Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் குழந்தைப் பாடல்கள்-24


கவர்சிக்கு அடிமையாதல்
(பெண்வழிச் சேறல்) 91
கவர்சிக்கு மயங்காதே கடமையை மறக்காதே!

கவர்ச்சியைக் கண்டு மயங்காதே!
கடமையைச் செய்ய மறக்காதே!
பெருமையைக் காக்க மறந்துவிட்டால்
சான்றோர் முன்னே தலைகுனிவோம்!

பணியும் நேரம் பணிந்துவிடு!
துணியும் நேரம் துணிந்துவிடு!
நாளை வருவதற் கஞ்சாதே!
இன்றைய முயற்சியில் வெற்றிபெறு!

அஞ்சி அஞ்சி வாழ்பவர்கள்
நல்லதைச் செய்யவும் அஞ்சிடுவார்!
வீணாய்ப் பொழுதைக் கழிக்காதே
அற்ப னாக மாறாதே!

தீமைக் கடிமை யாகாதே!
பெருமை இழந்தே தவிக்காதே!
கவர்ச்சியை விரும்பி வாழ்பவர்கள்
நற்பணி என்றும் செய்வதில்லை!

ஆணவத் திற்கு அஞ்சாதே!
நிதானந் தன்னை இழக்காதே!
சிந்தனை ஆற்றல் கொண்டவர்கள்
அறியா மையில் வாழ்வதில்லை!

சலனம் இழிவு(வரைவின் மகளிர்) -- 92
சலனம்  மாந்தருக்கு மாசு!

வேடம் ஏந்தும் இனியசொற்கள்
வேதனை தந்து துயர்தருமே!
வளத்தைக் கணித்துப் பழகுகின்ற
எண்ணம் கொண்ட மாந்தரிடம்
உறவை வளர்த்தல் தீதாகும்!

செல்வம் ஒன்றே குறியாக
பழகுவோர் பழக்கம் இருட்டறையில்
பிணத்துடன் உள்ளது போலாகும்!

பொருளை நாடி உறவாடும்
இன்பம் எல்லாம் இன்பமல்ல!
அருளை நாடும் அறிவாளர்
உள்ளம் இதனை ஏற்காது!

ஆற்றல் செறிந்த அறிவுடையார்
ஈனத் தனத்தை விரும்பமாட்டார்!
ஒழுக்கம் நிறைந்த சான்றோர்கள்
பாதை தவறி நடப்பதில்லை!

மனத்தை அடக்க முடியாதோர்
மனிதத் தன்மை இழந்திடுவார்!
வஞ்சகந் தன்னைப் புரியாமல்
மயங்கித் திரியும் அற்பனுக்கு
கண்டவை எல்லாம் இன்பமாகத்
தெரியும் அனலில் புழுவாவான்!

ஒழுக்கம் மறந்தோர் பாதையிலே
நடப்பது வாழ்வின் நரகமாகும்!
தீய ஒழுக்கம் சூதாட்டம்
மயக்கம் ஏற்றும் கள்ளினங்கள்
இந்த மூன்றும் தீயவர்கள்
விரும்பிப் போற்றும் நட்பினமாம்!
திருக்குறள் குழந்தைப் பாடல்

கள் உண்ணாமை--93
போதைதரும் இன்பமெல்லாம் இன்பமல்ல மன்பதையே!
தூதனுப்பு மனதிற்குத்  தூக்காதே மதுக்கோப்பை!

போதைக் கடிமையாய் மாறிவிட்டல்
மதிப்பை இழந்தே தவித்திடுவார்!
பகைவர் கூட அஞ்சமாட்டார்!
சான்றோர் மதிப்பதைப் புறக்கணித்தால்
குடித்தே இங்கே அழிந்திடலாம்!
போதைப் பழக்கம் உள்ளவரா?
பெற்ற தாயே வெறுத்திடுவார்!
சான்றோர் எப்படிப் பொறுத்திடுவார்?

குடிக்கும் அற்பனைக் கண்டுவிட்டால்
நாணம் என்னும் பண்பரசி
உடனே வெறுத்தே ஓடிடுவாள்!
பொருளைக் கொடுத்துக் குடிப்பவர்கள்
தனது நிலையை மறந்தேதான்
செய்யும் மடமைச் செயலாகும்!

உறங்கும் நிலையில் உள்ளவர்கள்
செத்தவ ருக்கே இணையாவார்!
போதைப் பொருளைக் குடிப்பவர்கள்
நஞ்சுண் போர்க்கே இணையாவார்!
மறைவாய் இருந்து குடித்தாலும்
ஊரார் பார்த்தே இகழ்ந்திடுவார்!
போதை என்பதை நானறியேன்
என்றே சொன்னால் அதன்மயக்கம்
உடனே அவனைக் காட்டிவிடும்!
குடியை நிறுத்தெனும் அறிவுரையோ
நீரில் மூழ்கி உள்ளவனைத்
தீவட்டி கொண்டு தேடுவதாம்!
மயங்கிக் கிடக்கும் அவலத்தைப்
பார்ப்பவன் குடித்தால் தனக்குமிந்த
நிலைதான்  என்றெண்ணிப் பாரானோ?
திருக்குறள் குழந்தைப் பாடல்

சூது -- 94
சூதும் சூழ்சியும் நிம்மதிக்கு வேட்டுவைக்கும்!

வெற்ரி இங்கே கிடைத்தாலும்
வேண்டாம் என்றும் சூதாட்டம்!
தூண்டில்  உணவை மீனிங்கே
விழுங்கிச் சிக்கிய நிலையாகும்!

ஒன்றைப் பெற்றால் கவர்ந்திழுக்க
நூறை இழக்கும் சூதாடி
வாழ்வில் ஏற்றம் பெறுவதில்லை!

சூதாட் டத்தில் உருள்கின்ற
காயைப் போல செல்வமெல்லாம்
பகைவர் கைக்குள் உருண்டேதான்
சென்று தங்கும் நிலைகாண்பார்!

இழிவைத் தருவது சூதாட்டம்
அதுவே வறுமையின் வேராகும்!
சூதுக் கருவி, இடந்தன்னைத்
தீய செயலைத் தொடர்பவரோ
செல்வம் இழந்தே பரிதவிப்பார்!

சூதின் வலையில் விழுந்தவர்கள்
பசியால் வருந்தித் துடித்திருப்பார்1
சூதுக் களத்தில் மெய்மறந்தால்
பண்பும் சொத்தும் பறந்துவிடும்!
பொருளை அழிக்கும்! பொய்வளரும்!
ஊரார் நகைப்புக் குள்ளாக்கும்!
புகழை, கல்வி, செல்வத்தை
உணவை, உடையை இழந்திடுவார்!

இழக்க இழக்க சூதாட்டம்
கவர்ந்தே இழுத்துப் பாழாக்கும்!
துன்பந் தன்னில் துடித்திட்டால்
உடலின் மீது ஆசைவரும்!
திருக்குறள் குழந்தைப் பாடல்

மருந்து --- 95
முறையாக உண்போம்! உடல்நலம் காப்போம்!

வாதம் பித்தம் கபமெல்லாம்
சரிசம மாக இல்லையெனில்
தேகந் தன்னை நோய்கள்தான்
சுற்றிச் சுற்றி மொய்த்திருக்கும்!

உண்ட உணவு செரித்தபின்பு
உண்டால் மருந்தே தேவையில்லை!
செரித்த பின்பு உணவுகளை
அளவுடன் உண்டால் தீர்க்காயுள்!

செரித்த பிறகே உடல்விரும்பும்
உணவை அறிந்தே பசித்தபின்பு
உண்டால் நலமே உண்டாகும்!
ஒவ்வா உணவைப் புறக்கணித்து
அளவுடன் என்றும் சாப்பிட்டால்
உடலை நோய்கள் தீண்டாது!
அளவாய் உண்டால் நோயில்லை!
அதிகம் என்றால் துன்பந்தான்!

எடுக்கும் பசிக்கு ஏற்பத்தான்
அளவாய் உண்டால் தொல்லையில்லை!
அளவை விஞ்சினால் தொல்லைதான்!
நோயை அறிந்து, காரணத்தைக்
கண்டு, தீர்க்கும் முறையறிந்து
சிகிச்சை தருவதே மருத்துவமாம்!

வயது, தேகத்தின் தன்மைகள்,
நோயின் காலம், தன்மைகள்
ஆய்ந்தே மருந்தைத் தரவேண்டும்!
நோயாளி, மருத்துவர், அன்புடனே
உற்றதுணை, மருந்து இவைநான்கும்
சிகிச்சை முறையின் பகுதிகளாம்!
(தொடரும்)

Post a Comment

0 Comments