Ticker

6/recent/ticker-posts

சமுத்திரம்..!-AI.KAYALVILI-2-VIDEO


மாங்கல்யா திருமண மண்டபம்.

நாதஸ்வரங்களின் மங்களகரமான இன்னிசை முழங்க, அறுநூறுபேர்கள் உட்கார்ந்து இருந்த மண்டபத்தின் இருபக்கங்களிலும் வைக்கப்பட்டிருந்த அகன்ற திரைகள், முகூர்த்த நிகழ்வுகளை காட்டிக் கொண்டிருந்தது.

நேரம் மணி 11:00 

 'கெட்டுமேளம்... கெட்டுமேளம்...'

மணமகன், மணமகளின் கழுத்தில் தாலி கயிற்றை கட்டிய அதே நேரத்தில், மணமேடையைச் சுற்றி நின்றவர்கள் கையிலிருந்த அட்சதைப் பூக்களை தூவி, ஆசீர்வதித்துக் கொண்டனர்.

மகள் ரமாவின் கழுத்தில் தாலியை பார்த்ததும், நிமிர்ந்து என் கணவரை பார்த்தேன். 

அவரின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

கணவரை அழைத்தேன், நான்.

"என்னங்க... இங்கே வாங்களேன்..."

என்ன செண்பகம்..?
"நம்ம பொண்ணோட கல்யாணம், எந்த குறையும் இல்லாம நல்லபடியா முடிஞ்சுது. வந்தவங்களை எல்லோரையும் சாப்பிட்டு போகச் சொல்லுங்க..."

நான் சொன்னதும், சிரித்துக் கொண்டே நகர்ந்தார், என் கணவர்.

அந்தநேரத்தில்,

"அப்பா... இங்கே வாங்கப்பா..."

"என்ன ரமா...?"

"நாம எல்லோரும் சேர்ந்து ஒரு பேமிலி போட்டோ எடுத்துக்கலாம்ப்பா..."

ரமா, தாலி கட்டிய கணவனையும் அழைத்து, என் கணவரையும், என்னையும் சேர்த்து செல்பி எடுத்தாள்.

என் கணவர் மிகவும் சந்தோஷமாகவே காணப்பட்டார். 

எனக்கோ, ரமாவை பிரியும் வலியில் துடித்துக் கொண்டிருந்தேன். 

எதைப் பற்றியும் கவலைப்படாமல், எல்லோரையும் விசாரித்துக் கொண்டிருந்தவரை ஆச்சரியமாக பார்த்தேன்.

நேரம் மதியம் 2:30

"சம்பந்தி... இங்கே வாங்க..." மணமகனின் தகப்பனார், அழைத்தார்.

எனது கணவர் அவருகே சென்றார்.

"நல்லநேரம் மூணு மணியிலிருந்து நாலரை மணிவரைக்கும் இருக்குது. சரியா மூணுமணிக்கு இங்கிருந்து மாப்பிள்ளையும் பொண்ணையும் அழைச்சிட்டு கிளம்பினால் தான், நல்லநேரத்தில்  வீட்டுக்கு போகமுடியும்..."

சரியென்று தலையாட்டினார்,கணவர்.

நேரம் மணி மூன்றை நெருங்கியது.

மகளை புகுந்தவீட்டிற்கு வழி அனுப்ப, நானும் கணவரும் சென்றோம். 

நானும் மகளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே, கண்களால் பேசிக்கொண்டோம்.

"நேரமாச்சு... எல்லோரும் சந்தோஷமாக கிளம்புங்க..."  பெரியவர் ஒருவர் சொன்னதும், ரமா காரில் இருந்து இறங்கி, என் கணவரை கட்டிப்பிடித்தாள்.

"அப்பா... நாங்க போயிட்டு வாரோம்ப்பா..." சொன்ன, ரமாவின் தோளை தட்டிக் கொடுத்து, என்னைப் பார்த்தார்.

நான் கண்களைத் துடைத்துக் கொண்டே, அமைதியா நின்றேன்.

அடுத்த சிலநிமிஷங்களில், கார் புறப்பட்டது. 
ரமாவை பார்த்து கையசைத்துக் கொண்டே திரும்பினேன். 
என் கணவரை காணவில்லை.

'எங்கே போயிருப்பார், இவர்..?' யோசித்துக்கொண்டே, பக்கத்தில் நின்றிருந்த பெண்மணியிடம் கேட்டேன்.

"ரமாவின் அப்பாவை பார்த்தீங்களா...? என் பக்கத்தில்தான் நின்றிருந்தார்..."

"மண்டபத்துக்குள்ளே போவதை பார்த்தேன்..." 

நானும், அவசரமா மண்டபத்துக்குள் நுழைந்தேன். 
மணமேடையின் பக்கத்தில் இருந்த மணமகள் அறைக்குள் என் கணவர் நுழைவதை பார்த்தேன்.

அறையின் கதவு திறந்தே இருந்தது.

உள்ளே நுழைந்தேன், நான்.

சேரில் தலையை குனிந்தவாறே அமர்ந்திருந்தவரின் தோளை தட்டினேன்.

நிமிர்ந்து பார்த்தவரின் கண்களில் கண்ணீர்துளிகள் நிரம்பி இருந்தது.

"கண்ணெல்லாம் கலங்கியிருக்கு, என்னாச்சுங்க...?" பதறினேன், நான்.

"ஒ... ஒண்ணுமில்லை, செண்பகம்..."

"ரமாவை நினைச்சுதானே அழுறீங்க..? நானும், உங்களை காலைல இருந்தே கவனிச்சிட்டுதான் வர்றேன். எந்தகவலையும் இல்லாம, கலகலப்பாகவே இருந்தீங்க. எனக்கு ரமாவை பிரியுறோமேன்னு வருத்தமா இருந்துச்சுங்க..."

"ஒருவிஷயம் சொல்லட்டும்மா... பொண்ணு புகுந்த வீட்டிற்கு போகும்போது, நாம இரண்டுபேரும் அழுதா, அவள் மனசு பூராவும் அன்னிக்கு சந்தோஷமா இருக்காது. நம்மைப் பற்றிய சிந்தனைதான் ஓடிட்டே இருக்கும். அனால்தான், என் வேதனையை மறைச்சி, அவள் பக்கத்தில் சந்தோஷமா என்னை காட்டிட்டேன். என்னால முடியலை செண்பகம்..."

ஒரு குழந்தைபோல தேம்பித்தேம்பி அழும் என் கணவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தோற்றுப்போனேன், நான்.

கோபால்.



 



Post a Comment

3 Comments

  1. மிக்க மகிழ்ச்சி

    எனது சிறுகதை சமுத்திரம் தங்கள் வேட்டை இதழில் வெளியிட்டு சிறப்பித்துள்ளீர்கள்.

    மிக்ம நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி

      Delete
  2. தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும். சமுத்திரம்
    கதை அருமை. உணர்ச்சிப் பெருக்கு

    ReplyDelete