குறள் காட்டும் வழி
நாம் பெற்ற அறிவினால் பிறர் துன்பத்தை போக்க வேண்டும். எனவே ஓர் அர்த்தமான வாழ்வை அமைத்துக் கொள்ளத் தூண்டும் ஒரு சிந்தனைத்த தகவல்.
அறிவினான் ஆகுவதுண்டோ பிறதின் நோய் தன்நோய் போல் போற்றாக்கடை. (குறள்-315)
இதன் நேரிடைப்பொருள்:பிறர் துன்பத்தைத்தன் துன்பமாக எண்ணிப் போக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் ஒருவர் பெற்ற அறிவினால் எந்தப் பயனும் இல்லை. இது தொடர்பான ஒரு கதையைக் கேட்போம். நல்லாத்தூர் என்ற ஊரில் முத்து என்ற மாணவன் இருந்தான். நல்லவன். பிறர் துன்பப்படுவதைக் கண்டு வருந்துவான். அவர்களின் துன்பத்தைப் போக்க தன்னால் ஆன முயற்சியைச் செய்வான். ஒருநாள் மாலை நேரம் வீதிவழியாக வந்துக் கொண்டிருந்தான். அங்கே ஒரு குடிகார அப்பன் தன் படிக்கும் பிள்ளையை அடித்துக் கொண்டு இருந்தான். அவன் முரடன், குடிகாரன் என்பதை முத்து உணர்ந்தான். ஆனாலும் தன் மகனை அடிப்பதை நிறுத்தவில்லை.
முத்து முரனிடம் சென்று துணிவாகக் கேட்டான். “ஐயா ஏன் இந்தச் சிறுவனைக் கடினமாக அடிக்கிறீர்கள்' என்றான். அதற்கு அவன், இவன் என் மகன், இவனை ஆடுமேய்க்க அனுப்பினால், படிக்க பள்ளிக்கூடம் செல்வேன் எனக்கூறுகிறான். ஆடு நமக்குச் சோறு போடும். இவன் எப்போது படித்துப் பெரியவனாகி எனக்குச் சோறு போடுவது. “படிப்பா சோறு போடும்” என்றான்.
முரடன் மீண்டும் சிறுவனை அடிக்க ஆரம்பித்துவிட்டான். முத்துவின் மனம் வேதனைப்பட்டது. முரனிடம் சென்றஅவன் ஐயா! இந்தச் சிறுவனை இன்னும் எத்தனை அடி அடிப்பதாக உள்ளீர்?” என்றுக் கேட்டான். கோபத்துடன் திரும்பிப் பார்த்த முரடன் “இவனை எத்தனை அடி வேண்டுமானாலும் அடிப்பேன். நீயார் அதைக் கேட்பதற்கு?” என்று கத்தினான்.
அதற்கு முத்து “இவனைப் படிக்க வைத்தால் உமது வயோதிக காலத்தில் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் உதவியாக இருப்பான். ஊரார் உனக்கு உதவும் முன் இவன் உதவுவான். இவன் ஒரு கலெக்டராக ஆனால் நாட்டுக்கே உதவுவான். எனவே, இன்னும் எத்தனை அடி அவனை அடிக்க உள்ளீர்களோ, அத்தனை அடியும் என்னை அடியுங்கள்" என்று கெஞ்சினான். முரடன் மனம் நெகிழ்வானான். தன் மகனுக்காக, அவன் உயர்வுக்காக, இந்த மாணவன் அடிவாங்கவும் வருகிறானே ! என்று வெட்கினான். ஏன்நம்மகனைநாமே படிக்கவைக்கக் கூடாது.
இதற்குத் தடை மதுதானே! இன்று முதல் மது அருந்துவதில்லை என மனதில் உறுதி கொண்டு, முத்துவிடம் கூறி உறுதியும் அளித்தான். அதேபோல் அவன் தன் மகனையும் கலெக்டராக உருவாக்கினான். பிறர் துன்பத்தை ஒரு தந்திரம் செய்தாவது தடுக்க வேண்டும் என்று வள்ளலாரும் கூறுகிறார். பிறர் துன்பத்தைத் தடுக்க ஒரு உபாயம் செய்வோமா ! நீடு வாழ்வோம் நலமுடன்!
(தொடரும்)
வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com
0 Comments