புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 92

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 92

பெரிய கல்லடியோரம் வரை இறங்கி ஏறிய களைப்போடு  வந்து சேர்ந்த செரோக்கி, தனது வீட்டுக்குள் நுழையும்போது, ரெங்க்மா  தன் படுக்கையில் சாய்ந்தவாறு  கையில்  காகித அட்டை ஒன்றை  வைத்துக்கொண்டு, அதனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்!

அவள் அப்படிப் பார்ப்பதற்கு அதிலே என்னதான் இருந்தது?

அருகில் சென்று அவன் உற்றுப் பார்த்போது,  அந்த நல்லவர்கள் அன்று  கறுப்புப் பெட்டியொன்றைக் கொண்டு, நம் அனைவரையும் சேர்த்து நிற்கவைத்து  எடுத்துக் கொண்ட படம் அது  என்பதைப் புரிந்துகொண்டான் செரோக்கி!

அவர்கள் தம்மோடு கொண்டுவந்திருந்த  சாதனத்தின் கால்களை நிலத்தில்  விரித்து வைத்து, அதன்மேல் கறுப்புப் பெட்டியைப் பொருத்திவிட்டு அவர்களோடு சேர்த்து எங்களையும் நிற்கவைத்தார்கள்!

சிறிது நேரத்தில் பெட்டியிலிருந்து “கிளிக்” ஓசை வெளிப்பட்டதும், அதற்குள்ளிருந்து மெது மெதுவாக  வெளிப்பட்ட அட்டையை அவர்கள் மூவரும் மாறி மாறி ரசித்துவிட்டு, ரெங்க்மாவிடம் கொடுத்ததை அவன் ஒரு கணம் கண்டபோதிலும், அவர்களை வழியனுப்பிவைக்கும் காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் அப்போதைக்கு அந்த அட்டையைப் பார்க்கும் நிலையில் அவன் இருக்கவில்லை!

அதைத்தான்  இப்போது ரெங்க்மா உன்னிப்பாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றாள்!

இதே மாதிரி காகித அட்டை ஒன்று  முன்பொரு நாள்  அவனுக்கு அவனது நண்பன்  இர்வின் கொடுத்ததுண்டு. அவனது  விழாவுக்கான அழைப்பு அட்டை அது!  அதன் முற்பக்கத்தில்  பெரியவர் தான் மறையும் வரை வாழ்ந்து வந்ததும் - அண்மைக்காலம் வரை செரோக்கி  குடியிருந்ததுமான  “குகை”யின் கவர்ச்சிகரமான காட்சி அதில் பொறிக்கப்பட்டிருந்தது!

ஆனால் இப்போது ரெங்க்மா பார்த்துக் கொண்டிருக்கும் அட்டையில் செரோக்கியின் தோளைத்  தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க, செரோக்கிக்குப் பக்கத்தில் அந்த நல்ல மனிதர்கள் மூவரும் வரிசையாக நின்றிருந்தனர்!

“இது அழகாயிருக்குதில்ல?”

“நீ தான் அழகாயிருக்கே!”

“நீங்களும்தான்!”

“அந்த மனிதர்கள் இப்போ எங்கிருப்பார்களோ?”

“நான் அவர்களை நகருக்குள்ள விட்டு வந்தேன். அவர்கள் அங்கிருந்து எப்படியாவது  தம் சொந்த இடத்தைத் தேடிச் சென்றிருப்பார்கள்!”

“அதில்ல, அவர்கள் தந்த கட்டுப்பணத்த எங்க வச்சீங்க?”

“குகைக்குள்ள .... அந்தப் பழைய பைக்குள்ளதான்!”

“அத எடுத்துட்டுப்போய் ஜோலியா நாம நகரத்த சுத்தலாமுள்ள?”

“ஆமா....சுத்தலாம் சுத்தலாம்!” என்றான் செரோக்கி.

இப்படி மாறி மாறி எதை எல்லாமோ பேசிக்கொண்டிருந்ததால், செரோக்கி யோகியாரிடம் சென்று வந்தது பற்றி ரெங்க்மா கேட்க மறந்தே போய்விட்டாள்.

செரோக்கியே நடந்தவைகளை விலாவாரியாக அவளிடத்தில்  ஒப்புவித்துவிட்டு,  யோகியார் குறிப்பிட்ட அந்த விடயத்தை ரெங்க்மாவிடம் மெல்லக் குறிப்பிட்டான்!

“என் பாரத்துக்கா?  வனத்திலிருந்து பழங்களைத்தேடிக் கண்டுபிடித்து வருவது அவ்வளவு லேசான  காரியமா? அதெல்லாம் தேவையில்ல.... விட்டுடுங்க!” – என்றாள் ரெங்க்மா.

“அப்படி விட்டுடலாமா..? நான் யோகியாருக்கு வாக்களித்துவிட்டேன், காரியத்தை நிறைவேற்றுவதாக!” என்று நறுக்கெனக் கூறிவிட்டு  அங்கிருந்து  நகர்ந்து தம் பெற்றோரை நாடி  ஜாகையை நோக்கி நடக்கலானான்!
(தொடரும்)

 

 --------------------------
வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
   Email-vettai007@yahoo.com  

Post a Comment

Previous Post Next Post