Ticker

6/recent/ticker-posts

குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-82 (செந்தமிழ் இலக்கியம்)


நல்லதையே பேசுவோம்! நல்லாப் பேசுவோம்
பேச்சு ஒரு கலை... உண்மைதான் சொல்லுக்கு உயிர் உண்டு. பேசத் தெரியும் ; வாய் இருக்கிறது என்பதற்காகக் கண்டதையும் பேசி மனங்களை இரணமாக்கி விடக்கூடாது. இதமான சொற்களால் வாழ்க்கை வசந்தமாகும்... குடும்பம் மகிழ்ச்சியில் பொங்கும்... நம் பேராசான் கூறுவதைப்பாருங்கள்....

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் (குறள்-96) என்பதன் மூலம், நன்மை தரும் இன்சொற்கள் இதமாக விருப்பத்துடன் புரிந்து கூறுபவர்க்கு தீயவைகள் குறைந்து நன்மைகள் பெருகும் என்கிறார்.
இதற்கு சான்றுகள் பல கூறலாம்... பொதுவாக நம் குடும்பங்களிலேயேக் காணலாம். பல மனக் கசப்புகளுக்கு வார்த்தைகளே காரணம் ஆவதை... சின்னச் சின்ன ஆறுதலான சொற்கள் எவ்வளவு பெரிய மாற்றம் தரும் என்பது புரியும்.

குடும்பம் ஒரு கோவில் ஆவது நம் வார்த்தைகளால்தான் என்பதை உணர முடியும்.

எல்லா வீடுகளிலுமே கல்யாணம் ஆன புதுசுல, சமயம் கிடைக்கும் போதெல்லாம் மனைவிக்கு வாழ்த்துக்கள் என்ன? பரிசுகள் என்ன? ஏக தடபுடலாக வாழ்க்கை நகரும்... ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, ஏன் மறந்தும் கூட போய் இருக்கும். இது எல்லாவீடுகளிலும் மிக எளிதான எதார்த்தம்.

இதை ஆரம்பகால நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கணவன்-மனைவிக்குள் பிணக்கம் ஏற்படும் வகையில் பேசிவிடக்கூடாது. சில நேரங்களில் குத்திக் காட்டும் வகையில் பேசுவதும், எரிச்சலுடன் பேசுவதும் கணவனை உங்களிடம் இருந்து மேலும் விலக்கிவிடும். ஒரு குடும்பத் தலைவனின் மனசு என்பது ஒரு இளம் மூங்கில் குருத்து போல... ஆரம்ப காலத்தில் அந்த குருத்துக்கு சப்போர்ட்டாக நிற்பீர்கள்.

ஆனால் நாளாக, நாளாக உறவுகளில் முரண்பாடு, பொருளாதார தேவைகளில் மந்தம், சரிவு, தோல்வி, ஏற்ற இறக்கம் என ஒவ்வொரு கல்லைக் கட்டி அந்தக் குருத்தில் மாட்டும்போது... அந்தக் குருத்து வளைந்து தரையைத்தொட்டு, கூன் கூட விழுந்திருக்கும்.

உங்களையும் விட்டுக் கொடுக்க முடியாமல், உறவுகளையும் விட்டுக் கொடுக்க முடியாமல், பொருளாதார தேவைகளைச் சமாளிக்க முடியாமல் அவர் தன் சுயத்தையே இழந்திருப்பார். இதுபோன்ற சமயத்தில நம் பேச்சால் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதைப் போல, குத்திக் காட்டுவதும், குறை, பிரச்சனைகளை மட்டுமே பேசுவதும் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். வார்த்தைகள் கவனமாக கையாள வேண்டிய ஏவுகணைகள். காரணம் “ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும்”. என்பர் பெரியோர். எனவே, வாழ்வில் நடந்த பாசிட்டிவான சொற்களையே பேசுங்கள்.

பெரிய பெரிய வெட்டுக் காயங்களுக்குக் கூட மருந்து மட்டுமல்ல. நல்ல ஆறுதலான வார்த்தைகள் மருந்தைவிட சிறப்பாக குணமாக்கும் ஆற்றல் உண்டு. உங்கள் தேவைகளை நயமாக வெளிப்படுத்துங்கள். ஏதாவது பணப் பிரச்சனை எனில் அதை பிரம்மாண்டமாய் விவரிக்காமல் சாதாரணமாகப் பேசுங்கள். நம்பிக்கை ஊட்டும் விதமாக, அன்பாகப்பேசுங்கள். அப்புறம் பாருங்கள். திருமணமானப் புதிதில் இருந்த வசந்தம் மீண்டும் மீண்டெடுக்கப்படும். பிறகென்ன வாழ்தல் இனிது. வாழ்தலின் புரிதலே இந்தப் பதிவு. மாற்றத்தை நம்மிடம் இருந்து தொடங்குவோம். நலம் பெற்று நீடுவாழ்வோம்.(தொடரும்)




Post a Comment

0 Comments