முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் பிரிவு 16 மீதான விமர்சனங்கள் குறித்த ஓர் பார்வை -வீடியோ இணைப்பு

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் பிரிவு 16 மீதான விமர்சனங்கள் குறித்த ஓர் பார்வை -வீடியோ இணைப்பு

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் திருத்தங்கள் தொடர்பில் பல வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இன்றைய
சூழ்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரிவு 16 முக்கியமான பேசு பொருளாக உள்ளது. 


பிரிவு 16 இன் சாரம் என்னவெனில் "ஒரு திருமணமானது வலிதானதா எனத் தீர்மானிப்பதற்கு அத்திருமணம் பதியப்பட்டதா இல்லையா என்பது காரணமாகாது. அத்திருமணம் நடைபெறும் போது திருமணத்தின் திறத்தவர்கள் எந்தப் வகுப்பினைச் சேர்ந்தவர்களோ அந்த வகுப்பினால் தேவைப்படுத்தப்படுகின்ற நிபந்தனைகளை அத்திருமணம் கொண்டிருத்தல் போதுமானது. அவ்வாறு நிபந்தனைகள் பூர்த்தியாக்கப் படாதவிடத்து அத்திருமணம் வலிதற்றதாகக் கருதப்படும்.”

இதன்படி திருமணம் ஒன்றினை வலிதற்றதாக்குவதற்கான அடிப்படையாக 'மத்ஹப்'கள் இருக்கின்றன. உதாரணமாகத் திருமணம் செய்கின்றவர்கள் ‘ஷாபி 'மத்ஹப்' இனைப் பின்பற்றுபவர்களாக இருப்பின் அங்கு வலியின் சம்மதம் இன்றி நடைபெறுகின்ற திருமணம் வலிதற்றது. ஆனால் அவர்கள் ‘ஹனபி மத்ஹப்’ இனைப் பின்பற்றுபவர்களாயின் அத்திருமணம் வலிதானது. இங்கு முன்வைக்கப்படுகின்ற விமர்சனம் யாதெனில் இஸ்லாம் மார்க்கத்தில் பிரிவினை அனுமதிக்கப்படவில்லை, அல்குர்ஆன் முஸ்லிம்கள் பிளவு படுவதை வன்மையாக கண்டித்து எச்சரிக்கின்றது. 

இவ்வாறு இருக்க இந்தப் பிரிவினைவாதம் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதாகும். மேலும், இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தாம் பின்பற்றுகின்ற மத்ஹப்பற்றிய எந்த அறிவும் இல்லாமல் கண்மூடித்தனமாக அவற்றைப் பின்பற்றுகின்றனர், இன்னும் தான் எந்த மத்ஹபைச் சேர்ந்தவர் என்ற அறிவு இல்லாமலே பலர் வாழ்கின்றனர். இது இவ்வாறு இருக்க இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் என எடுகோள் கொள்வதும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் தான் எந்த மத்ஹப்பைச் சேர்ந்தவர் என நிரூபிக்கக் கோருவதும் அபத்தமான நடைமுறை என வாதிடுகின்றனர். 

அத்தோடு, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தான் எந்த மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்பதைத் தேர்வு செய்யும் சுதந்திரம் காணப்பட வேண்டும் எனவும் கூறுகின்றனர். அது மட்டுமன்றித் தான் விரும்பியபடி தன் திருமணத்தைச் செய்து கொள்ள தனது மத்ஹபை மாற்றிக்கொள்ள நிர்பந்திக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்கின்றனர் சிலர். இதற்கு ஆதாரமாக 'அப்துல் காதர் எதிர் ராசிக்' என்ற வழக்கினைக் காட்டுகின்றனர். இந்த வழக்கில் 15 வயதுடைய ஒரு பெண் ஹனபி மத்ஹப் இற்கு மாறி தனது 'வலி'யினைத் தானே நியமித்து திருமணம் செய்து கொண்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. ஏனென்றால் பராய வயதை அடைந்த ஒரு பெண் தனது திருமணத்தை வலியின் அனுமதி இன்றிச் செய்ய முடியும் என்பது ஹனபி மத்ஹபின் ஏற்பாடு என்கின்றனர்.

தற்போதைய முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தைத் திருத்துவதில் விமர்சனப் பொருளாகியுள்ள திருமண வயது மற்றும் வலியின் சம்மதம் தொடர்பிலேயே, பிரிவு 16 இனை அடிப்படையாகக் கொண்ட வாதத்தைச் சாதுர்யமாக முன்வைக்கின்றனர். அதாவது திருமணத்திற்கான வயது எல்லை இதுவென அல்குர்ஆன் மற்றும் ஹதீஸில் குறித்த ஒரு வயது நிர்ணயிக்கப்படவில்லை. மாறாகப் “பராயமடைதல்” என்ற சொற்பிரயோகமே பாவிக்கப்படுகின்றது. 

மேலும் அநாதைகளுக்கான சொத்துக்களை அவர்களுக்குக் கையளிக்கும் போது அதனைத் தாமாக நிர்வாகிக்கக் கூடிய 'அறிவு முதிர்ச்சி' உடைய வயதை அவர்கள் அடைந்திருக்க வேண்டும் என அல்குர்ஆன் வழிகாட்டுகின்றது.

இன்று ஒரு ஆணும் பெண்ணும் 18 வயதிற்குக் குறைவாக இருப்பின் அவர்கள் சிறுவர்கள் என ICCPR வரையறை செய்கின்றது. அதாவது அவர்கள் தாமாகத் தம்மை நிர்வாகித்துக் கொள்ளக்கூடிய தீர்மானங்களை எடுக்கும் வயதாக 18 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவேதான் வாக்குரிமை, ஒப்பந்தம் செய்யும் உரிமை போன்றவை 18 வயது பூர்த்தியான பின்னர் தான் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த அடிப்படையில் திருமணம் என்ற ஓர் ஒப்பந்தத்தைச் செய்வதற்கு 18 வயது நிரம்பும் போதே அவர்கள் தகுதி பெறுகின்றனர். அவ்வாறு 18 வயது நிரம்பும் போது ஹனபி மத்ஹபில் அனுமதிக்கப்பட்டவாறு 'வலி'யின்  சம்மதம் இன்றி ஒரு பெண் தனது திருமணத்தைச் செய்து கொள்ளத் தகுதி பெறுகிறார். எனவே வெறுமனே மத்ஹபுகளின் பிரிவினை பேசி ஒரு பெண்ணின் சுதந்திரத்தில் தலையிடத் தேவையில்லை என்று அமைகிறது இவர்களின் வாதம். 

இந்த அணுகுமுறை சரியானதா என நாம் சிந்திக்க வேண்டும். இலங்கையில் நடைமுறையில் இருக்கின்ற முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் தங்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் ஓட்டை தேடும் ஒரு முயற்சியாகவே இதனை நான் பார்க்கிறேன். இந்த விடயத்தை நாம் எவ்வாறு அணுகவேண்டும் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலாவதாக மத்புஹப்கள் சம்பந்தமாக நோக்குவோம். மத்ஹப்கள் அல்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் காலத்தால் பிற்பட்டவை. மத்ஹபுகளைத் தோற்றுவித்த இமாம்கள் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற ஹதீஸ்களை ஆதாரப்படுத்தி மார்க்கச் சட்டங்களை வரையறுத்துப் பின்பற்றுவதற்கு இலகுவாக ஆற்றுப்படுத்தியவர்கள். இதில் எந்த மத்ஹபும் ஒன்றுக்கொன்று பாரபட்சப்படுத்த முடியாதவை. மேலும் அவை மக்களைப் பிளவுபடுத்துவதற்காகத் தோற்றம் பெற்றவை அல்ல. எனவே மத்ஹபுகளின் அடிப்படையில் பிளவுபடுதல் என்பதை ஏற்க முடியாது. அது அல்குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் மாற்றமானது.  

அவ்வாறாயின் இதனை எவ்வாறு கையாள்வது? அதற்குச்  சமகாலத்தில் வாழ்கின்ற மார்க்க அறிஞர்கள் அழகிய வழிகாட்டலைச்  சொல்லித் தருகிறார்கள். அதாவது இன்று எமக்கு எல்லா மத்ஹபுகளும் கிடைத்திருக்கின்ற சூழ்நிலையில் ஒவ்வொரு சட்டத்திற்கும் ஆதாரமாக மத்ஹபுகள் சாட்டுகின்ற ஹதீஸ்களின் உறுதியான தன்மையினை அடிப்படையாக வைத்துக் குறித்த சட்டம் தொடர்பில் எந்த மதுஹபின் வழிகாட்டல் மிகச்சரியானது என்பதைக் கண்டறிய முடியும். எனவே அந்த வழிமுறையினைப் பின்பற்றி எமது சட்டத்தினை அமைத்துக் கொள்ள வேண்டும். 

உதாரணமாகத் திருமணம் ஒன்றில் மணமகளின் ‘வலி’யினுடைய சம்மதம் கட்டாயமானதா என்ற கேள்விக்கு, நான்கு மதுஹபுகளில் ஹனபி மத்ஹப் தவிர்ந்த ஏனைய மூன்று மத்ஹபுகளும் 'வலி'யின் சம்மதம் இல்லாத திருமணம் வலிதற்றது என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளன. நீதிமன்றம் ஒன்றில் நான்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகின்ற போது அவர்களில் மூவருடைய கருத்து ஒன்றாகவும் நாலாமவரின் கருத்து வேறு ஒன்றாகவும் இருப்பின் மூவரின் தீர்மானம் தீர்ப்பாக ஏற்றுக் கொள்ளப்படும். அந்த வகையில் பார்த்தால் வலியினுடைய சம்மதம் கட்டாயமானது என்ற முடிவுக்கு எம்மால் வர முடியும்.

மேலும் வலியினுடைய சம்மதம் அற்ற திருமணம் வலிதற்றது என்ற நிலைப்பாட்டிற்கு, மேலே சொன்ன மூன்று மத்ஹபுகளும் ஆதாரப்படுத்துகின்ற ஹதீஸ்கள் மிக உறுதியானவை. ஆனால் ஹனபி மத்ஹபில் இருக்கின்ற அனுமதிக்கு ஆதாரப்படுத்தப்பட்டிருக்கும் ஹதீஸ்கள் மேற் சொன்ன ஹதீஸ்களை விஞ்சும் அளவிற்கு உறுதியானவை அல்ல. எனவே மணமகளின் வலியினுடைய சம்மதம் திருமணம் ஒன்றில் கட்டாயமானது என்பதே உலமாக்களின் வழிகாட்டல். இதுவே சரியான அணுகுமுறையாகும். 

இதுவே அல்குர்ஆனின் வழியில் முஸ்லிம்களை ஒற்றுமை படுத்துவதாக அமையும். மத்ஹப்களின் அடிப்படையில் முஸ்லிம்களைப் பிரிக்க வேண்டாம், குறிப்பிட்ட மதஹபை ஒருவர் மீது திணிக்க வேண்டாம், அவர்கள் விரும்பியதை பின்பற்றி கொள்ளட்டும் என்பது ஒற்றுமைக்கு வழிகோலாது. மாறாக அப்பிரிவினையில் அவர்களை மேலும் நிலைத்திருக்கவே செய்யும். மட்டுமல்லாது அவை புதிய குழப்பங்களையும் தோற்றுவித்து விடும்.

அடுத்தது திருமண வயது தொடர்பான வாதம். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் சிறுவர்கள் என ICCPR Act குறிப்பிடுவதை அடிப்படையாக வைத்துச் சிறுவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், 18 வயதுக்கு முன்னரான திருமணங்கள் இதற்கு தடையாக இருக்கின்றன என்று வாதிக்கின்றார். எமது சமூகத்தில் இளவயதுத் திருமணங்கள் இல்லாமலாக்கப்பட வேண்டும், பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதற்குச் சட்டத் திருத்தம் தீர்வாக அமையுமா என்பது பிறிதாக விவாதிக்க வேண்டிய ஒரு தலைப்பு. 

அது அவ்வாறு இருக்க, 18 வயதுக்குக் குறைந்தவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்று வகைப்படுத்திச் சட்டத்தைத் திருத்துவது சரியான வழிமுறையா எனக் கேட்டால் இல்லை என்பதே பதில். ஏனெனில் இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவையில் ஒரு பெண் பாலியல் ரீதியான உறவினை ஏற்படுத்திக் கொள்ளச் சம்மதம் வழங்கக்கூடிய வயதாக 16 வயதைச் சட்டம் அடையாளப்படுத்துகிறது. இலங்கையில் கட்டாய கல்வி 14 வயது வரை மட்டுமே என மட்டுப்படுத்தி 14 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் வேலைக்குச் செல்ல அனுமதி இருக்கின்றது. இவ்வாறு இலங்கையின் பல சட்டங்களில் சிறுவர்களின் வயதெல்லை பலவாறு வரையறுக்கப்படுகிறது. இவை சமூகத்தில் இருக்கின்ற அவசியம் கருதிச் செய்யப்பட்டிருக்கின்ற விதிமுறைகளே அன்றிச் சிறுவர்கள் மீதான அடக்குமுறை அல்ல.  

இதேபோல் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திலும் திருமண வயதை 18 என நிர்ணயம் செய்ய முடியாத நிலை உள்ளது. 18 வயதுக்கு முன்னரான திருமணங்கள் சமூகத்தில் அவசியமாகின்ற சூழல் நிறையவே இருக்கின்றது. இது முஸ்லிம் சமூகத்தில் மட்டுமன்றி ஏனைய சமூகங்களிலும் இருக்கின்ற பிரச்சினை. இது பற்றியும் தனியான ஒரு தலைப்பில் உரையாட வேண்டும். 

நிற்க, வயதைப் பொதுப்படுத்திச் சிறுவர்களைப் பாதுகாக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு புதிய குழப்பங்களை விளைவிப்பதை அனுமதித்தல் ஆபத்தான பின் விளைவுகளைத் தோற்றுவிக்கும். வயது தொடர்பான அல்குர்ஆனின் வழிகாட்டல் கூட திருமணம் பற்றிய வயதைக் குறிப்பிடும் போது 'பராய வயது' (بلوغ - bulugh) எனவும் அநாதைகளுக்குச் சொத்தினைக் கையளிக்கும் வயது பற்றிப் பேசுகையில் 'அறிவு முதிர்ச்சியுடைய வயது' (رشد - rushd) எனவும் குறிப்பிட்டிருப்பதானது இவை இரண்டும் வேறு வேறாக நோக்கப்பட வேண்டியவை என்ற புரிதலை எமக்குத் தருகின்றது. அன்றி இவை இரண்டையும் ஒன்றிணைத்துக் குழப்பிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  

எமது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினுள், வேறு சில நிகழ்ச்சி நிரல்களில் இயங்குபவர்களால் உட்புகுத்த முயற்சிக்கப்படுகின்ற சில திருத்தங்களுக்கு இடமளிக்கும் பட்சத்தில் இறைவனால் வெறுக்கப்படுகின்ற பல அநாச்சாரங்கள் எமது சமூகத்திலும் இலகுவாக ஊடுருவ அது வகை செய்துவிடும். இஸ்லாம் நிலைநிறுத்த முயற்சிக்கின்ற ஒழுக்கம் மிகு சமூகம் ஒன்றின் ஆணிவேராக விளங்குவது குடும்பம் என்கின்ற கட்டமைப்பு. தனிமனித சுதந்திரம், பெண்களின் உரிமை, சுதந்திரம் என்றெல்லாம் கவர்ச்சியான கதைகள் பேசிக் குடும்பம் என்ற கட்டமைப்பைச் சிதைத்து விடுவதே இந்த மறைமுக சக்திகளின் நோக்கமாகும். அதற்கு அவசியமான சட்டத் திருத்தங்களையே இன்று இந்த சக்திகள் வேண்டி நிற்கின்றன. எனவே பொதுமக்களாகிய நாம் இது தொடர்பில் விழிப்படைய வேண்டும். எங்களுடைய குரல்கள் எங்களது உரிமைகளைப் பாதுகாக்க உரக்க ஒலிக்க வேண்டும்.


ibc தொலைக்காட்சியின் "செய்திகளுக்கு அப்பால்" நேர்காணல் நிகழ்ச்சியில்...!

Mrs. Zareena Abdul Azeez 
LLB (Hons), Attorney-at-Law,
International Law Practitioner (UK)
International Human Right Activist
Founder - Sri-Lankan (Muslim)Lives Matter, 
Democratic Civil Rights Movement.
General Secretary - Sri-Lanka Muslim 
Diaspora Initiative (UK)
Former Lecture -Faculty of Law 
University of Colombo.

Mrs. F. A. S. Fathima Shifana
LLB, Attorney-at-Law (Hon)
HND in International Relations



 


Post a Comment

Previous Post Next Post