அவர் ஒரு மகாகவி, கல்விமான், கலாநிதி! அவர்தான் அல்லாமா முஹம்மது இக்பால்!

அவர் ஒரு மகாகவி, கல்விமான், கலாநிதி! அவர்தான் அல்லாமா முஹம்மது இக்பால்!

இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தின்  எல்லையில் அமைந்துள்ள "சியால்கோட்" என்னுமிடமே கலாநிதி மகாகவி அல்லாமா சேர் முஹம்மது இக்பால் அவர்களின் பிறப்பிடம்.  1822 பெப்ரவரி 22ம் திகதி மார்க்கப் பற்றுமிக்க ஷேக் நூர் முஹம்மத் என்பவருக்கு இளைய மகனாகப் பிறந்தார்.  இக்பால் என்றால் "புகழ்" என்று பொருள்படும். அவர் தம் பெயருக்கேற்ப - பிற்காலத்தில் கவிதை, கல்வி, வரலாறு, தர்க்கசாஸ்திரம் போன்ற சகல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கினார். 

முதற்கல்வியாக முஸ்லிம் சமூகத்தினர் அனைவரும் கற்கும் அறபு மொழியையும்,  அல்குர்ஆனையும் தம் இளம் பிராயத்திலேயே மத்றஸா சென்று  கற்றுக் கொண்டார்.  பின்னர் ஆரம்பப் பாடசாலையில் சேர்ந்து தனது உலகக் கல்வியைத் தொடங்கிய அவர் - அடுத்து நடுநிலைப் பாடசாலைக்கு உள்வாங்கப்பட்டு, அங்கே தன் கல்வித் திறமையை  வெளிப்படுத்தி,  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து உயர் கல்லூரியில் சேர்ந்தார்.

முஹம்மது இக்பால் அவர்கள் கல்லூரியில் சேரும்போது-  மார்க்கப்பற்றுமிக்க அவரது தந்தை,  நீ உன் வாழ்வில் வெற்றியடைய நேர்ந்தால், உன் கல்வியை இஸ்லாத்துக்காகவே பயன்படுத்து  என்ற அறிவுரையை ஆணித்தரமாகப் பகிர்ந்தார்.  தந்தையின் அறிவுரை முஹம்மது இக்பால் அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அதுவே முஹம்மது இக்பால் அவர்களை தன்  வாழ்நாள் முழுவதும் தான் பெற்றுக் கொண்ட அறிவையும், கவிதைகளையும் இஸ்லாத்திற்காகவே பயன்படுத்த உந்து சக்தியாக அமைந்தது. இளம் வயதில் பெற்றோர் தம் பிள்ளைகளுக்குக் கொடுக்கின்ற நல்லறிவுரையானது எந்த அளவுக்கு எதிர்காலத்தில் அவர்களை ஒரு கட்டுக்கோப்பில் வைத்துக் கல்வி பெற்று, உயர் ஸ்தானத்திற்குக் கொண்டு செல்கின்றது என்பது கலாநிதி மகாகவி அல்லாமா சேர் முஹம்மது இக்பால் அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நம் பெற்றோரும் பிள்ளைகளும் உணர்ந்து கொள்ளலாம்.

சிறுபிராயம் முதலே சுயமாகவே கவிதைகள் அவர் உள்ளத்திலே ஊற்றெடுக்கும்.  நள்ளிரவில் அவரது மனதில் ஊற்றெடுக்கும் கவிதைகளைக் குறித்துக் கொள்வதற்காக எப்பொழுதும்  தாளும் எழுதுகோலும் தன் தலையணைக்கடியில் வைத்திருப்பார். அது மாத்திரமன்றி, இயற்றிய கவிதைகளை இசையோடு பாடுவதிலும் அவர் திறமை மிக்கவராகக் காணப்பட்டார். அவர் தம் கவிதைகளை  உலக மக்கள் அனைவருக்குமாகவும் பாடினார். 1947ல் இந்தியா சுதந்தரமடைந்போது, முதன் முதலாக இந்தியப் பாராளுமன்றித்திலே அல்லாமா முஹம்மது இக்பால் அவர்களின் "தேசியக் கீதமே" ஒலித்தது!

கல்லூரி வாழ்க்கையின்போது. அவர் வெறும் புத்தகப் பூச்சியாக மாத்திரம் இருக்கவில்லை.   'நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்' என்பதற்கிணங்க தனது ஓய்வு வேளைகளில் அறிவு நூல்களை வாசிப்பதில் ஈடுபட்டார்.  தவிர, தான் வாசித்த நூல்கள் பற்றி தனது நண்பர்களுடன் வாதாடுவதும், கருத்துப் பரிமாறுவதும் அவரது பொழுதுபோக்குகளில் ஒன்றாகவிருந்தது.

சியால்கொட்டில்  ஆரம்பக் கல்வியைக் கற்ற முஹம்மது இக்பால் அவர்கள், உயர்படிப்புக்காக லாகூர் சென்றார். அங்கே பி. ஏ. பட்டதாரியாகி  தங்கப் பதக்கம் பெற்றார்.  அங்கு வைத்தே முஹம்மத் இக்பால் அவர்களுக்கு, இஸ்லாம் பற்றி நன்கு அறிந்தவரும்,  இஸ்லாம் பரவிய விதத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்து நூல் எழுதியவருமான அலிகார் சர்வகலாசாலையில் பேராசிரியர் சேர் தோமஸ் ஆர்னால்ட் என்ற அறிஞரின் நட்புக் கிட்டியது.  இவரின் அந்நியோன்னியத் தொடர்பே முஹம்மது இக்பால் அவர்களை "தத்துவசாஸ்திரம்" பயில்வதற்குத் தூண்டியதெனலாம். அங்கு வைத்தே அவர் தனது 27ம் வயதில் எம். ஏ. பட்டத்தைப் பெற்று, அதிலும் தங்கப் பதக்கத்தைத் தட்டிக் கொண்டார். அதன் பின்னர் லாகூர் ஒரியண்டல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஒரு மனிதனுக்கு நல்லாசானின் தொடர்பானது அவனை நல்வழிப்படுத்தி,  சமூகத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதற்கு, முஹம்மது இக்பால் அவர்கள் பேராசிரியர் சேர் தோமஸ் ஆர்னால்ட் அவர்களுடன் கொண்ட தொடர்பு ஒரு காரணமாகின்றது.

மேலும் தனது அறிவை விருத்தி செய்துகொள்வதில் தணியாத ஆர்வம் கொண்ட முஹம்மது இக்பால் அவர்கள், இங்கிலாந்து சென்று கற்க விரும்பி, தனது ஆதங்கத்தை  சகோதரரர் அதா  முஹம்மதிடம் வெளியிட்டார். தனது சகோதரரின் ஆவலைப் பூர்த்தி செய்ய இணக்கம் தெரிவித்து முஹம்மது இக்பால் அவர்கள் இங்கிலாந்து சென்று படிக்கும் வாய்ப்பை அவரே  ஏற்படுத்திக் கொடுத்தார். 1905ல் இங்கிலாந்து கேம்பிரிஜ் கல்லூரியில் சேர்ந்து கற்று - பி. எச். டி பட்டம் பெற்றார்.

பின்னர் ஜெர்மன்  சென்று"பாரசீகத்தின் தத்துவஞான வளர்ச்சி” என்ற ஆராய்ச்சி நூலைச் சமர்ப்பித்தார்.  அவரது ஆற்றலைப் பாராட்டி அங்கு அவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது. மீண்டும் லண்டன் வந்து சட்டக் கல்லூரியில் சேர்ந்து பரீஸ்டர் பட்டம் பெற்றார்.1922ம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் இவரது இலக்கியத் திறமைகளையும், பணியையும் உணர்ந்து இவருக்கு சேர் பட்டம் வழங்கியது.

1926ம் ஆண்டு கலாநிதி மகாகவி அல்லாமா சேர் முஹம்மது இக்பால் அவர்கள் பஞ்சாப் சட்டசபை அங்கத்தவரானார். 1928-1929 ம் ஆண்டுகளில் கலாநிதி மகாகவி அல்லாமா சேர் முஹம்மது இக்பால் அவர்கள் சென்னை, பங்கழூர், மைசூர், ஹைதராபாத் போன்ற இடங்களுக்குச் சென்று   சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1930ம் ஆண்டு அவர் அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவரானார். அதன் பின்னர் அவர் பல மகாநாடுகளில் ஆற்றிய உரைகளும் கூட இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டதெனலாம்.  

இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதி வரை இந்தியத் துணைக்கண்டம் உட்பட துருக்கி, அறபு நாடுகள் போன்றவற்றில் பல கவிஞர்கள் தோன்றினாலும் கூட,  இலட்சியக் கவிஞர் என்ற ஸ்தானத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர் கலாநிதி மகாகவி அல்லாமா சேர் முஹம்மது இக்பால் அவர்களே எனக்கூறலாம். அவரது கவிதைகளிலே தத்துவம் மிளிர்ந்தது. விடுதலை ஆசை வீறுநடை போட்டது. மதப்பற்றும், இஸ்லாமியத்துவமும் நிறைந்திருந்தது. இறைதூதர் நேசம் உயர்ந்திருந்தது. அதுவே பாரசீக, உருது மொழிகளில் உருவான அவரது கவிதைகள் பல்வேறு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வியாபிக்கக் காரணமாயிருந்தது. அதனால்தான் அவர் ஒரு சர்வதேசக் கவிஞராகப் போற்றப்படுகின்றார்.

மகாகவி முஹம்மது இக்பால் அவர்கள் தன் கவிதைகளில் வீரமிக்க வரலாறுகளை வெளிப்படுத்தினார். இறைதூதர் அவர்களின் வரலாற்றிலே இனிமை கண்ட அவர்,  "பாலைவன மணி ஓசை" என்ற தனது கவிதைத் தொகுப்பின் மூலம் இறைநேசம், இறைதூதர் அன்பு, இஸ்லாத்திலிருந்து முஸ்லிம்கள் தூரச்சென்றதன் மூலம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி போன்றவற்றை வெளிப்படுத்தினார். உருது மொழியிலான இந்நூல் மூன்று பாகங்களாக வெளிவந்தது.

நேசம் என்ற தனது கவிதையின் மூலம் நேசம் நோய் படர்ந்த மக்களுக்குக் காயகற்பம் என்று குறிப்பிடும் அவர், நேசம் ஒரு நோயென்றால், சூரியன் உலகை வலம் வருவது நேசம் எனும் நோய்க்குப் பரிகாரம் தேடித்தான் என்று தத்துவரீதியாகக் கவிதை படைத்தார். அவரது அந்தக் கவிதை இன்றைய இலங்கைக்கு முற்றும் பொருத்தமானது எனலாம்.  30 வருட துயர் படிந்த யுத்தத்திலிருந்து விடுபட்டுள்ள நம் மக்களுக்கு இன்று தேவைப்படுவதெல்லாம் இந்த "நேசம்" என்ற ஒன்றுதான். இலங்கை வாழ் மூவின மக்களும் நேசக்கரம் நீட்டி வாழ வேண்டிய தருணம் இதுதான் என்பதை இக்கவிதையை நாம் படிப்பதன் மூலம் உணரலாம்.

ஹஜ் பற்றிய தனது கவிதையொன்றில் மக்கா செல்வதும், இஹ்ராம் கட்டுவதும், ஸம்ஸம் நீர் கொண்டு வருவதும் ஹஜ் என முஸ்லிம்கள் நினைக்கின்றனர் என்று குறிப்பிடும் அல்லாமா இக்பால் அவர்கள்,  ஹஜ் என்பது அதற்கும் மேலான ஒன்றை உணர்த்துகின்றது என்பதை புனித பூமியில் காலடி வைத்துத் திரும்பியவர் இதயத்திலே இறக்கும் வரை இறைநேசம் நிறைந்திருக்க வேண்டும்  என்றவாறாக தனது கவிதை ஒன்றின் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

உலகப் பொருளாதார வளங்களைத் தமதாக்கிக் கொள்ள விளையும் மேல்நாட்டவருக்கு உலகை வியாபாரச் சந்தையாக்கிக் கொள்ளாதீர்கள்  என்ற பொருள்பட தனது கவிதையொன்றின் மூலம் எச்சரித்துள்ளார் கவிஞர் அல்லாமா முஹம்மது இக்பால் அவர்கள்.

மேல் நாட்டு அறிவுபடைத்த ஆயிரக்கணக்கான நம் தலைவர்கள் சுயநலத்திற்காக, ஒன்றுபட்டிருக்க வேண்டிய முஸ்லிம் சமூகத்தைப் பிளவுபடுத்தி, பல்வேறு கூறுகளாக்கியுள்ளனா;. இத்தகைய சுயநலவாதிகளிடமிருந்து, எங்கள் சமூகத்தை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் என்ற பொருள்பட அன்று அவர் பாடிய கவிதை, இன்றைய இஸ்லாமிய உலகிற்கும் நன்கு பொருந்துவனவாக உள்ளது.

அல்லாமா இக்பால் அவர்களின் கவிதைகளிலே இறைதூதர் மீது அளவற்ற பற்றும் அவர்களிடம் மன்றாடும் தன்மையும் காணப்படுவதை பின்வரும் கவிதையின் பகுதியொன்று நமக்கு உணர்த்துகின்றது.நபிபெருமானே! இக்கால வாழ்வில் இன்பம் எங்கே?

நாம் தேடும் உண்மை வாழ்வெங்கே?
ஆயிரக்கணக்கான பூந்தோட்டங்களில்
பல்லாயிரக் கணக்கான மலர்கள் பிறக்கின்றன.
ஆனால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும்
மணம் படைத்த மலர் ஒன்றாவது அங்கு மலரவில்லையே!
முஸ்லிமே உனது உள்ளத்திலே வீரமில்லை.

உயிரிலே உணர்ச்சியில்லை.
பெருமானார் கொண்டு வந்த தூதில்
கொஞ்சமேனும் இப்போது உன்னிடமில்லை.
பள்ளிகளிலே தொழுகைகள் இடம் பெற்றாலும்,
பெருமானாரின் தொழுகையில் கண்ட உயிர்த்துடிப்பில்லை!

"அஸ்ராரே குதி"  என்ற அவரது நூல் Secret of the self என்ற பெயரில் ஆர். ஏ. நிகல்சன்  1940ல் மொழி பெயர்த்துள்ளார். கவிஞரின் பாரசீகப் பாடல்கள் பலவற்றை   A. J. ஆர்பரி  ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். தனது ஞானகுருவான, பாரசீகப் பேரரிஞர் -  தத்துவஞானி  ஜலாலுத்தீன் ரூமி அவர்களுடன்  விண்ணுலகம் சுற்றிப் பலரைச் சந்திக்கும் பிரயாண நூலொன்றுபோல் அமைந்துள்ள பாரசீக மொழியிலான "ஜாவீது நாமா" என்ற நூலில் கீழைத் தேசங்களுக்கு நல்லகாலம் பிறக்கப்போகின்றது என்றவாறு ஆருடம் கூறப்பட்டுள்ளது!  தவிர, இளைஞர்களை தட்டியெழுப்பி நல்வழிப்படுத்தும் கருத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. ஷிக்வா - வ ஜவாபே ஸிக்வா (முறையீடும் முறையீட்டின் பதிலும்) என்ற நூலொன்றையும் உருது மொழியில் அவர் எழுதியுள்ளார்.
முஹம்மது இக்பால் அவர்கள் மூன்று மனைவியரைத்  திருமணம் செய்திருந்தார். முதல் மனைவிக்கு இரண்டு பிள்ளைகள், முதல் மனைவி காலமான பின்னரே இரண்டாவது திருமணம் செய்தார். இரண்டாம் மனைவிக்கு "ஜாவீது" என்ற மகனும், "முனீராபானு" என்ற மகளும் கிடைத்தனர். இரண்டாம் மனைவி 1935ம் ஆண்டு காலமான பின்னரே மூன்றாவது திருமணம் செய்தார். மூன்றாம் மனைவிக்குப் பிள்ளைகள் இல்லை. முஹம்மது இக்பால் அவர்கள் தமது பிள்ளைகளிடத்தே அளவற்ற பாசம் வைத்திருந்தார். அடிக்கடி அறிவுரைகள் கூறி அவர்களை வழிநடாத்தினார்.

கலாநிதி மகாகவி அல்லாமா சேர் முஹம்மது இக்பால் அவர்கள் தமது மரணத்துக்கு முன்னரே மக்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். 1938ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி அவருக்குப் பாராட்டுவிழா கோலாகலமாக எடுக்கப்பட்டது.  அல்லாமா முஹம்மது இக்பால் அவர்கள் 1938ம் ஆண்டு ஏப்ரில் மாதம் 21ம் திகதி காலை தனது 65ம் வயதில் லாகூரில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

"பாத்ஷாஹி மஸ்ஜித்" முன்றலில் அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது!

Post a Comment

Previous Post Next Post