வாசகர்களுக்கு!
மர்ஹூம்நசீமா முஹம்மத் அவரகள் வேட்டையில் தொடராக எழுதிய, வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற "மோகத்தின் விலை "என்ற தொடர்கதையை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் பதிவேற்றுகின்றோம்.
வேட்டை
இனிமையான தென்றல் மலர்களின் தலை வருடி, அதன் சுகந்தத்தை காற்றில் கலந்து இதமாக வீசிய அழகிய காலை நேரம். ஆற்றின் சலசலப்புடன், பறவைகளின் கீச்சுக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருந்தன. ஆதவனின் கதிர்கள் அடிவானத்தில் தோன்ற, கருமையான இருள் மெதுவாக விலகத் தொடங்கியது.
சூரியோதயத்துக்காக காத்திருந்தாற்போல் திறந்திருந்த ஜன்னல் வழியாக அடிவானத்தை பார்த்தான் சிவராமன். சோர்ந்திருந்த அவன் கண்களில் சூரியன் வரவால் இலேசாக மின்னியது.
இரவு முழுக்க அவனை கவனித்துக் கொண்டிருந்த தாதி, உட்கார்ந்திருந்த நிலையிலேயே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். கட்டில் அருகே பாய் விரித்து உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பணியாள் ஆறுமுகம் கட்டிலின் அசைவின் ஓசையில் இலேசாக கண்ணைத் திறந்தான். தடுமாற்றத்துடன் எழுந்திருக்கும் சிவராமனை கண்ணுற்றதும் “ஐயா” என்று அழைத்தபடி சிவராமனின் கைகளை பற்றிக் கொண்டான்.
ஆறுமுகத்தின் கைகளைப் பற்றிகொண்டே, தாதியின் தூக்கம் கலைய வேண்டாம் என்று சைகையால் உணர்த்தி விட்டு மெதுவாக பால்கனியை நோக்கி நடந்த சிவராமன், அங்கிருந்த நாற்காலியில் சிரமத்துடன் அமர்ந்து கொண்டான்.
இளங்கதிரின் உதவியால் இனிய ஓவியங்கள் வண்ணமாக அடிவானத்தில் இறைவன் வரைகின்றானோ என்று எண்ணத் தூண்டும் காலை நேரத்தின் இனிமையை கவனித்தபடி, அன்றைய பொழுதினையும், அன்றைய வேதனைகளையும் வரவேற்கத் தயாரானான், சிவா என்றழைக்கப் படும் சிவராமன். வயது முப்பத்தி ஐந்துதான் என்றாலும் வயதை விட அதிகமான தோற்றத்துடனும், நோயின் தாக்கத்துடனும் இருந்தான்.
எஜமானின் தேவையறிந்த ஆறுமுகம், தேநீரையும் அவன் எப்போதும் எழுதும் கையேட்டுடன் பேனையையும் மேஜையில் வைத்து விட்டு நகர்ந்தான். சில நிமிடங்கள் இயற்கையுடன் ஒன்றிப் போனான் சிவா
சற்று நேரம் கழித்து, பெருமூச்சுடன் ‘அன்புடையவளே.. என்னிடம் நீ அன்புடன் இருந்தாயா என்று நானறியேன்’ என்று எழுதியவன் அதை அப்படியே அழித்து விட்டு, ‘எனக்கு உரிமையானவளே, உன்னை நான் மன்னித்து விட்டேன்”.என்று எழுதினான். கண்ணோரம் கசிந்த கண்ணீர் உயிராக அவனுடன் ஒட்டி உறவாடி இருந்த மனைவி தேவகியை நினைத்தது.
தேவகி! காதலுடன் அவனுடன் ஒன்றாய் கலந்தவள். பிரிவு என்பது என்றும் இல்லை என்று அவனுடனே ஒட்டிக் கிடந்தவள். அவனின் உதிரத் துளியை உருவமாக, உயிர்ப்பித்து கைகளில் தவழ விட்டவள். “எங்கே சென்றாளோ, என்ன ஆனாளோ..” பெருமூச்சுடன் கண்களில் கசிந்த கண்ணீரை துடைத்துக் கொள்கின்றான் சிவா. கண்ணீரைத்தான் துடைக்க முடியுமே தவிர, அவளைப் பற்றிய எண்ணங்களையும், துன்பத்தையும் துடைத்திட முடியுமா என்ன?
(தொடரும்)
மர்ஹூம்நசீமா முஹம்மத்
0 Comments