Ticker

6/recent/ticker-posts

கடலோடு போராடிய வாழ்க்கை!


கடற்கரையோரத்தில் இருந்த ஒரு சிறிய மீனவக் கிராமத்தில் ராசா என்பவர் தனது மனைவி அம்மு, மகள் வடிவு, மகள் மகேஷ்வரி ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் கடலை நம்பியே இருந்தது. ராசா தினமும் அதிகாலை படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவார். அந்த வருமானத்தில்தான் குடும்பத்தின் அன்றாட உணவும், வீட்டுச் செலவுகளும் நடந்தன.

சில வாரங்களாக ராசா கடலுக்குச் செல்லாமல் இருந்தார். காரணம், படகு முதலாளியிடம் சம்பளத்தை உயர்த்தித் தரும்படி கேட்டபோது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டிருந்தது. அந்த விஷயம் வீட்டில் உள்ளவர்களுக்கு எதுவும் தெரியாது.

வருமானம் இல்லாததால் வீட்டில் வறுமை அதிகரித்தது. பல நாட்களில் ராசா வெறும் கையுடன் வீடு திரும்புவார். அன்று வீட்டில் அடுப்பு எரியுமா என்பதே கேள்வியாகிவிடும்.

ஒருநாள் மாலை ராசா வலையுடன் வீட்டிற்குத் திரும்பினார். அவரது முகத்தில் சோர்வு தெரிந்தது.

“என்னங்க, இன்று மீன் கிடைக்கலையா?” என்று அம்மு கேட்டாள்.

“இல்லை… இன்று கிடைத்த மீன்களும் அதிகமாக இல்லை,” என்றார் ராசா.

அதை கேட்ட வடிவு அமைதியாக தனது பள்ளிப் புத்தகத்தை மூடினாள்.

“அப்பா… என்னால் இனிமேல் பள்ளிக்குப் போக முடியாது போலிருக்கிறது. நான் பள்ளிக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்து உங்களுக்கு உதவுகிறேன்,” என்றாள்.

அந்த வார்த்தைகள் ராசாவின் மனதை உடைத்தன.

“இல்லை கண்ணு. நம்ம குடும்பத்தில் வறுமை இருக்கலாம். ஆனால் உன் கனவுகளுக்கு மட்டும் வறுமை இருக்கக் கூடாது. நீ தொடர்ந்து படிக்க வேண்டும்,” என்றார்.

அடுத்த நாள் அதிகாலையில் ராசா வழக்கத்தைவிட முன்பாகவே கடலுக்குச் செல்லத் தயாரானார். வானம் மேகமூட்டமாக இருந்தது.

மற்ற மீனவர்கள், “இன்று கடலுக்குப் போகாதே ராசா… கடல் சரியில்லை,” என்று எச்சரித்தனர்.

ஆனால் குடும்பத்தின் நிலையை நினைத்த ராசா, எதற்கும் அஞ்சாமல் தனது படகைக் கடலுக்குள் செலுத்தினார்.

பல மணி நேரம் கடலோடு போராடிய பிறகு, அவரது வலையில் எதிர்பார்த்ததைவிட அதிகமான மீன்கள் சிக்கின. மகிழ்ச்சியுடன் அவர் கரைக்குத் திரும்பினார்.

அப்போது முதலாளி கரையில் நின்றுகொண்டிருந்தான்.

“முதலில் என் பணத்தை கொடுத்துவிட்டு நீ போ,” என்று கடுமையாகக் கூறினான்.

ராசா எதுவும் பேசவில்லை. தான் பிடித்த மீன்களை முதலாளியிடம் கொடுத்துவிட்டு, வெறுங்கையுடன் வீட்டிற்குத் திரும்பினார்.

வீட்டிற்கு வந்ததும் வடிவு ஓடி வந்து,

“அப்பா, இன்று பணம் கிடைத்ததா?” என்று கேட்டாள்.

ராசா தனது தலையைக் குனிந்துகொண்டு, “இல்லை கண்ணு… இன்று ஒன்றும் கிடைக்கவில்லை,” என்றார்.

அந்தக் காட்சியைப் பார்த்த வடிவின் மனம் உடைந்தது.

“அப்பா, நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டும் மற்றவர்கள் முன்னால் அவமானப்படுகிறீர்களே…” என்று அவள் கண்ணீருடன் கூறினாள்.

அந்த நாளிலிருந்து வடிவும் மகேஷ்வரி தங்கள் தந்தையின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டார்கள்.

ஒருநாள் இருவரும் கடற்கரைக்குச் சென்றனர். அங்கே ராசா மற்றவர்கள் முன்னால் அவமானப்படுத்தப்படுவதை நேரில் பார்த்தனர்.

அன்று இருவரும் ஒரு முடிவு எடுத்தனர்.

“அப்பா இவ்வளவு கஷ்டப்படும்போது, நாங்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. இனிமேல் அப்பாவுக்கு முன்பாக நாங்களும் கடலுக்குச் செல்வோம். மீன் பிடிப்போம். யார் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்,” என்றாள் வடிவு.

மகேஷ்வரி அதற்கு சம்மதித்தான்.

அடுத்த நாள் முதல், வடிவும் மகேஷ்வரியும் தங்கள் தந்தையுடன் கடலுக்குச் செல்லத் தொடங்கினர். ‘ஆண்கள் மட்டும்தான் கடலுக்குச் செல்ல வேண்டும்’ என்ற எண்ணத்தை உடைத்து, வடிவும் துணிந்து கடலில் இறங்கினாள்.

அவர்களின் உழைப்பைப் பார்த்து நாளடைவில் குடும்பத்தின் நிலை மாறியது. அவர்கள் சேர்ந்து உழைத்து, முதலாளியின் கடன்களையும் அடைத்தனர். பின்னர் தங்களுக்கென ஒரு புதிய படகையும் வாங்கினர்.

ஒருநாள் தனது பிள்ளைகள் தங்களுக்கென ஒரு படகுடன் கடலுக்குச் செல்வதைப் பார்த்த ராசாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அது வறுமையின் கண்ணீர் அல்ல…

தன் பிள்ளைகள் தன்னைப் பார்த்து வளர்ந்து, தன்னுடைய கஷ்டத்தைத் தங்களுடைய வலிமையாக மாற்றிக்கொண்ட பெருமையின் கண்ணீர்.

கடல் அவர்களின் வாழ்க்கையைச் சோதித்தது.
ஆனால் அந்தக் குடும்பத்தின் ஒற்றுமையையும் உழைப்பையும் வெல்ல முடியவில்லை.

“கடலோடு போராடிய தந்தையின் வாழ்க்கையை, தங்கள் துணிச்சலால் கரை சேர்த்தார்கள் வடிவும் மகேஷ்வரி.”

ஜெயராணி

 


Post a Comment

0 Comments