Ticker

6/recent/ticker-posts

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-17 (வரலாறு-பாகம்-2)

 
உடத்தலவின்னை மெடிகே
குடியிருப்பின் ஆரம்பம்-17
உடத்தலவின்னை மெடிகேக்குடியிருப்பின் ஆரம்ப வரலாற்றைக் கூறும் எழுத்ததாவணங்கள் கிடைக்கப் பெறாதபோதும், 1881ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட  சனத்தொகைக் கணிப்பிலிருந்து அதன் வரலாறு 500-700 வருடங்களையும் கடந்து செல்வதாக உறுதி செய்ய முடிவதோடு,  கண்டி - மாத்தளை வர்த்தகப் பாதையின் மையத்தில் குடியிருப்பு அமைந்திருப்பதன் மூலம்  அதன் பூர்வீகப் பெருமையை உறுதி செய்யவும்  முடிகின்றது. பிரதேசத்தின் ஆரம்பக் குடியேற்றம் களதெனிய பிதெல்லவத்தையிலிருந்து ஆரம்பமாகின்றது. உயர்ந்த மேட்டு நிலத்தில் அமைந்திருக்கும் களதெனிய, பௌதீக ரீதியாக கற்பாறைகள் நிறைந்த மேடுகளைக் கொண்ட ஒரு பகுதியாகும்.  மத்திய பிரதேசத்தின்  பல முஸ்லிம் குடியிருப்புக்களது ஆரம்பம்  மேட்டு நிலங்களாகவே இருந்தமை நினைவூட்டற்பாலது.  பாதுகாப்பு நலங்கருதி ஆரம்பக் குடியாளர்கள் மலைப்பிரதேசங்களைத் தழுவியதாகக் குடியேறியிருக்க வேண்டும் எனக்கருதலாம்.

குடியிருப்புக்கு நீரைப் பெற்றுக் கொடுக்கும் புஸ்ஸல்ல ஓயா, ரவன்ஓயா நீரோடைகள் முறையே நவயஹலதன்னையிலும், பொல்கொல்லையிலும் மகாவலியுடன் சங்கமமாகின்றன. இவ்விரு நீரோடைகளைத் தழுவியதாகவே குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன எனலாம்.  களதெனியிலிருந்து  மகாவலி கங்கை வரை அமைந்திருந்த ‘தெவட’  பாதை யானை போன்ற வனவிலங்குகள் நீர் பருகுவதற்காகப் பயணஞ்செய்யும் பாதையாகத் திகழ்ந்திருக்கின்றது. இவ்வாறான பலநூறு தெவட பாதைகள் அக்காலத்தில் கண்டி இராச்சியமெங்கும் அமைந்திருந்தன. மாறிவரும் உலகிற்கேற்ப களதெனி “தெவட” பாதையும் புதிதாகச்  செப்பனிடப்பட்டு மோட்டார் போக்குவரத்துப் பாதையாக அபிவிருத்தியடைந்திருக்கின்றது.

களதெனியின் ஆரம்பக் குடியாளர்கள் குறித்து பிரதேசவாசிகளால்  பல்வேறு செவிவழிச் செயதிகள் பேசப்பட்டு வருவதுண்டு.  அவை செவிவழிச் செய்திகளாக விளங்கியபோதும்  முற்றிலும் நிராகரிக்கப்பட முடியாதவைகளாகும்.  குடியிருப்பாளர்களில்  ஒரு பிரிவினர் ஆரம்பக் குடியேற்றத்தைக் குருநாகலை யுகத்தோடும்  மற்றுமொரு  பிரிவினர் கண்டிய இராச்சிய காலத்துடனும் தொடர்பு படுத்திப் பேசுகின்றனர். குடியிருப்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் ஒருவர் சேகரித்திருக்கும்  தகவல்களிலிருந்து மெடிகேயின் ஆரம்பக் குடியாளா;கள் தென்னிலங்கை - பேருவலையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள்   என நிறுவ முயற்சிக்கப்பட்டிருக்கின்றது.

அவர் வழங்கிய   தகவல்களிலிருந்து அக்காலை தும்பறைப் பிரதேசத்தை நோக்கிய இஸ்லாமிய இடப்பெயர்வுகள் பொல்கொல்லையிலிருந்து ஆரம்பமாகியதாகக் குறிப்பிடப்பபடுகின்றது. முதல் குடியேற்றம் நிகழ்ந்த இடம் மகாவலியுடன்  ரவன்ஓய நீரோடை சந்திக்கும் பொல்கொல்லையாகும். சமீப காலம் வரை அவ்விடம் "பள்ளியவெல" என அழைக்கப்பட்ட பகுதியாகும்.

அதிபரின் குறிப்பிலிருந்து, ஷெய்கு ஸலாஹுத்தீன் என்ற மருத்துவப் பணியாளர் பேருவலை-கோணாவலையிலிருந்து  ஆட்சியாளர் இரண்டாம்  புவனேகபாகுவின் காலத்தில் (கி. பி. 1293-1302)  அரச மருத்துவராக குருணாகலையில் குடியேறியுள்ளார். நாட்செல்ல ஷெய்கு ஸலாஹுத்தீனின் புதல்வியான பாத்திமா நாச்சி என்ற பெண்ணை இரண்டாம் புவனேகபாகு தனது இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துள்ளார்.  அம்மனைவி மூலம் பிறந்த இளவரசனுக்கு அக்பர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அவரே வரலாற்றில் "வஸ்துஹிமி"  என அடையாளப்படுத்தப்பட்டவராவார் எனக்குறிப்பிடப்படுகின்றது.  வரலாற்றாசிரியர் ஸைரஸ் டி. எப் அபயகோன் வழங்கும் தகவல்களிலும் குருணாகலை - மெதகெட்டிய கிராமத்தில் வாழ்ந்த  பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணிக்கு இரண்டாம் புவனேகபாகு மூலம் பிறந்த இளவரசர்  வரலாற்றில் வஸ்துஹிமி என ‘குருநாகல விஸ்தரய’வில் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக  குறிப்பிடப்படுவது  ஈண்டுநோற்கப்பட வேண்டியதாகும். 

பிரபல எழுத்தாளர் விஜயபால வீரவர்தன 2011.06.08ம்  திகதிய திவயின நாளிதழில் எழுதிய  கட்டுரையில்  குருநாகலை இராசதானியை ஆட்சிபுரிந்த  இரண்டாம் புவனேகபாகுவின் முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த அரசகுமாரன் திறைசேரிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்ததால், அவன் வரலாற்றில் "வஸ்துஹிமி"எனப் பிரபல்யமடைந்திருந்தான் எனக் குறிப்பிடப்படுகின்றார்.

இச்சொல் "வஸ்து ஸ்வாமி"    என்ற சொல்லின் மருவுதலாகும். இரண்டாம் புவனேகபாகுவின்   மறைவைத் தொடர்ந்து அவனது முதலாவது மனைவியின் மூலம் பிறந்த இளவரசன் நாலாம் பராக்கிரமபாகு என்ற பெயரில் ஆட்சி பீடம் ஏறியுள்ளான்.  சகோதர இளவரசன் வஸ்துஹிமியினதும் அவனது முஸ்லிம் உதவியாளர்களதும் சதித்திட்டங்களால்  அரசன் நாலாம் பராக்கிரலமபாகு குருணாகலையைத் துறந்து சென்று சப்ரகமுவ மாகாணத்தின் டெடிகமையில் ஆட்சியை அமைத்துதுக்கொண்டதாகக்  குறிப்பிடப்படுவதுண்டு.  சிங்களப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதன் மூலமே ஆட்சியை அமைத்துக் கொள்ளலாம் என்ற வழக்கு அக்காலை இருந்தமையால், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய இளவரசர் வஸ்துஹிமி ஆட்சி அமைப்பதற்கு உதவியாக ஒரு சிங்களப் பெண்ணை விவாகம் செய்ய எண்ணியபோதும்,  அதனை விரும்பாத சிங்களப் பிரபுக்களிற் பலர் தமது பதவிகளைத் துறந்து  நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மறைந்து வாழலாயினர் என அதிபரின் குறிப்பில் கூறப்படுகின்றது.

வஸ்துஹிமி தான் குருநாகலை ஆட்சியாளராக முடிசூட்டப்படவேண்டுமென விரும்பியபோதும்  அக்கடமையை நிறைவேற்றக்கூடிய பிராமணர்கள் எவரையும் பெற்றுக்கொள்ள முடியாமற்போனதைத் தொடர்ந்து,  தனது  பரிவாரங்களுடன்  பேருவலை சென்று, அங்கு  பண்டாரவத்தை - மாளிகாதன்ன என்னுமிடத்தில்  ஒரு மாளிகையை அமைத்து சில காலம்  வாழ்ந்ததாகக் கதைகள் பேசப்படுகின்றன.

பேருவலையில் வாழ்ந்த இளவரசன் தனக்கு முடிசூட்டுவதற்காக  இந்தியாவிலிருந்து பிராமணர்களை அழைத்து வரும்படி அக்காலை பெரும் கப்பல் சொந்தக்காரர்களுள் ஒருவராக விளங்கிய உதுமான் லெப்பை மரிக்கார்  என்ற முஸ்லிம் பெருமகனுக்கு நிதியுதவி அளித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இளவரசனின் கட்டளைக்கமைய உதுமான் லெப்பை மரிக்கார் தனது நண்பர் பாதி மீராலெப்பை மற்றும் சிலருடன் தென்னிந்தியா - சோழ நாடு சென்று ஏழு பிராமணர்களை அழைத்து வந்துள்ளார்.  இவ்வுதவியைப் புரிந்தமைக்காக  உதுமாலெப்பை மரிக்காருக்கு இளவரசன் வஸ்துஹிமி பெருந்தொகையான நிலப்பரப்பையும் வேறும் பல பொருட்களையும் அன்பளிப்புச் செய்ததுடன் ‘கப்ப உடையார்’ என்ற சிறப்புப் பட்டத்தையும் வழங்கியதாகக் கூறப்படுகின்றது. பிராமணர்களைக் கொண்டு முடிசூட்டப்பட்ட  வஸ்துஹிமி குருநாகலை இராசதானியை நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியாமல் போனதுடன், அமைச்சர்களது சதிவலையில் சிக்கி குருநாகல பருவதத்திலிருந்து தள்ளப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக "சின்ஹலே சமாஜ இதிஹச"வில் குறிப்பிடப்பட்டுள்ளது.(P. 345)

பர்வதத்திலிருந்து தள்ளப்பட்டுக் கொலை செய்யப்பட்ட  வஸ்துஹிமி பிரதேச முஸ்லிம்களால் பிற்காலத்தில் இறைநேசச் செல்வர்களுள் ஒருவாராகக் கொண்டாடப்பட்டு வருவதுடன், முஸ்லிம் அல்லாதாரால்  "கலேபண்டார தெய்யா" என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வருகின்றார். இன்றுவரையும்  பாதுகாக்கப்பட்டு வரும் அவரது அடக்கஸ்தலம் தொடர்ந்தும்  முஸ்லிம்களின் பராமரிப்பிலேயே இருந்து வருகின்றதுமை குறிப்பிடத்தக்கது. வஸ்துஹிமி பர்வதத்திலிருந்து தள்ளப்பட்டுக் கொலை செய்யப்பட்டதன் பின், ஷெய்கு ஸலாஹுத்தீன் என்ற பெரியார் ஷெய்கு ஸதக், ஷெய்கு ஷாம் என்பவர்களுடன் இணைந்து பரகஹதெனிய வேஉடையில் குடியேறி ஒரு மஸ்ஜிதை அமைத்ததாகக் குறிப்பிடப்படுவதுண்டு.

ஷெய்கு ஸலாஹுத்தீனின் குமாரரே பொல்கொல்லையில் முதலிற்குடியேறிய ஷேய்குக் கண்டு என்பவராவார். அவரால் பொல்கொல்லையில் ஒரு மஸ்ஜிதும் அமைக்கப்பட்டிருக்கின்றது.  மஸ்ஜித் அமைக்கப்பட்டிருந்த நிலப்பகுதி இன்று திறந்த பல்கலைக் கழகம்  அமைந்திருக்கும் பகுதியாகும்.  முதலில் கோணாவல என அழைக்கப்பட்ட அவ்விடத்தில் மஸ்ஜித் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து  பள்ளியவெல எனப் பெயர் வழங்கப்படலாற்று  என்பர். நாட்செல்ல   பெரும் முஸ்லிம் குடியிருப்பாக விஸ்தீரணமடைந்த பள்ளியவெலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முஸ்லிம் குடியாளர்கள் தொடர்ந்தும் வந்து குடியேறியுள்ளனர்.  அவர்களுள் அநுராதபுரம் - நேகமையைச் சேர்ந்த வெள்ளமரிக்கார், அப்துப்பிள்ளையின் பாட்டனார், அடப்பையார் குடும்பத்தவர் சிலராவர்.  பொல்கொல்லைக்  குடியிருப்புப் பகுதி சிங்கள வரலாற்று நூல்களில் "அளுத்கம்தொட்ட" என அழைக்கப்படுவதிலிருந்து அங்கு  குடியிருப்புப் பகுதியொன்று புதிதாக  உருவாகியதாக   அங்கீகரிக்க முடிவதோடு, அவ்வாற்றங்கரை இறங்குதுறை முஸ்லிம்களது கைகளிலேயே இருந்திருக்க வேண்டும்  எனவும் கருத முடிகின்றது. கண்டியிலிருந்து மாத்தளையை அடைவதற்காக நடைமுறையிலிருந்த பண்டைய பாதைகளுள்  வட்டப்புளுவ, பொல்கொள்ள, அளுத்கம்தொட்ட பாதை பிரதான இடத்தை வகித்ததாக வரலாற்றாசியர்  ஈ. போல் பீரிஸ் குறிப்பிடுவதிலிருந்தும்  அளுத்தகம்தொட்ட இறங்குதுறையின் பிரதான பங்காளர்களாக   முஸ்லிம்களே விளங்கியிருக்க வேண்டும் எனக்கருதலாம்.  அக்காலை முஸ்லிம்களது  பிரதான பணிகளுள் ஒன்றாக படகுச் சேவையும்  அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பண்டைய  சிங்கள அரசர்கள் காலமுதல்  கண்டி நகரை அடைவதற்காக மகாவலி நதி நெடுகிலும் அளுத்கம் தொட்டையைப் போன்று பல இறங்குதுறைகள் காணப்பட்டன. அவற்றுள் கண்ணொருவ, கட்டுகஸ்தொட்ட, லேவெல்ல  பிரதானமானவை. இந்நான்கு இறங்குதுறைகளும்  "ஹதரகம்தொட்ட"   என்ற பெயரில்  அழைக்கப்பட்டன. உடத்தலவின்னையைச் சேர்ந்த அதிபர் வழங்கிய தகவல்களுக்கும்,  எழுத்தாளர் விஜயபால வீரவர்தன வழங்கியுள்ள தகவல்களுக்குமிடையே பேருவலை தொடர்புறுவது ஆய்வுக்குரியதாகும்.

பொல்கொல்லையில் முதலிற் குடியேறிய ஷெய்குக் கண்டுவின் புதல்வர்களில் அஹ்மத் சட்டாம்பி முஹந்திரம், ஆதம் லெப்பை, யூஸுப் லெப்பை, ஆப்தீன், காஸிம், ஸெய்னம்பு நாச்சி  ஆகியோர் நாளடைவில் உடத்தலவின்னை- தொரகமுவ பாதையில் அமைந்துள்ள வத்தேகெதர என்னுமிடத்தில் புதிய குடியிருப்பை அமைத்துக் குடியேறியுள்ளனர். அவர்கள் முதலிற்குடியேறிய பகுதி தற்போது வத்தேகெதர மஸ்ஜித் அமைந்திருக்கும் ‘பொரளு அம்பலவத்த’ என்ற பகுதியாகும். ஷெய்குக்கண்டின் புதல்வர்களால் உருவாகிய மஸ்ஜிதின் தொடர்ச்சியே வத்தேகெதரையில் இன்று கம்பீரமாகக் காட்சியளிக்கும் "ஜாமிஆ மஸ்ஜித்" எனப்படுவதுண்டு.   நாட்செல்ல அங்கிருந்தும் ஒரு தொகுதியினர் உடத்தலவின்ன - களதெனியை நோக்கிக் குடிபெயரலாயினர்.  அவர்களுள் ஆதம் கண்டின் புதல்வர் அஹ்மத் சட்டம்பியும் ஒருவராவார்.  அவர்களது முயற்சியின் பயனாக களதெனிய- வகுருவத்த அல்லது கஹட்டகஹவத்த என்னுமிடத்தில் ஒரு மஸ்ஜிதும் ஆரம்பத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. அம்மஸ்ஜிதுக்கு முதலிலும் கனவான் ஜே. பீ. காஸீம் பாவா அவர்களது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மஸ்ஜித் அமைக்கப்பட்டிருந்ததாகவும் பேசப்படும் கதைகளும் உண்டு.
          
உடத்தலவின்னையின் முதற்குடியிருப்புப் பகுதியாக விளங்கிய களதெனியிலிருந்து சமீபகாலமுதல்  மக்கள் உட்கட்டமைப்பு வசதிகள் கருதி இன்றைய  மெடிகேப்பிரதேசத்திற்குப்  படிப்படியாக நகர ஆரம்பித்திருக்கின்றனர். இக்குடிநகர்வு 1850களைத் தொடர்ந்துள்ள தசாப்தங்களிலிருந்து ஆரம்பமாகியிருக்கின்றது என்பர். தற்போது சனச்செறிவுமிக்க ஒரு குடியிருப்பாக அபிவிருத்தியடைந்து வரும் உடத்தலவின்னை மெடிகே, பள்ளேதலவின்ன, ஜம்புகஹபிட்டிய, தொரகமுவ, மீகம்பான, உடுராவன, வியனமுல்ல ஆகிய சிங்களக் கிராமங்களை எல்லைகளாகக் கொண்டமைந்திருக்கின்றது. குடிசன அடர்த்தி காரணமாக மெடிகேக்குடியிருப்புப் பகுதி அளுகொள்ள, கைராத் பிளேஸ், பனகேமுதுன, கொஸ்வத்த, ரட்டகஹவத்த, மெகொடகம்மெத எனப்பல பகுதிகளாக இன்று விஸ்தீரணமடைந்திருப்பதைக் காணலாம்.   முஸ்லிம்கள் செறிவாக வாழும் குடியிருப்புப் பகுதிகளான களதெனிய, உடத்தலவின்ன, உடத்தலவின்ன மெடிகே ஆகிய மூன்று கிராம அதிகாரிப் பிரிவுகளிலும் சுமார் ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் வாழுகின்றனர்.  குடியிருப்பாளர்களது வம்சாவளிப் பெயர்களை நோக்குமிடத்து அவர்கள் சிங்கள அரசர்களது காலம் முதல்  புகழோடு வாழ்ந்த ஒரு பிரிவினர் என அடையாளப்படுத்த முடிவது  சிறப்புக்குரியதாகும்.   அவற்றுள்,

மீராக் கண்டு முகந்திரம்லா கெதர
ஈசாக்கு முகந்திரம்லா கெதர
சட்டாம்பி லெப்பேலா கெதர இஸ்மாயில்
கங்காணம்லா கெதர
அடப்பயலா கெதர
அளுத்மெடிகே விதானலா கெதர
பட்டாணி விதானலா கெதர
ரவன்ஒய ஆரச்சிலா கெதர
ஹெட்டிவிதானலா கெதர
அபூபக்கர் கம்மஹேலா கெதர
தொம்பகொள்ள விதானலா கெதர
முகந்திரம்லா கெதர
முத்துக்கண்டு பிதானலா கெதர
பீh;புள்ளே விதானலா கெதர
அலித்தம்பி விதானலா கெதர
கோணகலள கெதர
ஆதம் புள்ளயார் கெதர
கலந்தா;லா கெதர
பட்டியகம கெதர
கொண்டதெனிய கெதர
உகுரஸ்ஸபிடியே கெதர
ஜாவலா கெதர
வேஉடயலா கெதர
கொண்டதெனிய முதியான்ஸேலா கெதர
மீரா நைனலா கெதர
அபூபக்கள் புள்ளயார் கெதர
சட்டாம்பி இஸ்மாயில்லா கெதர
நிதுனே முதுனே கெதர
முஹம்மத் மீரா நைனலா கெதர
நாகொள்ளா கெதர
சின்னப்புள்ளயார்லா கெதர
கம்மஹேலா கெதர
ஹபீப் கம்மஹேலா கெதர
போகஹமுல கெதர
கலஹவத்தே கெதர
பில்லாவே கெதர
அலித்தம்பிலா கெதர
கீரப்பனே கெதர
காலேவத்தே கெதர
கெப்பட்டிங்கவே கெதர
கல்கெட்டியே கெதர
பட்டியகம கெதர
களஹிட வாப்புத்தன்னே கெதர
அலுத்மெடிகே முகந்தரம்லா கெதர அஹ்மத்
கங்காணம்லா கெதர அசனாபுள்ளே காதர் ஸாஹிபு
என்பன சில.

குறிப்பிடப்பட்ட வம்சாவளிப் பெயர்களோடு முஹந்திரம், விதான, கம்மஹேலா, நைதே, ஆரச்சி, சட்டாம்பி, கங்காணம் போன்ற பதவி வழிப் பெயர்களும்  கோணகல, வேஉட, கொண்டதெனிய, உகுரஸ்ஸபிட்டிய, பட்டியகம, அளுத்மெடிகே, தொம்பகொள்ள போன்ற இடப்பெயா;களும்  அவர்களது நீண்டகால இருப்பையே உறுதி செய்வதாக விளங்குகின்றன.  சட்டாம்பிரால எனப்படுபவர் அரசரின் மிக நெருக்கமான தொடர்பாளராகப் பணிபுரிந்தவர் என   எழுத்ததாளர் "தேவி" குறிப்பிடுகின்றார்.

“There were ten Sattambi -Ralala  under the Diyawadana Nilame  of the palace. Of whom to had to be in constant attandance  upon the king. They took care to the kings bath and poured water upon him. Those of the best families being permitted to touch him and wash his feet. They were the headman of the large number of persons attached to the department.” (Devi. P. 153)

கோல்புரூக் பிரபுவின் அரசியல் சீர்திருத்த சிபாரிசுகளைத் தொடர்ந்து இலங்கையில் அறிமுகமாகிய  காணிச் சீர்திருத்த நடைமுறைகளின் கீழ் 1863ம் ஆண்டு முதல் காணிகள் பதிவு செய்யப்படும் சட்ட நடைமுறைகள் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. அவ்வேளை காணி உரிமையாளர்கள் தாம் தொடர்ந்து வாழ்ந்த நிலங்கள் அல்லது வீடுகளை அடையாளப்படுத்துவதற்காக  வெதராலலா கெதர, விதானலா கெதர எனப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுவதுண்டு.  கெதர என்ற பதம் ஓரிடத்தில் நீண்ட கால இருப்பை  உறுதி செய்வதாகும்.  இவ்வாறு பதிவுசெய்யப்படும் ஆவணம் சிங்கள மொழியில் "ஒப்புவ"  என அழைக்கப்படுவதுண்டு. அதன் பொருள் இருவர் அல்லது பலரிடையே செய்யப்படும்  ஒப்பந்தமாகும். ஆங்கிலத்தில் அது deed என அழைக்கப்படுவதுண்டு.
(தொடரும்)

Post a Comment

0 Comments