Ticker

6/recent/ticker-posts

"மோகத்தின் விலை "- 11


“காலையிலேயே வர முடியவில்லை.  இப்போது தான் அவர் வெளியே சென்றார்.  இப்போது என்ன செய்ய?” என்றாள் தேவகி.

“அதற்கென்ன சீக்கிரம் கிளம்பு.  உனக்கு தேவையானவை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாயா?” என்றான் வெற்றி.

“ஆம்” என்று பதில் சொன்னவள், அவனிடம் எங்கிருந்து எப்படி வரவேண்டும் என்ற விபரங்களை கேட்டுக் கொண்டாள்.  பின் ஆறுமுகத்தை “வீட்டுக்கு வேண்டிய சாமான்கள் பட்டியல் இது.  சீக்கிரம் வாங்கி வா!” என்று விரட்டினாள்.  கண்ணனை உறங்க வைப்பதற்காக அவனின் அறையில் இருந்தாள் பணிப்பெண்.  அவசரமாக ஒரு சிறு காகிதத்தில் எதையோ எழுதியவள் அதை தன் கப்போர்ட்டில் வைத்து விட்டு, இதுதான் சமயம் என்பது போல், தான் ஏற்கெனவே தயாராக வைத்திருந்த சூட்கேசுடன் வீட்டை விட்டு வெளியேறினாள் தேவகி.  அவள் கவனமெல்லாம் ஆறுமுகம் வருமுன் கிளம்பியாக வேண்டும் என்று இருந்ததினால், கடைசியாக ஒருமுறையேனும் கண்ணனை பார்க்கக் கூடத் தோன்றவில்லை.  

வழியில் கிடைத்த ஆட்டோவில் ஏறி, பஸ் நிலையத்தை அடைந்து வெற்றி சொன்ன இலக்கமுள்ள பஸ்ஸினை அடையாளம் கண்டு உள்ளே உட்காரும் வரை மிகவும் படப்படப்பாக இருந்தாள்.  அவன் குறிப்பிட்டிருந்த படியே “மல்லிகைப் பந்தல்” என்ற இடத்துக்கு டிக்கட்டை வாங்கிக் கொண்டாள். 

அவன் குறிப்பிட்டிருந்த அந்த ‘மல்லிகைப் பந்தல்’ ஒரு சிறிய குக்கிராமம்.  அவள் வசிக்கும் இடத்தில் இருந்து கிட்டத்தட்ட ஆறு மணித்தியால தூரத்தில் அமைந்திருந்தது. முதன் முறையாக தனியாகப் பயணம் எனும் போது, மனதில் இலேசான நடுக்கம் இருந்தாலும், மோகத்தின் மயக்கத்தில், விரகத்தின் எல்லையில், தான் செய்வது தவறா, சரியா என்று யோசிக்க கூட அவகாசம் இன்றிப் போனவளாக இருந்தாள். பயத்துடன் மனது தடதடக்க யாரும் தன்னைக் கவனிக்கின்றார்களா என்று நோட்டமிட்டவள் தன்னை அறிந்தவர் எவருமில்லை என நிச்சயித்துக் கொண்ட பின்னும், நிலை கொள்ளாமல் உட்கார்ந்திருந்தாள்.

“எங்கே இருக்கின்றாய் கண்ணாளா?” என்ற அவளின் கேள்விக்கு, “உன் வரவுக்காக காத்திருக்கின்றேன் மகாராணி” என்று அவனிடம் இருந்து பதில் வந்திருந்தது. 

‘மகாராணி, ராஜகுமாரி’ என்றெல்லாம் அவன் அவளை அழைக்கும் போது, எங்கோ மிதப்பது போன்ற உணர்வினை பெறுவாள் தேவகி,  ‘சாப்பிட்டாயா?  தூங்கினாயா?’  என்று மட்டுமே வரும் கணவனின் ஆதரவான வார்த்தைகளுக்கும் மேல் அவள் எதிர்பார்த்த எதுவும் அவனிடம் இருந்து கிடைக்காத ஏமாற்றத்தின் பிரதிபலிப்போ, என்னமோ.. வெற்றியின் ஒவ்வொரு வார்த்தையும் அவளை இன்பலோகத்தில் மிதக்க விட்டது. அந்த மயக்கத்தில் கண்களை மூடி எதிர்கால இன்பக் கனவுகளில் மூழ்கத் தொடங்கினாள் தேவகி.

மதியம் இரண்டு மணியளவில் புறப்பட்ட பஸ், இரவு எட்டுமணியளவில் தன் இலக்கை வந்தடைந்ததும், “மல்லிகைப் பந்தல் இறங்குங்க” என்ற கண்டக்டர் சொல்லவும் கனவுகளில் இருந்து மீண்டவள் அவசரமாக பஸ்ஸை விட்டிறங்கி கண்களினால் வெற்றியைத் தேடினாள். ஆனால் அவள் எதிர்பார்த்த படி அங்கு எவரும் இருக்கவில்லை. வந்திறங்கிய அனைவரும்  அவரவர் தேவைகளை  நாடி பிரிந்து செல்ல, தனியளாக நின்றாள் தேவகி.
(தொடரும்)  






Post a Comment

0 Comments