நீயா மனிதன்?

நீயா மனிதன்?

(நான்காவது அனைத்துலக இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி  மாநாடுவெளியிட்ட இலங்கை முஸ்லிம் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பான " பிறைத் தேனில் வெளியான கவிதை இது)          


நெறிக்குள் உயர்வு காணாது
நித்தில வாழ்வைப் பேணாது
தறிக்குள் சிக்கிய கவி யாகி
தடமும் புரண்டு புவிமீது
குறிக்கோளிழந்த மாமனிதா
கொள்கை ஒன்று உனக்குண்டோ
வெறிக்குள் மோப்பம் பிடித்தே நீ
வெற்றி ஏப்பம் விடுவது மேன்?

வரட்டு ஞானம் கூறுவதில்
வாய் வீச்சடித்துத் தேருவதில்
பெருக்கும் புரட்டு வார்த்தையினில்
பீத்தற் பெருமை பேசுவதில்
சிறக்கும் வழியைச் சுருக்குவதில்
சுயநல எண்ணம் பெருக்குவதில்
புவியில் உனக்கு நிகருண்டோ?
புதுமை பேசும் மாமனிதா!

நெஞ்சில் நேர்மை வரண்டு நீ
நிஷ்டைக் கணப்பி லவிந்து நீ
கொஞ்சும் மொழியால் ஏய்த்து நீ
கயமை மயக்கில் எரிந்து நீ
வஞ்சக் கொடுக்கால் குத்தும் நீ
வம்புச் செயலில் உழலும் நீ
நச்சுப் பாம்பாய் உலவும் நீ
நடிப்பால் தானா மா மனிதன்

சக்தி எல்லாம் ஒன்றான
சர்வ வல் லோன் அவன்கூறும்
முக்தி வழியை அறியாது
முதலோன் அருளைப் புரியாது
பக்தி வேஷம் துணையாகிப்
பாரை ஏய்க்கும் மா மனிதா
தக்க நிலையிற் சிந்திப்பாய்
தரணியில் நீயோ மா மனிதா!

Post a Comment

Previous Post Next Post