கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-10

கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-10


பரதன்உரை
அறத்தை, அருளை, முறையைத் துறந்தாய்!
உடன்பிறப்பே என்றான் பணிந்து.

தம்பி பரதனை ராமன் தழுவினான்!
அன்பிற்கும் தாழுண்டோ? சொல்.

தந்தை நலத்தை வினவியதும் விண்ணுலகம்
சென்றுவிட்டார் என்றான் கலுழ்ந்து.

ராமன் கலங்கித் தவித்தான்! கதறினான்!
கானகமே வாடியது காண்.

ஆட்சியை விட்டுவிட்டு ஓய்வெடுத்தல் இதுதானோ?
கூட்டின் தவமிதுவோ? கூறு.

அனைவரும் தேற்றி இறுதிக் கடனை
வினையாற்றச் சொன்னார் உணர்ந்து.

சீதையின் தாள்பணிந்து நின்றான் பரதன்தான்!
சீதையும் தேற்றினாள் அங்கு.

ராமனை நாடாள வைக்க பரதனோ
ஆனமட்டும் சொன்னான் பணிந்து.

பரதன்வேண்டுதல்
நான்பிறந்த நாடு! எனக்குரிமை உண்டுதான்!
நாடாளும் மன்னனாக வா.

ராமன்மறுமொழி
தந்தையின் ஆணை வனவாசம் ஏற்றுவிட்டு
அங்கே வருகிறேன் நான்.

ஆண்டுகள் ஈரேழு நாடாள கட்டளை
நான்தந்தேன் தம்பி உனக்கு.                        

பரதன்மறுமொழி
ஆள்கின்றேன் அண்னா! உனதாணை ஏற்பேன்நான்!
வாழ்நாள் துயரம் இது.

உன்வருகை நாளொன்று தாமதமா?தீக்குளிப்பேன்!!
என்முடிவோ இஃதுதான் கேள்.

உறுதிமொழி தந்தான் இராமன்! பரதன்
வெறுமை சுமந்தான் உழன்று.

அண்ணா! உன்னுடைய பாதுகை இரண்டையும்
தந்தால் மகிழ்ந்திடுவேன் தா.

தந்தான் இராமன்! தலையில் பரதனோ
அன்பாய்ச் சுமந்துசென்றான் பார்.

அயோத்திக்குச் செல்லாமல் நந்தி ஊரில்  
அரியணை அமைத்தாண்டான் பார்.

பாதுகையை வைத்தான் அரியணையில்! நாள்தோறும்
காத்து வணங்கியாண்டான் காண்.
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post