Ticker

6/recent/ticker-posts

உன்னிலிருந்து சிதறும் துளிகளில் நான்!


நேருக்குநேர் நின்று 
பார்வையால் நகலெடுக்கும் 
ஒருத்தியின் காதலில் தற்போது 
விழுந்து கொண்டிருக்கிறான் 
ஒருவன்.

அவள் ஏறியிறங்கும் போது
இசைக்கருவியென 
ஒவ்வொரு படிக்கும் 
ஒவ்வொரு சுரங்களை 
என் செவிகளுக்குக் கடத்துகிறது 
மாடிப்படிகள்.

பெருமழைக்குப்பின் 
தேங்கும் நீரில் 
தரையிறங்கியது வானம்.

உன் முத்தங்களால் 
ஆற்றவேண்டிய ரணம்
என் இதழ்களில் உள்ளது.

உன்னிலிருந்து 
சிதறும் துளிகளில்
நான்.

காலம் சொல்லட்டுமென்று
தீர்மானித்ததைத்தான் இப்போது 
வாசித்துக் கொண்டிருக்கிறாய்.

சிறிதுநேரம் போக்குவரத்து 
இல்லாமலிருக்கட்டும்.
பெருவழிப் பாதையில்
மெதுவாய் நகரும் "நத்தைகள்".

மூடியிருக்கும் தட்டு
தானாகத் திறக்கிறது
கொதிக்கும் உலை.

இதுதான் கடைசி
இதுதான் கடைசியென்று
பலமுறை சொல்லிவிட்டாய்.
இதனால் மதிப்பிழந்தது
வார்த்தை மட்டுமல்ல
நீயும்தான்.

எனக்கு மட்டுமே கிடைக்குமென 
நம்பி கிடந்தது பலருக்கு 
கிடைத்திருக்கிறது வாழ்த்துகள்.

Post a Comment

0 Comments