பேசியிருக்கலாமோ?

பேசியிருக்கலாமோ?


நாம் சரளமாகப் 
பேசிக் கொண்டோம் 
அவர்கள் மௌனமாக 
இருந்தார்கள் 

நாம் மௌனமாக
பேசத் துவங்கினோம்
அவர்கள் சத்தமாக
பேசினார்கள்

நாம் பேசாமலிருந்தோம்
தனிமையில்
அவர்கள் கூடிப் பேசினார்கள்

நாம் சேர்ந்திருந்து பேசலானோம்
நாளாக நாளாக 
நாம் மட்டுமே பேசிக் கொண்டோம்

பேசவேண்டிய வேளைகளில்
பேசாமலேயே இருந்தோம்
தேவையில்லாத இடங்களில்
பேச்சை வளர்த்தோம்

பின் நாம் சிருஷ்டித்த 
குரல்களிட மே
அதிகமாகப் பேசினோம்
அந்தக் குரல்களிலேயே
அகமகிழ்ந்தோம்
அந்தக் குரல்களை கேட்டே
அமைதியாகி வந்தோம்

இப்போதெல்லாம்
அந்தக் குரல்களே பேசுகின்றன
நம்மை பேசவிடாமல் 
அந்தக் குரல்களுக்கு புரியவில்லை
நாம் பேச வேண்டியது
நம்மிடம் மிச்சமிருப்பது

அவர்களுக்கு தெரியாமல்
நாம் பேசிக் கொள்ள
முயலுகிறோம்

நான் பேசுவது உனக்கு
கேட்கவில்லை
நீ பேச நினைக்கிறாய்
உன்னால் முடியவில்லை

பேச வேண்டிய காலங்களில்
பேசாமல் இருந்தோம்
பேச நினைக்கிறோம்
பேச்சு வரவில்லை

என் பிரியமானவளே!
பேச வேண்டிய நேரத்தில்
பேசியிருக்கலாமோ?

ஐ.தர்மசிங்
நாகர்கோவில்



 



Post a Comment

Previous Post Next Post