“ஐயா.. பிறக்கும் எல்லா ஜென்மத்திலும் நான் உங்களுக்கு பணி செய்யவேண்டும்” என்று உள்ளம் உருகினான்.
வயோதிபம் காரணமாக தன்னால் இயலாததால் புதிதாக சமையலுக்கு ஒருவரை நியமித்திருந்தான் ஆறுமுகம். அடுக்களையினில் இருந்து ஆறுமுகத்தை எட்டிப் பார்த்த சமையல்காரர் ‘சாப்பாடு ரெடி’ என்று குரல் கொடுத்தார்.
“இருக்கட்டும் பா.. எப்போதும் போல கண்ணன் வந்த பிறகு. எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடலாம்” என்று பதில் கொடுத்தான் ஆறுமுகம்.
கண்ணன். அரும்பு மீசையும், குறும்புப் பார்வையுமாக புன்னகை தவழும் முகத்துடன் கட்டிளம் காளையாக வளர்ந்திருந்தான். வயதிற்கேற்ற சுறுசுறுப்புடன், தந்தை வளர்த்து விட்டு சென்றிருந்த தொழிற்சாலையை தன் பொறுப்பில் கொண்டிருந்தான். சிவராமன் இறந்த பின் ஆறுமுகத்தாலும், நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமான மானேஜரின் கவனிப்பிலும் தொழிற்சாலை பராமரிக்கப் பட்டுக் கொண்டிருந்தது.
ஆபிஸ், வேலைகளுக்கென நியமிக்கப் பட்டவர்களில் புதிதாக வேலைக்கு வந்தவள் தான் சரண்யா. காலத்தின் கோலமென நாகரிக வாழ்வு அவளை மிகவும் மாற்றி இருந்தது. நளினத்துடன் மனதை அள்ளும் வகையில் பேசுவதில் கைதேர்ந்தவளாகவும், கண்ணனின் தேவைகளை பார்த்து பார்த்து செய்வதில் மிகவும் கெட்டிக் காரியாகவும் இருந்தாள் சரண்யா.
அவளின் செய்கைகளின் அர்த்தம் தெரிந்தும் தெரியாதது போன்ற பாவனையில் தன் காரியமே கண்ணாக இருப்பான் கண்ணன். அவளை கண்டிக்க அவனுக்கு மிகவும் சங்கோஜமாக இருப்பதால் அவன் எதையும் கண்டுக் கொண்டது போல் காட்டிக் கொள்வது இல்லை.
கண்ணனின் எண்ணமெல்லாம் சில நாட்கள் முன்னம் நடந்த சம்பவத்தை அசை போட்டுக் கொண்டிருந்தது.. ஆறுமுகம் கொஞ்சம் இருமலுடன் சிரமப் படவே, தொழிற்சாலைக்கு செல்லும் வழியில் இருந்த மருந்தகத்துக்கு சென்றிருந்தான் கண்ணன். மருந்திற்கான காசை கொடுக்க காசாளரை அணுகிய நேரம் மருந்துக்கான சீட்டினை கையில் பெற்றுக் கொண்டு, அதற்கான பணத்தைக் கொடுக்காமல் பயத்துடன் மிரண்டு நின்றுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
காசாளர் “காசைக் கொடுங்கம்மா” என்றதும், “பணத்தைக் காணவில்லை” என்றாள் அவள் தட்டுத் தடுமாறி.
அவளின் குரலின் தடுமாற்றம் கண்ணனை ஈர்க்க கண்ணன் திரும்பி அவளை நோக்கினான். படபடத்த அவள் விழிகளில் தெரிந்த அந்த பயம், எங்கே அழுது விடுவாளோ என்பது போல் இருந்தது.(தொடரும்)
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments