
தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, “தன்னை எம்.எல்.ஏ. ஆக்கிய அதிமுக கட்சியை மதிக்காமல், தனக்காக உழைத்த கட்சித் தொண்டர்களை மதிக்காமல், எல்லோரையும் ஏமாற்றிவிட்டு, த.வெ.க. கட்சிக்கு தாவி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதற்காக கட்சி மாறிய கபட வேடதாரிதான் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா. அவருக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா ஓட்டுக் கேட்டு வருவதற்கு? எந்த முகத்தோடு ஓட்டுக் கேட்டு வருகிறார் என்று தெரியவில்லை. தாராபுரத்தில் சத்தியபாமாவை ஆதரித்து விஜய் ஓட்டு கேட்டபோது, சத்தியபாமா நடிக்கிறார், நாடகம் போடுகிறார், கண்ணீர் வடிக்கிறார், கதறி அழுகிறார். நான் என்ன தவறு செய்தேன் என்று சொல்லுகிறார். தன்னைத் தேர்ந்தெடுத்த தொகுதிக்கு மிகப்பெரிய அவமானத்தை செய்துவிட்டு, தாராபுரம் மக்களுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்திவிட்டு, ஓட்டு போட்ட மக்களையும் சத்தியபாமா மதிக்கவில்லை.
எம்.எல்.ஏ. ஆகி ஒரு வருஷம், ரெண்டு வருஷம் ஆகிவிட்டதா? எடப்பாடி பழனிசாமி மீது கோபமா? அதிமுக கட்சி மீது கோபமா, இல்லை ஆளுங்கட்சி ஏதாவது நன்மை செய்துவிட்டதா? வாக்குறுதி தந்தபடி தாய்மார்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 அறிவித்துவிட்டார்களா, கொடுத்துவிட்டார்களா? அல்லது ஆறு சிலிண்டர் கொடுத்துட்டாங்களா? இல்லை மாணவர்கள் வாங்கிய கடனை ரத்து பண்ணிட்டாங்களா? இல்லை விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து பண்ணிட்டாங்களா? பயிர்க்கடனை முழுமையாக நிபந்தனை இல்லாமல் ரத்து பண்ணிட்டாங்களா? எந்த வாக்குறுதியாவது நிறைவேற்றப்பட்டதா? எதையுமே செய்யாத த.வெ.க. கட்சியை நம்பி நீங்க ஏன் போனீங்க? ஆட்சியில் பங்கு பெறலாமா, அதிகாரத்தில் பங்கு பெறலாமா என்ற நோக்கம்தானே. ஒரு பக்கம் கொடுக்கின்ற பெட்டியை நிரப்பி, உங்களை செழிப்படைய வைப்பதற்காகவோ, உங்கள் குடும்பத்தை வளமாக ஆக்கிக் கொள்வதற்காகவோ தானே நீங்கள் அங்கே ஓடினீர்கள். ஆகவே இதை நாட்டு மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? தாராபுரம் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? ஆகவே உங்களை ஊருக்குள் வரக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள் என்று சொன்னால், தொகுதி மக்களில் பலருக்கும் அந்த எண்ணம்தான் இருக்கிறது.
மற்றவர்களோ, சத்தியபாமா எப்படியும் நாசமாகப் போகட்டும் என்று பேசாமல் இருக்கிறார்கள். நாங்கள் சுற்றி சுற்றி வருகிறோம். தாராபுரம் தொகுதியில் அனைத்து கிராமங்களிலும் அலை வீசுகிறது இரட்டை இலைக்கு. காரணம் என்ன? அதிமுகவை ஏமாற்றி ஓட்டு வாங்கி, ஓடி போனவருக்கு ஓட்டு போடக்கூடாது என்ற வெறி இந்தப் பகுதி மக்களிடத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆர். விவசாயக் கடனை ரத்து செய்தார். ஜெயலலிதா விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்தார்கள். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் செய்தார். நிபந்தனை கிடையாது, கால அளவு கிடையாது. கடன் வாங்கிய அத்தனை பேருடைய கடன்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது அதிமுக ஆட்சியில். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி பாதுகாத்து வருகிறார். இப்படிப்பட்ட கட்சிக்குத்தான் மக்கள் வாக்களித்தார்கள். இன்றைக்கு குறுக்கே ஓடி எதையாவது தடுத்து, ஆளை சாய்த்ததைப் போல அதிமுக ஆட்சிக்கு வருவதை கெடுப்பதற்காக விஜய் தன்னுடைய மாய வலையை வீசி, பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி, செய்ய முடியாத கோரிக்கைகளைச் சொல்லி, மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி 107 சீட்டு வாங்கிய விஜய், மெஜாரிட்டி கிடைக்காததற்காக எம்.எல்.ஏ.க்களை விலைபேசிய கேவலமான அசிங்கங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறியது.
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, ராஜினாமா செய்ய சொல்லி, அதற்கு பின்பு அவர்களையே வேட்பாளராக்குகின்ற கொடுமை, கேவலம் நடக்கிறது. இது என்ன தூய சக்தியா? நீங்கள் தான் தீய சக்தி. நாடகம் போடுகிறார் விஜய், நடிக்கிறார். எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்தார். ஏழையாக நடித்தார், இல்லாத மக்களுக்கு உதவுபவராக நடித்தார், அதேபோல் வாழ்க்கையிலே செய்தார், வாழ்க்கையில் நடிக்கவில்லை. எதையுமே செய்யாத தவெக எல்லா கட்சியையும் குறை சொல்லிவிட்டு, தான் மட்டும் உத்தமன் வேடம் போடுகிறார் விஜய். அவருடைய முகத்திரையை கிழிக்கின்ற வகையில், எடப்பாடியாருடைய கரத்தை உயர்த்திப் பிடிக்கின்ற வகையில் அதிமுக வேட்பாளர் பானுமதிக்கு வாக்களியுங்கள். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி ஓட்டுக்களை வாங்கிய விஜய், மைனாரிட்டி ஆட்சி அமைத்த விஜய், மெஜாரிட்டி பெறுவதற்காக குறுக்கு வழியை கையாளுகின்ற காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். கிராமப்புறத்து மக்களே, நீங்களெல்லாம் உண்மையை சொல்லக்கூடியவர்கள், நல்லதை செய்யக்கூடியவர்கள், மனிதநேயமிக்கவர்கள், தெய்வபக்தி உள்ளவர்கள். தெய்வத்துக்கு விரும்பாத எந்த செயலையும் செய்யமாட்டீர்கள். இது நியாயமா, இது நேர்மையா? எடப்பாடி பழனிசாமி கேட்டார், நீதி கேட்டு வந்திருக்கிறேன் என்று சொன்னார். உண்மைதானே? அதிமுகவுக்கு வாக்களித்தீர்கள், அந்த வாக்கை விலை பேசிய சத்தியபாமாவுக்கு சரியான ஒரு பாடத்தை கற்பியுங்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
nakkheeran

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments