எவரின் பாதிப்பையும் அறியாத, அவற்றைப் பற்றி சிறிதேனும் கவலைப் படாத வெற்றி என்ற பெயரில் தேவகியின் வாழ்க்கையை சீரழித்த கெட்டிக் காரனோ வேறொரு பெயரில் புதுக் கணக்கை தொடங்கி இருந்தான். கவிதைகள் என்ற பெயரில் பலவீனமான பெண்களுக்கான வேட்டைக்காக வலையை விரிக்கத் தொடங்கியும் இருந்தான்.
எது எப்படியோ, காமத்தீயின் கோரப் பிடியில் தன்னையும், தன் உயிரையும் இழந்த ஒரு அபலையின் பிள்ளை, ஆசிரமத்தில் தாய் தந்தையரை இழந்த அனாதையாக கண்ணன் என்ற பெயரில் வளரத் தொடங்கினான். நாளை அவனின் வாழ்க்கை எப்படி அமையுமோ, என்னவாகுமோ என்ற கவலையில் ஆறுமுகம் வீழ்ந்தான்.
எவர் கைக்கும் எட்டாத சிவாவின் படைப்புக்கள் பரண் மேலும், அவன் ஒழுங்காக அடுக்கி வைத்த செல்பிலும், சில மேஜையின் மேலுமாக கிடந்தன. பூதம் காத்த புதையலைப் போல், தினமும் தூசு தட்டி, சிவா எழுதிய எழுத்துகளுக்கும் காவலனாக ஆற்றின் அருகே அமைந்த சிவாவின் அமைதியான வீட்டில் தனியனான் ஆறுமுகம்.
சிவாவின் மறைவை அறிந்த பின் முட்டாள் உலகில் ஒரு வேளை அவன் கதைகள் மிகவும் பிரபல்யமும் ஆகலாம். அல்லது சில வேலை குப்பைக்குப் போகலாம். எதுவாயினும் கண்ணன் பெரியவனாகி வருவான், வந்தபின் அவனிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு கண்ணை மூட வேண்டியதுதான் என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்வான் தன் எஜமானனுக்கு விசுவாசியான ஆறுமுகம்.
சக்கரத்தை காலில் கட்டியது போல் ஓடிய காலத்தின் ஓட்டத்தில் கண்ணனும் வளர்ந்திருந்தான். ஆசிரமத்தில் அவன் படித்த நல்ல பாடங்கள் அவனை ஒழுக்க சீலனாகவும், இரக்க சிந்தை உள்ளவனாகவும் வளர்த்திருந்தது. அவ்வப்போது ஆறுமுகம் கண்ணனை பார்த்து விட்டு வருவது வழக்கம். சிவராமனையே பிரதி எடுத்தது போல் இருக்கும் கண்ணனின் தோற்றம் ஆறுமுகத்தின் மனதில் நெகிழ்ச்சி கொள்ள வைக்கும்.
இளங்காலைப் பொழுது. பறவைகளின் ஆரவாரத்துடன் எப்போதும் போல் உற்சாகத்துடன் அடிவானில் இருந்து எட்டிப் பார்த்தான் ஆதவன். அவன் கதிர் கரங்கள் இயற்கையை மெதுவாக தொட்டு அணைக்க, பூவனத்தில் பனித்துளிகள் ‘இதோ காணாமல் போகின்றோம்’ என்று மலர்களை முத்தமிட்டு மறையத் தொடங்கின.
எப்போதுமே அமைதியாக இருக்கும் வீட்டுத் தோட்டத்தை வெறித்து நோக்கியவனாக அமர்ந்திருந்தான் எஜமான் இல்லாத அவ்வீட்டின் காவலனான ஆறுமுகம்.
“எவ்வளவு கலகலப்பாக இருந்த வீடு. ஐயா சிவராமன் இருந்தவரை தனிமை என்பதே தெரியவில்லையே... எல்லாம் எஜமானியம்மா செய்த தவறு..” எண்ணங்களின் ஓட்டத்தால் அவனை அறியாமல் எழுந்தது பெருமூச்சு.
வெள்ளி இழைகளாக தலைமுடிகளும், முகத்தின் மூக்குக் கண்ணாடியும் வயோதிபத்தின் எல்லையில் ஆறுமுகம் இருப்பதை பறைசாட்டிக் கொண்டிருந்தது. உயிரோடு இருந்தவரை தன் எஜமான் உட்கார்ந்திருந்த சாய்வு நாற்காலியை பரிவுடன் தடவிக் கொடுத்தான்.
(தொடரும்)
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments