Ticker

6/recent/ticker-posts

நான் வாழும் வரம் தா!


விளைநிலமாய் இருப்பவன்
என்னை விதையாய் 
பாவிக்கிறான்.
நீங்கள் உங்களை 
மழையாய் பாவிக்க
எல்லோரும் பஞ்சம் 
பசியின்றி வாழ
நல்ல விளைச்சலைக் காணும்
பூமி.

காற்றே...
நீ உள்ளவரை
நான் வாழும் வரம் தா!

நிலவைக் காண 
வீதிக்கு வந்தேன்.
என்னைக் காண 
வீதிக்கு வந்திருக்கிறது 
நிலா...!

உன் கன்னத்தில் வழியும் 
கண்ணீரும்; 
என் இதழ்களின் ஈரமும்; 
இரண்டறக் கலந்ததில்
பேரின்பம் எனக்கு.

வாசமில்லா மலருக்கும் 
நேசமில்லா மனிதருக்கும்
என்றும் மகத்துவம் இல்லை.

முத்தம் தந்து 
நலம் விசாரிப்பாயெனில்; 
ஒவ்வொரு கணமும் 
சீக்குபட சம்மதம் எனக்கு.

ஒவ்வொருவருக்கும் 
ஒவ்வொரு முகம் 
அன்று நான் பார்த்த 
உன் முகம் இதுவல்ல.

அன்று 
நீ மனமுவந்தளித்த அன்பு 
இன்று என்னில்
சிறுகச் சிறுக காதலாய் 
மாறக் காண்கிறேன் நான்.

உன் துப்பட்டாவும் கூந்தலும் 
காற்றில் போட்டிப்போட்டு பறக்க 
உன் முகம் அச்சத்திலும்
நாணத்திலும் சிவக்க
நான் எதுவென்று ரசிப்பேன் 
பெண்ணே...!


Post a Comment

0 Comments