புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -149

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -149



பத்து வயதில், அவ்வப்போது தந்தையுடன் பள்ளிவாசலுக்குச் சென்று வந்த ஞாபகம் இப்போது பெரியவரின் நினைவில் வந்து போகின்றது!

தனது தந்தை, அக்காலத்தில் 'கிரீடி'யில் வாழ்ந்துவந்த 'தீதிபாபா' வழித்தோன்றலில் ஏழாவது பரம்பரையில் வந்த 'பாபா' ஒருவருடன் நெருங்கிய நட்பு கொண்டவராக இருந்தார்.

இவர் 'பாபா'வின்   சீடராக இருந்ததால், தற்போது தன் வசமிருக்கும்   நூல்கள் அவரிடமிருந்து தந்தை பெற்றுக் கொண்டதாக இருந்திருக்கலாம்.  இந்த நூல்களைக் கொண்டே  அந்த நாட்களில் தந்தை 'பஆல்' பார்ப்பதிலும், இன்னபிற வைத்தியங்கள் செய்வதிலும் 'கிரீடி'யில் பிரசித்தி பெற்றிருந்தார்.

மகனையும் இழந்து, தன் நூல்களையும் இழந்துவிட்ட நிலையில் தந்தை என்ன பாடுபட்டிருப்பாரோ  என்று நினைக் கின்றபோது பெரியவரால் கவலைப்படாமல்  இருக்க முடியவில்லை!

சிறுபிராயத்தில்  குடும்பத்தாருடன் வாழ்ந்துவந்த பெரியார்,  திடீரெனத் தனிமைப்படுத்தப்பட்டு, எட்டுத் தசாப்தங்களாக மிருகங்களுடன் நட்புக்கொண்டு வாழும் நிலை எற்பட்டுவிட்டது. அந்த வாழ்க்கை முழுவதும் தியானம் செய்வதிலும், காலம் நேரம் பேனாது அவ்வப்போது தொழுவதிலும் கழிந்து போய்விட்டது.

மீதமுள்ள வாழ்க்கை  வனவாசிகளோடு கழிந்துபோய்விடும் என்று நினைக் கின்றபோது ஒருவகையில் அவர் மனநிறைவு பெற்றாலும், 'கிரீடி'யில் தான் வாழ்ந்த நகரத்து வாழ்க்கையை அவரால் எப்போதும் மறந்துவிட முடிவதில்லை.

அதிகாலையில்  'பாங்கு' ஒலி கேட்டதும், துயில்விட்டெழுந்து 'வுது' செய்து, தந்தையாருடன் பள்ளிவாசல்  சென்று வந்ததையும், அதன் பின்னர் பள்ளிக்கூடம் சென்று பாடம் படித்ததையும், பகல் போசனத்துக்குப் பின்னர் அந்திசாயும் வரை தனது கிராமத்து நண்பர்களுடன், அங்குமிங்குமாக ஓடியாடி விளையாடி வந்ததையும் நினைக்கும்போது, தவறிப்போய்விட்ட அந்த வாழ்க்கை திரும்பக் கிடைக்காது என்பதால், ஒருவகையில் அவர் கவலைப் படுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது!

முதுமை நிலையடைந்துவிட்ட தான், அந்த வாழ்க்கைக்கு மறுபடி செல்வதாயின், இர்வினின் நட்பு பிரதானமானது என்பதை அவரது உள்ளம் உணர்கின்றது.

தன்னால்  மறுபடி 'கிரீடி' செல்ல முடியாவிட்டாலும், இர்வினின் துணையுடன் ஏதாவதொரு நகரத்து வாழ்க்கையை மறுபடி கண்டுகொள்ளும் பாக்கியம் தனக்கு வரலாம் என்றதொரு  நப்பாசை அவரிடம் இருக்கத்தான் செய்கின்றது!

குகைக்கு வெளியிலிருந்து தனது கடந்த காலம் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்த பெரியவருக்கு, தனது தந்தை ஒரு காலத்தில் தேடிவந்த அரிய நூல் இந்தக் குகைக்குள்தான் இருக்க வேண்டும் என்ற நினைப்பு வரவே, மெல்லக் குகைக்குள் நகர்கின்றார்!
(தொடரும்)





 



Post a Comment

Previous Post Next Post