புத்தர் தனது சீடர்களுடன் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் சென்றார். வழியில் அவர்கள் ஒரு ஏரியைக் கடக்க நேரிட்டது. ஏரியைக் கடந்து சென்ற பிறகு, புத்தர் தனது சீடன் ஒருவனிடம், “எனக்குத் தாகமாக இருக்கிறது. சிறிது நீர் கொண்டுவா!’ என்றார்.
ஏரிக்குத் திரும்பிச் சென்ற சீடன், அதில் சிலர் துணிகள் துவைப்பதையும் ஒரு மாட்டுவண்டி இறங்கிச் செல்வதையும் கண்டான். வண்டி சென்றதாலும் துணிகள் துவைத்ததாலும் ஏரி நீர் கலங்கிப் போய் அழுக்கடைந்து காணப்பட்டது.
கலங்கிய நீரை எப்படிக் குருவுக்குக் கொடுக்கக் கொண்டு செல்வது என எண்ணித் திரும்பிச் சென்றான்.
புத்தரிடம் ஏரி நீர் கலங்கியிருப்பது பற்றிக் கூறினான்.
சிறிது நேரம் கழித்து, புத்தர் மீண்டும் சீடனைக் கூப்பிட்டு, “இப்போது போய் ஏரியிலிருந்து குடிக்க நீர் எடுத்துக் கொண்டு வா!’ என்றார்.
குழம்பியிருந்த ஏரி நீர் தெளிவதற்கு ஒரு மணி நேரம் ஆனது.
பின்னர் அழுக்கெல்லாம் கீழே படிந்து நீர் தெளிந்து காணப்பட்டது.
பாத்திரத்தில் அந்த நீரை எடுத்துக் கொண்டு புத்தரிடம் கொண்டுவந்து கொடுத்தான் சீடன்.
நீரையும் சீடனையும் பார்த்த புத்தர், “குழம்பியிருந்த நீரை நீயா தெளிவாக்கினாய்? அதை அப்படியே விட்டுவிட்டதால் தானாகவே அது தெளிந்துவிட்டது அல்லவா? உன் மனமும் அப்படித்தான்… விட்டுவிடு! அது தானாகவே அடங்கி, தெளிவடைந்து விடும். இதுதான் இயற்கையின் இயல்பு. வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் உணர்ந்துகொள்ளப் பழகிவிட்டால் மனம் தெளிவு பெற்று வாழ்வே ஆனந்தமாகிவிடும்’ என்றார்.
ஓஷோ
0 Comments