வலியைச் சொல்ல
சொற்களற்ற போது
கண்ணீர்ச் சிந்துகிறேன்.
தேனருந்தும் பூவிடமிருந்து
தொலைத்த நிறங்களைக் கையாடல்
செய்கிறது பட்டாம்பூச்சிகள்.
தனக்கென
வாழாத தனிமரம்
தோப்பானது.
என் காதல்
உன் காதலாகும் நாளில்...
வலியேதுமில்லை இதயத்தில்.
என் மடியிறங்கிய
சருகுக்கு விபத்தேதும்
நிகழாத காரணத்தால்
மற்றொரு சருகினைத்
தரையிறக்குகிறது மரம்.
நிலவில்
என் பெயரெழுதிய
நாள் முதலாய் தேயத் தொடங்கியது.
உன் பெயரெழுதிய
நாள் முதலாய் வளர்கிறது.
பின்பொரு நாளில்
என் சார்பாக
உனக்கொரு சேதிவரும்.
அச்செய்தி
உன்னையழச் செய்யுமானால்
அதற்கு நான் மட்டும்
பொறுப்பாளியல்ல நீயும்தான்.
அவளென் மார்பில்
சாய்ந்தவேளை
என் சட்டைப் பூக்களில்
அவளின் வாசனை.
ஒரு திரி எரிகிறது
ஒரு மெழுகு கரைகிறது.
அறை முழுவதும் வெளிச்சம்.
மேலமரும் பட்டாம்பூச்சிக்கு
தற்காலிக
மெத்தையாகிறது பூ...!
கடலில் கலப்பதைவிட
நிலத்தில் சேருவதே
நதிக்குப் பெருமை.
நீ பட்டம் நான் நூல்கண்டு.
ஆட்டம்போடுகிறது
நம் காதல்வால்.
நிர்வாண நதிக்கு
ஆடைபோர்த்தி அழகு பார்க்கிறது.
மழைவெள்ளம்.
விருப்பத்தின் பொருட்டு
மனிதனானப் பறவை அவ்வமயம்
மானுடத்தின் பெருவலியுணர்ந்தது.
இருக்கும் ஐந்தை பிடுங்கியவனுக்கு
இனி வரப்போகும் ஐம்பதை
பிடுங்கவும் வழிதெரியும்.
எங்கிருந்தோ வந்த வண்டு
பூவில் தேனும் எடுக்குது
பூவுக்கு முத்தமும் கொடுக்குது.
நதியைக் கடந்து
வந்தவளின் கால்கொலுசில்
ஈரம்நயக்கப் பயணிக்கிறது நதி.
-------------------------------------------
வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com
0 Comments