
ஒரு நாட்டின் மலைப்பாங்கான பிரதேசத்தில் காணப்படுகின்ற நகரங்கள்பொதுவாக உல்லாசப் பயணிகள் வந்து போகின்ற இடமாகும்.
வெப்பப்பிரதேசங்களில் வாழ்வோருக்கு இதமான குளிரில் தம் உடம்பை இலயிக்கச் செய்வதிலும், மலைகள், ஆறுகள், அருவிகள்,
வனாந்தரங்கள், பள்ளத்தாக்குகளை இரசிப்பதிலும் தீராத ஆர்வம்.
இலங்கையில் நுவரெலியாவை, மலேசியாவின் ஜென்டிங் ஐலண்ட்டையும் ஒத்ததாக தென்னிந்தியாவின் ஊட்டி காணப்படுகின்றது.
ஊட்டி, கொடைக்கானல் குளிர்காலத்து கொண்டாட்ட நகரங்களாகவும்,உல்லாசப் பயணிகள் அதிகம் வந்து போகின்ற இடங்களாகவும் கொள்ளப்படுகின்றது.
ஊட்டி, உதகமண்டலம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்துள்ளது.ஒத்தைக் கல் மந்து என்ற பெயரே உதகமண்டலமாகியதாகக் கூறப்படுகின்றது.
ஊட்டி என்றும், உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலமானது,தென்னிந்தியாவின் நீலகிரி மலைப்பிரதேசத்தில், நீலகிரி மாவட்டத்தின்தலைநகராகக் கொள்ளப்படுவதாகும்.
நீலகிரி மலையின் கிழக்குத் தொடர், மேற்குத் தொடர் சந்திக்கின்ற இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 7500 அடிகளில் உயர்ந்து காணப்படுகின்றது.
இலங்கையில் - இரத்தினபுரி பிரதேசத்தில் மாணிக்கக் கல் அகழ்வு இடம்பெறுவதுபோன்று நீலகிரி வனப்பிரதேசத்தில் தங்க அகழ்வு
இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.
உதகமண்டலம் என்பது வட்டவடிவில் அமைந்துள்ள நீர் என்பதைக் குறிக்கின்றது. இந்நகரைச் சுற்றிலும் ஏரிகள் காணப்படுவதே இதற்குக்
காரணமாக இருக்கலாம்.
12ம் நூற்றாண்டில் ஹோய்சாளர் இப்பிரதேசத்தை ஆண்டுள்ளனர். பின்னர் திப்பு சுல்தானின் மைசூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக
விளங்கிவந்துள்ளது.
18ம் நூற்றாண்டில் இப்பிரதேசம் ஆங்கிலேயர் வசமாகியதும்அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் காலத்திலேயே வலைந்து நெலிந்து செல்லும் தரைப்போக்குவரத்துப் பாதைகளும், புகையிரதப் பாதைகளும்
நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலேயரின் கோடைக்கால நகராக ஊட்டி விளங்கிவந்துள்ளமையாலேயே பாதை அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 7,62,141 பேர் இப்பிரதேசத்தில் வாழ்ந்துள்ளனர்.
தோடர், பணியர், படகர், குறும்பர், கசவர் போன்ற பழங்குடியினரின்பிரதேசமாகவும் இது கருதப்படுகின்றது.
பைகாரா நதி இப்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி பாய்கின்றது. தோடர் என்ற பழங்குடியினர் இந்நதியைத் தமது புனித நதியாகக்
கருதுகின்றனர்.
இடைக்கிடையே பல இடங்களில் அருவிகளாகக் கீழிறங்கி,இப்பிரதேசத்திற்கு இயற்கை எழிலைக் கொடுக்கின்றன. இறுதியாக இந்நதி இரண்டாகப் பிரிகின்ற இடத்தை பைகாராஅருவிகள் என்று அழைக்கின்றனர்.
இவ்வருவிகளில் ஒன்று 55 மீற்றர் உயரமானது. மற்றது 61 மீற்றர்உயரத்திலிருந்து பாய்கின்றது. ஊட்டியிலிருந்து 20 கிலோ மீற்றர்
தூரத்தில் பைகரா அருவிகள் காணப்படுகின்றன.
1847ம் ஆண்டில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இங்குள்ள பூங்காவில்பேப்பர் மரம், குரங்குகள் ஏறுமரம், 20 மில்லியன் வயதுள்ள அரிய
தாவரமான Fossil Tree என்பன காணப்படுகின்றன.
22 ஏக்கர் நிலப்பரப்பில் ஆறு பகுதிகளாக அமைந்துள்ள இப்பூங்காவை ஆங்கிலேயரான M.C. Ivor என்பவரே உருவாக்கியுள்ளார்.
இப்பூங்கா கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 அடி உயரத்தில் காணப்படுகின்றது.
1824ல் இங்கு செயற்கை ஏரி ஒன்று அமைக்கப்பட்டது. ஊட்டியின் முதல் ஆணையாளராக இருந்த ஜோன் சலிவான் என்பவரால்
1823-1825 காலப்பகுதியில் இது அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வேரியில் படகு சவாரி செய்யலாம். மின் ரெயில், குழந்தைகள் பூங்கா என்பனவும் இங்கு காணப்படுகின்றன. இங்குள்ள படகு இல்லத்தை
அரச சுற்றுலாத்துறை நிருவகித்து வருகின்றது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள அதிக உயரமான மலைச் சிகரமாக தொட்ட பெட்டா காணப்படுகின்றது. தொட்ட பெட்டா என்றால் கன்னட
மொழியில் பெரிய மலை என்பது பொருளாகும்.
கடல் மட்டத்திலிருந்து 8640 அடி உயரத்தில் அமைந்துள்ள இம்மலைச் சிகரம் 2623 அடி உயரமானதாகும்.
இங்கு வரும் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இம்மலையிலிருந்தே ஊட்டி, குன்னூர், வெலிங்டன், குந்தா, கோயம்புத்தூர் போன்ற இடங்களின் இயற்கை எழிலை இரசித்துச் செல்கின்றனர்.
இது தவிர ஸ்னோ டவுன் ஹில், கிளப் ஹில், எல்க் ஹில் போன்றனவும் இங்கு காணப்படுகின்ற மலைகளாகும்.
ஊட்டியிலுள்ள விஜயநகரம் என்ற இடத்தில் எல்க் ஹில் அமைந்துள்ளது. இங்கு 1919ல் அமைக்கப்பட்ட ரோஸ்பூங்காவில் முதன் முதலாக
17,256 ரோசாச் செடிகள் நடப்பட்டுள்ளன. தற்போது 2241 வகையான 20,000த்துக்கு மேற்பட்ட ரோசாச் செடிகள் காணப்படுகின்றமை சிறப்பானதாகும்.
இங்கு வரும் உல்லாசப் பயணிகள் பூங்கா வனத்தை இரசிப்பதற்காக நிலமாடமொன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத் தோட்டக்
கலைத்துறை இப்பூங்காவை நிருவகித்து வருகின்றது.
அவலஞ்சி ஊட்டியிலிருந்து 25 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில்தான் எமரால்ட் பொரஸ்ட் என்ற வனம் காணப்படுகின்றது.
அவலஞ்சிக் குன்றிலிருந்து இந்த வனக்காட்சியை மட்டுமன்றி, நதி, பள்ளத்தாக்கு, நீர்த்தேக்கம் போன்றவற்றையும் ரசிக்கலாம்.




0 Comments