ஆசைப்படு... பேராசைப் படாதே!
அக்காலம் தொட்டு இக்காலம் வரை மனிதகுல வளர்ச்சிக்கு அடிப்படையானது ஆசையே! இந்த ஆசையே மனித இனத்தில் கருவாகி, உருவாகி, பின் திருவாகி உலகமே பரிணமிக்கின்றது எனில் அது மிகையாது... சமூக வளர்ச்சிக்கு அது தேவை! தனிமனித வாழ்க்கைக்கும் ஆசை தேவை... ஆனால் அது வரம்பு மீறும் போது பேராசையாக மாறிவிடுகிறது... அது பொது நலத்தில் இருந்து விலகி சுயநலத்திற்கு வித்திடுகிறது... அதனால் அனைத்து நலன்களும் பாழ்பாட்டுவிடுகின்றன. இதோ வள்ளுவப் பேராசான் கூறுவதைப் பாருங்கள்.... ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.(குறள் 370) என்பதன் மூலம்.என்றும் நிறைவடையாத ஆசையை நீக்கிவிட்டால், நமக்கு நிலைத்த இன்பம் கிடைக்கும் என்று விளக்குகிறார். இதனைக் கூறும் போது ஒரு கதை நினைவுக்கு கூறுகிறது.
ஒரு குடியானவன் ஒரு புதிய ஊருக்குச் சென்றான். அவ்வூரின் அழகு வளம் கண்டு தனக்கென்று சிறுநிலம் வாங்க, எண்ணி, ஊர்த் தலைவரை அணுகினார். அவர், குடியானவரிடம் ரூ. 1000 பெற்றுக் கொண்டு," எங்கள் ஊர் வழக்கப்படி உமக்கு “ஒரு நாள் நிலம் * தருகிறோம் என்று கூறினார். அப்படியென்றால் என்ன? என்று அவன் கேட்க,
"அதுவா? நீ இப்பொழுது புறப்பட்டு இருட்டுவதற்குள் எவ்வளவு நிலத்தை சுற்றி வருகிறாயோ... அந்த நிலமெல்லாம் உனக்குச் சொந்தமாகிவிடும்... ஆனால், இருட்டுவதற்குள் நீ புறப்பட்ட இடத்தை வந்தடைய வேண்டும்... இல்லையெனில் உனக்கு ஒன்றும் கிட்டாது ” என்று கூறினார்.
இதைக் கேட்ட அவனுக்கு மிகவும் பேராசை பிடித்துக் கொண்டது... அது யாரைவிட்டது. வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு அவன் ஓட ஆரம்பித்தான்... அழகிய மாந்தோப்பு, பூந்தோப்பு, தென்னந்தோப்பு, வயல் என ஓடிக்கொண்டே இருந்தான். ஆயிரம் ரூபாய்க்கு இவ்வளவு இடமா?
இந்த ஊர்க்காரர்கள் எத்தனை முட்டாள்கள் ? என எண்ணிய படியே மாலைவரை ஓடிக்கொண்டே இருந்தான். இருட்ட ஆரம்பித்து.. ஊர்த் தலைவரின் நிபந்தனை நினைவுக்கு வர, தன் கிளம்பின இடத்தை அடைய திரும்பி விரைந்தான். நீண்ட தூரம் வந்துவிட்ட படியால் கால்கள் தடுமாறின. இதயத்துடிப்பு தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. வியர்த்துக் கொட்டியது நா வறண்டது... கண்கள் இருண்டன... தள்ளாடியபடியே வந்தவன் மயங்கிக் கீழே சாய்ந்தான்... விழுந்தான், விழுந்தவன் எழவே இல்லை ....
இனி இவனுக்குப் புதைக்க ஆறடி நிலம் தான் தேவை என்றார் ஊர்த் தலைவர்... இன்று நம் அநேகரின் ஓட்டம் இப்படித்தான் இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் பணம், பணம் என்று ஓடுகிறோம். அந்த பணத்தைத் தேடுவதில் நம் ஆரோக்கியம் இழந்துவிடுகிறோம்... பிறகு அந்த இழந்த ஆரோக்கியத்தைப் பெற ஈட்டிய பணத்தை எல்லாம் இழந்துவிடுகிறோம்.... இது குறித்து நாம் சிந்திக்கின்றோமா?
கை நிறைய சம்பாத்தியம் உள்ளது ; ஆனால் உள்ளத்திலோ, கவலை! பிள்ளைகள் குறித்தும், குடும்பம் குறித்தும், வருங்காலம் குறித்தும் கவலை ; கடந்து போன நாட்கள், மீண்டும் திரும்புமா? வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரம் அல்லவா? அதைநாம் சாபமாக்கலாமா?
வாழ்வதற்குப் பொருள் தேவை தான் ! ஆனால், வாழ்வதிலும் ஒரு பொருள் தேவை அல்லவா? பொருளுக்காக ஓடி பொருளற்ற வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்? இதை உணர்ந்து, இயற்கை நமக்கு வழங்கிய வாழ்க்கையை, வரத்தை உணர்ந்து மகிழ்வுடன் வாழ்வோம். பிறரையும் மகிழச்செய்வோம்!நலம் பெற்று நீடுவாழ்வோம்!!(தொடரும்)


0 Comments