜபக்ஸ குடும்பத்திற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இருந்த உறவு பற்றி எனக்கு வெளிப்படையாகத் தெரியும். நிருபமா ராஜபக்ஸவின் கணவர் திருக்குமார் நடேசனை சந்திக்க வேண்டும் என்று சொன்னார். அவர் யாழ்ப்பாணம் வருவார். கஜேந்திரன் அண்ணன் என்னிடம் கேட்பார், நீ வாரியா, போவோம் என்று” எனக் குறிப்பிட்டிருந்தார்.
2021ஆம் ஆண்டு வெளியான “பெண்டோரா பேப்பர்ஸ்” ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் (ICIJ) விசாரணையில், முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஸவும் அவரது கணவர் திருக்குமார் நடேசனும் இரகசிய வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் (offshore companies and trusts) மூலம் ஏறக்குறைய 18 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சொத்துக்களை வைத்திருந்ததாக ஆவணங்கள் வெளிப்படுத்திய விடயம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அவற்றில் லண்டன் மற்றும் சிட்னியில் உள்ள ஆடம்பர குடியிருப்புகள், கலைப் பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்ட சொத்துக்கள் அடங்கியிருந்தன. 1990களில் நிறுவப்பட்ட “Rosetti Ltd.” உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் லண்டன் மற்றும் சிட்னி சொத்துக்கள் வாங்கப்பட்டதாகவும், 2018ஆம் ஆண்டு 31 கலைப் படைப்புகள், கிட்டத்தட்ட 1 மில்லியன் டொலர் பெறுமதியானவை, சுவிட்சர்லாந்தின் Geneva Freeportக்கு மாற்றப்பட்டதாகவும் ICIJ தெரிவித்தது.
மேலும், 2011ஆம் ஆண்டில் நடேசனின் மொத்த சொத்து 160 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகம் என அவரது ஆலோசகர் ஒருவர் குறிப்பிட்டிருந்த ஆவணமும் இருப்பதாக ICIJ தெரிவித்தது. இந்த விபரம் வெளிவந்திருந்த கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. ஆனால், பின்னர் எவ்வித தகவலும் வெளிவரவில்லை.
இதற்கு முன்னரே நிரூபமா ராஜபக்ஸ மற்றும் திருக்குமார் நடேசன் பற்றிய விபரம் 2012ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது. அதாவது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உறவினர் என்ற அடிப்படையில், இந்தியாவுக்கு அவர்கள் சென்றிருந்தபோது பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மஹிந்த ராஜபக்ஸவின் தகப்பன் டி.ஏ. ராஜபக்ஸவின் உடன்பிறந்த சகோதரரான ஜோர்ஜ் ராஜபக்ஸவின் மகள்தான் நிரூபமா ராஜபக்ஸ ஆவார். இந்த ராஜபக்ஸ குடும்பத்துடன்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். அவர் மஹிந்த ராஜபக்ஸவின் மச்சான் திருக்குமார் நடேசனை அடிக்கடி அரியாலையில் உள்ள அவரது வீட்டில் வைத்தும் சந்தித்து வந்திருக்கிறார். ராஜபக்ஸர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டவுடன் முதலில் நாட்டை விட்டு தப்பிச் சென்றவரும் இவர்தான் என்று வி. மணிவண்ணன் குறிப்பிடுகிறார்.
அத்தோடு, 2019 ஜனாதிபதித் தேர்தலின்போது, “தேர்தலைப் புறக்கணிக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்ததாகவும்” அவர் குறித்த நேர்காணலில் குறிப்பிடுகிறார்.
இவ்வாறான பின்னணியைக் கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்தான் தன்னை ஒரு அதிதீவிர போக்குடைய தமிழ்த் தேசிய அரசியல்வாதியாகக் காண்பித்து, வடக்கில் அரசியல் காய்களை நகர்த்தி வருபவராக இருக்கிறார்.
ராஜபக்ஸ உள்ளிட்ட முந்தைய ஆட்சியாளர்கள் அரசியல் அனாதைகளாக மாறிப்போயிருப்பதோடு, நிராயுதபாணிகளாகவும் வலுவற்று நிற்கின்றனர். சட்டத்தின் பிடியில் சிக்குண்டு திணறிக்கொண்டிருக்கும் இவர்களுக்கு தப்பிப்பதற்கான ஒரே வழியாக இருப்பது, நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு பிரபுத்துவ ஆட்சியை மீளவும் அதிகார பீடமேற்றுவதாகும். அதற்காக, காலங்காலமாகக் கையாண்டு வந்த நரித்தந்திரத்தை இப்போதும் பயன்படுத்த இவர்கள் முனைகிறார்கள். அந்தத் தந்திரம்தான் மக்களைப் பிளவுபடுத்தி, மோதலை உருவாக்கி, அழிவுகளை ஏற்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும். தற்போது, இந்த முயற்சியில்தான் தோல்வி கண்டவர்கள் அல்லது மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.
அதாவது, தெற்கிலுள்ள பேரினவாதத் தரப்பும் வடக்கிலுள்ள தமிழினவாதத் தரப்பும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துணைபோய், மக்களைப் பிளவுபடுத்துவதற்குப் படாதபாடு படுகின்றன.
நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படப் போவதை அறிந்து மொட்டுக் கட்சி பேரினவாதிகள் அநுராதபுரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த அதே நாளில், வடக்கிலும் தமிழ்த் தேசியவாதிகளால் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வெடுக்குநாறிமலை விவகாரத்தைக் குறிவைத்து, புத்தர் சிலையைப் பிரதிஷ்டை செய்ய ஒரு அணி புறப்பட்டுச் சென்றிருந்தபோது, யாழ்ப்பாணத்தில் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அணியும் வருகை தந்திருந்தது. தையிட்டி விகாரை விவகாரமும் இதற்கு இணையானதாகும்.
இப்பிரச்சினைகள் யாவும் கடந்த ஆட்சிக் காலங்களில் உருவாக்கப்பட்டவையாகும். ஆனால், இவ்வாறான ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கும் காரணம் திசைகாட்டி அரசாங்கம்தான் என்று நிறுவ இருதரப்புமே முயற்சித்து வருகின்றன.
தெற்கிலிருந்து வடக்கிற்கு பௌத்த வழிபாட்டுக்காக ஒரு குழு புறப்பட்டுச் சென்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றால், அது பௌத்த மதவாதக் கும்பலாகும் என்று சிங்கள மொழியிலேயே விமர்சிக்கும் தைரியம், பெயரளவு சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு மாத்திரமே இருந்திருக்கிறது. வேறெந்த ஜனாதிபதியும் இவ்வாறு மனசாட்சியுடன் பிரச்சினையை அணுகியிருக்கவில்லை.
இவ்வாறான நிலைமையில், வடக்கில் தமிழினவாத அரசியல்வாதிகள் தேசிய மக்கள் சக்தியைப் பேரினவாத சக்தியாகவும், தெற்கில் சிங்களப் பேரினவாதிகள் அதே அரசாங்கத்தை “டயஸ்போரா புலிகளின் அடியாட்கள்” என்றும் விமர்சிக்கின்றனர். ஆனால், மணிவண்ணன் சுட்டிக்காட்டியது போல, மேற்கண்ட இரு தரப்பினரும்தான் அந்நியோன்னியமான உறவைப் பேணி வந்திருக்கின்றனர்.
திசைகாட்டி ஆட்சி மலர்வதற்கு முன்பு வடக்கில் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் மாவீரர் தினத்தையோ, நினைவேந்தல் நிகழ்வுகளையோ முன்னெடுக்க முடியாத நிலை இருந்தது. ஆனால், அநுர அரசாங்கம் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் உரிமை சகலருக்கும் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு, அதற்குப் பாதுகாப்பும் வழங்கி வருகிறது.
இவ்வாறான நிலையில்தான், திலீபனின் சிலையை வைத்து தமிழ் மக்களின் இரத்தத்தைச் சூடாக்கும் அரசியலை முன்னெடுக்கும் திட்டம் அரங்கேறியிருக்கிறது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருந்த சமூக செயற்பாட்டாளர் ந. பொன்ராசா, “திலீபனினதும், மாவீரர்களினதும் தியாகத்தை வைத்து அரசியல் செய்வதை அனைவரும் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று சாடியிருந்தார்.
உருவச் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் விளக்கமளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எம்.யூ. வூட்லர், “இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கும், நாட்டில் மீண்டும் யுத்த மனநிலையை உருவாக்கக்கூடிய சூழ்நிலைகளைத் தடுப்பதற்கும் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது” என்று குறிப்பிட்டார்.
இதேபோன்றுதான், திருகோணமலையில் ராஜபக்ஸ நிக்காயவைச் சேர்ந்த பிக்குமார் இரவோடு இரவாக கடற்கரையில் புத்தர் சிலையைப் பிரதிஷ்டை செய்ய முயன்றபோதும், பொலிஸார் தலையிட்டு குறித்த சிலையை எடுத்துச் சென்றிருந்தனர்.
எனவே, எவ்விதப் பிரிவினைவாதத்திற்கும் இடங்கொடுக்காமல் அரசாங்கத் தரப்பும் பொலிஸ்துறையும் செயலாற்றி வரும் நிலையில், வடக்கில் தமிழினவாதமும் தெற்கில் சிங்களப் பேரினவாதமும் தலைவிரித்தாடப் பார்க்கிறது. இந்த அழிவுசக்தி பற்றி மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்பதோடு, மக்கள் மத்தியில் ஐக்கியத்தை வலுப்படுத்துவதற்கு பிரிவினைவாதக் கும்பலை ஒழித்துக்கட்டவும் வேண்டும்.
இதுபற்றி நன்குணர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, “பல்வேறு சிறுசிறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டில் மீண்டும் இனவாதத்தைத் தூண்ட முயற்சிக்கப்படுகிறது. ஆனால், எமது ஆட்சியில் இனவாதத்துக்கு இடமளிக்கப்படமாட்டாது” என்று ஆணித்தரமாகத் தெரிவித்திருக்கின்றமை கவனிக்கத்தக்கது.
அதேவேளை, இனவாதம் மற்றும் வன்முறையைத் தூண்டும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. “குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மேலும் பல சட்டமூலங்கள் தயாரிக்கப்படும்” என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்த கருத்தும் இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கத்தக்கது.
சிறுபான்மை மக்களுக்கு எதிரான பெரும்பான்மையினரின் இனவாதமோ அல்லது பெரும்பான்மைக்கு எதிரான சிறுபான்மையினரின் இனவாதமோ முற்போக்கானதோ, ஆரோக்கியமானதோ கிடையாது. இதன் ஆணிவேர் நறுக்கப்பட்டாக வேண்டும்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments