குறள் 714
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.
மாப்ளை .. பெரிய பெரிய படிப்புல்லாம் படிச்ச பெரியவொ இருக்க எடத்துல நீயும் அவொளுக்கு சமமா நடந்து ஓந் தெறமையை காட்டணும்.
அதே நேரம், எல்லாத்தையும் கொஞ்சமா தெரிஞ்சவங்க மத்தியில இருக்கும் போது, ஒனக்குத் தெரிஞ்சதைப் பத்தி ரொம்பவும் பீத்தக் கூடாது. அவொ அளவுக்கு எறங்கி ஒண்ணுந் தெரியாத மாதிரி இருந்துக்கிடணும். புரியுதா மாப்ள.
குறள் 716
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
மாப்ள.. பல துறைகள் பற்றியும் கரைச்சு குடிச்சவங்க இருக்க அவையில் உரையாற்றும் போது, எதையும் தப்பா ஒளறிடக் கூடாது. அப்படி ஆயிடுச்சுன்னா, ஒழுக்க நெறியிலிருந்து, விலகி விழுந்த மாதிரி ஆயிரும் மாப்ள.
குறள் 742
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
மருமவன... நம்ம எல்லாருக்கும்,
குடிக்கதுக்கு நல்ல தெளிஞ்ச தண்ணி கெடைய்க்கணும். சாப்பாட்டுக்காக நல்ல வெளச்சல் தரக்கூடிய வயக்காடு இருக்கணும். நல்ல மழை பெஞ்சாதான ஊருக்கு நல்லது. அதுனால, ஊரைச் சுத்தி நல்ல ஒசரமான மலை இருக்கணும். எல்லாருக்கும் நெழல் குடுக்க நெறைய மரங்கள் இருக்க காடு வேணும்.
இது எல்லாமே இருந்துச்சுண்ணு வச்சுக்க மாப்ளை, அது தான் நமக்கு நல்ல பாதுகாப்பு..
குறள் 758
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
கீள ரெண்டு யானை சண்டை போட்டுட்டு இருக்கும்போது, மலைமேல நின்னு அதை வேடிக்கை பாக்கலாம். அது நமக்கு பாதுகாப்பு. அது மாதிரி தான் மாப்ள, கடன உடன வேங்காம, கைக் காசை வச்சு தொழில் செஞ்சோம்னு வச்சுக்க.. நம்ம நல்ல பந்தோபஸ்தா இருக்கலாம்.
குறள் 734
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
ஒரு நல்ல நாடுன்னா எப்பிடில்லாம் இருக்கணும் தெரியுமா மாப்ள? அங்க யாருக்கும் பட்டினி வரக்கூடாது. சீவனை எடுக்கக்கூடிய சீக்கு வரக் கூடாது. பக்கத்து நாட்டுக்காரன் வம்பு பண்ணக் கூடாது. புரிஞ்சுதா மருமவன!
குறள் 737
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
மாப்ள....
ஊத்துக்கு நல்ல ஊத்து.. மழைக்கு நல்ல மழை... இப்படி நல்ல நீர் வளம்.
இது கெடைய்க்கதுக்கு சுத்திச் சூழ மலை.
அந்த மலையில இருந்து வரக்கூடிய ஆறு..
மக்களது பாதுகாப்புக்கு நல்ல அரண்.
இதுல்லாம் ஒரு நாட்டுக்குத் தேவையான சங்கதிங்க மாப்ள.
(தொடரும்)
வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com
0 Comments