
குறள் 66குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
மருமவன.. நம்ம வீட்டு சின்னக் கொழந்தைய்ங்க பேசுத மழலைப் பேச்சு இருக்க, அது கேக்கதுக்கு எம்புட்டு நல்லாருக்கும் தெரியுமா? அதை நாள் பூராம் கேட்டு ரசிச்சு சிரிச்சுக்கிட்டே இருக்கலாம்.
அந்த பேச்சையெல்லாம் கேட்டு ரசிக்காதவொதான், இந்த இசை நல்லாருக்கு, அந்த இசை நல்லாருக்குன்னு, ஜம்பமா சொல்லிக்கிட்டு இருப்பாவொ.
குறள் 69
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
தன்னோட மவன் ரொம்ப நல்லவன், பெரிய அறிவாளி ... இப்பிடில்லாம் பிறத்தியார் நாலு வேரு பெருமையா, சொல்லுதது பெத்த தாயோட காதுல விளுந்திச்சின்னா.. அப்பம் அந்த அம்மைக் காரிக்கு எப்பிடி இருக்குந் தெரியுமா... மருமவன?
அந்தப் புள்ளைய பெத்தெடுக்கும் போது எம்புட்டு சந்தோசம் இருந்துச்சோ, அத விட பல மடங்கு சந்தோசம் இதக் கேக்கும்போது, பெத்தவளுக்கு இருக்கும் .புரிஞ்சுதா மருமவன.
குறள் 86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
நம்ம வீட்டுக்கு ஒரு விருந்தாளு வந்தா, அவரை நல்ல ஒவசரிப்போம். வாய்க்கு ருசியா சாப்பாடுல்லாம் போடுவோம். சந்தோசமா வளி அனுப்பி வைப்போம். அடுத்தாப்ல வரப்போற விருந்தாளை எதிர்பார்த்து வாசல் பக்கம் ஆசையா காத்துக்கிட்டு இருப்போம். இப்பிடில்லாம் நடந்துகிட்டா, நாம மண்டைய போட்ட பொறவு மேல் உலகத்துல இருக்க தேவர்களுக்கு நாம ஒரு நல்ல விருந்தாளா இருப்போம்.
குறள்: 100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
பேசுததுக்கு ஒலகத்துல நல்ல வார்த்தை எம்புட்டோ இருக்கு. அதெல்லாத்தியும் விட்டுட்டு, கொஞ்ச வேரு ஏந்தாம் இப்பிடி மோசமான வார்த்தைகளையே பேசிக்கிட்டு அலையுதானுவொளோ தெரியல.
இது எப்பிடி இருக்குன்ன, நல்ல பளுத்த பளங்களை திய்ங்கிறத விட்டுட்டு செல சவத்துப் பயலுவொ புளிக்கிற காயை திம்பானுவொள்லா... அதை மாறி இருக்கு.
குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
யோவ்.. நீரு ஒரு இக்கட்டுல மாட்டிக்கிடுதேரு. அப்பம் பாத்து ஒரு ஆளு ஓடியாந்து ஒதவி செய்யுதாரு. நீரும் சிக்கல்ல இருந்து சுளுவா வெளிய வந்திருதேரு. அவரு பண்ணுன ஒதவி பாக்கதுக்கு ஒலகத்துக்கு வேணா சிறுசா தெரியலாம். ஆனா சரியான நேரத்துல ஒமக்கு கெடச்ச அந்த ஒதவி இருக்க .. அது இந்த ஒலகத்தை விட ரொம்பப் பெருசாக்கும்.
குறள் 108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
மருமவன...ஒனக்கு யாராது நல்லது என்னமும் செஞ்சிருந்தாங்கன்னா, அதை எந்தக் காலத்துலயும் நீ மறந்திரவே கூடாது.
ஒண்ணு ரெண்டு கெடுதல் கிடுதல், எப்பமாது, யாராவது செஞ்சு இருந்தாங்கன்னா, அதை அப்பமே நீ மறந்து தொலச்சிறணும்.. புரியுதுல்லா மருமவன.
(தொடரும்)
--------------------------------------------------------------------------
பாளை ப. இசக்கி ராஜன்.பற்றிய குறிப்புகள்
வயது..68. படிப்பு:
B.Com காப்பீடு பற்றிய படிப்பில் உயர்நிலை பட்டயப் படிப்பு
பிறந்த ஊர் : பாளையங்கோட்டை.
இப்போது இருப்பது..திருச்சி ஶ்ரீரங்கம்.
குடும்பம்: மனைவி,
ஒரு மகள். ஒரு மகன்.
மாணவப்பருவத்தில் பேச்சுப்போட்டியில் பரிசு..படிக்கிற காலத்தில் கல்லூரி மாணவர் சங்க ழஉதவித்தலைவர்.
எழுதுவதிலும் ஆர்வம் உண்டு.
அலுவலக மலர்களில் கட்டுரைகள் வந்துள்ளன.
"பாளையங்கோட்டை நினைவலைகள்" என்ற தலைப்பில் ஒரு நூல்
2018 டிசம்பரில் வெளியிடப்பட்டுள்ளது.. இன்னும்
இரண்டு மூன்று நூல்கள் அச்சேற ஆயத்தமாக உள்ளன..
படிப்பை முடித்தது.. 1974 ல். பணியில் சேர்ந்தது 9/1974. LIC நிறுவனத்தில் மட்டுமே பணி.
ஆந்திர மாநிலம் சித்தூரில்
1974ல் தொடங்கிய அலுவலகப்பயணம் 2013 ஜனவரி மாதம்
சென்னையில் நிறைவடைந்தது. 2013 ஜனவரியில் பணி நிறைவு. அப்போதைய நிலை துணை மண்டல மேலாளர்.
ஆந்திர மாநிலத்தில் ஐந்தரை ஆண்டுகள்,
கேரளத்தில் நான்காண்டுகள், கர்நாடகத்தில் இரண்டு
ஆண்டுகள், தமிழ் நாட்டில் 27 ஆண்டுகள்.
அலுவலகப்பணி.
கணக்குத்துறை, வாடிக்கையாளர்
சேவைத்துறை, மனித வள மேம்பாட்டுத் துறை, தகவல் தொழில் நுட்பத்துறை,
வணிகத்துறை என்று மாறுபட்டத்துறைகளில் பொறுப்பு.
8
மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் போட்டத்தின் தலைமைப் பொறுப்பில் மூன்றாண்டு
காலம்.
தமிழ்நாடு கேரளம் புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய எல்ஐசி தென் மண்டலத்தில் CLIA என்ற மார்க்கெட்டிங் சேனலின் தலைமைப் பொறுப்பு. இரண்டாண்டு
காலம்.
0 Comments