புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-135

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-135


அப்போதுதான் தூரத்திலிருந்து வந்த அந்தச் சத்தம் அவரது காதுகளில் நுழைந்தது.

செரோக்கியின் மனைப்பக்கமிருந்து சிலர் கோஷமெழுப்பியவாறே வந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் ஏன் வருகின்றார்கள், எதற்காக சத்தமிடுகின்றார்கள் என்பது அவருக்கு அப்போதைக்கு  புரியாத புதிராகவே இருந்தாலும், பின்னர் அவர் அதனைப் புரிந்து கொண்டார்!

அங்கே செரோக்கி உட்பட புரோகொனிஷ் கிராமத்தின் இளைஞர் பலர் அணிதிரண்டு, தங்கள் கரங்களில் இலை ஏந்தி, கோஷமெழுப்பிக்கொண்டு மெதுமெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

களியாட்டத்திடலில் ஆதிகாலந்தொட்டு வளர்ந்திருந்த அந்தப் புராதன மரத்தின்  இலைகள் முற்றாக உதிர்த்திருக்க வேண்டும் என்பது அவருக்கு இப்போது புரிந்துவிட்டது!

அந்த மரம் எப்போது முற்றாகத் தனது இலைகளை உதிர்த்து விடுமோ, அப்போது வருடத்தின் இறுதி நாள் என்று காலாகாலமாக வனவாசிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அம்மரத்திலிருந்து உதிர்ந்து தரை தட்டிக்  கிடக்கும் இலைகளைப் பொறுக்கியெடுத்து, அவற்றை ஏந்திய வண்ணம்  இளைஞர்கள் வருட இறுதிநாளைக் கொண்டாடுவது மரபாகும்.

இப்படியாக  அந்தி சாயும் வரை  நாள்  முழுவதும் கிராமத்தைச் சுற்றி,  மூலை முடுக்குகளிலெல்லாம் கோஷமிட்டுக்கொண்டு இளைஞர்கள்  வருடத்தின் இறுதிநாளைக் கொண்டாடுவார்கள்!

தமது ஜாகை முன்றலுக்கு வந்த ரெங்க்மாவின் தாயும் தந்தையும், அந்த இளைஞர் கூட்டத்திற்கு   உற்சாகம் ஊட்டினர்!

இனி அடுத்தநாள் வருடப்பிறப்பை அப்பிரதேச மக்கள் அனைவரும் களியாட்டத்திடலில் ஒன்று கூடி தீ மூட்டுவர்!

கிராமத்து இளைஞர்களின் இப்பேரணியே கிராம மக்கள் அனைவரும் தீ மூட்டு விழா நிகழ்வின்  தயார்படுத்தலுக்கான முன்னறிவிப்பாகும்!


இப்பொழுது புரோகொனிஷ் கிராமமும், அதனைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும்  புதுவருடப் பிறப்புக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கின்றது!
(தொடரும்)



 


Post a Comment

Previous Post Next Post