திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 18

திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 18


கொடுங்கோன்மை-56
கொடுங்கோலர் அழிவது திண்னம்

மக்களைத் துன்புறுத்திப் பார்க்கின்ற அரசு
கொலைக்குற்றம் செய்வதைக் காட்டிலும் கொடிது!
மக்களிடம் வம்படியாய்ப் பொருள்கொள்ளும் அரசு
வழிப்பறிக் கள்வருக்கு நிகரென்றே சொல்லு!

நன்மையைத் தீமையை எடைபோட்டுப் பார்த்தே
ஆளவேண்டும் இல்லையேல் தானாகக் கவிழும்!
கொடுங்கோலைக் கட்டவிழ்த்தே ஆள்கின்ற ஆட்சி
பொருளையும் மக்களையும் இழந்தேதான் வீழும்!

கொடுமையிலே துடிக்கின்ற பொதுமக்கள் கண்ணீர்
ஆட்சியையே அழிக்கின்ற வலிமையான ஆயுதம்!
நீதிநெறி தவறாதோர் புகழென்றும் நிலைக்கும்!
அப்பண்பைப் புறக்கணித்தால் புகழ்நிலைத்தல் கடினம்!

மழையின்றிப் போவதாலே உண்டாகும் துன்பம்
கருணையற்ற ஆட்சியிலே மக்கள்நிலை ஆகும்!
முறையற்ற ஆட்சியிலே செல்வந்தன் வாழ்க்கை
வறுமையிலே வாழ்வதையும் விஞ்சுகின்ற துயரம்!

முறைதவறி நடத்துகின்ற ஆட்சிதனைப் பார்த்தாலே
மழைமேகம் அஞ்சியே பெய்யாது ஓடும்!
மக்களைக் காக்காத ஆட்சியிலே பசுவின்
பால்வளங்கள் குறைந்துவிடும்! அறநூலைச் சான்றோர்கள்
மறந்தேதான் வாழ்ந்திருப்பார்! இருள்சூழும் நாடு 

வெருவந்த செய்யாமை-57
கடுமையைத் தவிர்த்துத் தண்டித்து திருத்தவேண்டும்

குற்றத்தைச் செய்வதற்குக் கொடுக்கின்ற தண்டனையால்
மீண்டுமந்தக் குற்றத்தைத் தடுப்பதுதான் நல்லரசு!
கடுமையாகக்  கண்டிப்ப தைப்போலக் கண்டித்து
மென்மையாய்த் தண்டிக்கும் நல்லரசே நீடிக்கும்!

பொதுமக்கள் அச்சத்தில் வருந்துமாறு நடக்கின்ற
கொடுமையான அரசிங்கே விரைவினிலே அழிந்துவிடும்!
கொடுமையான அரசிதுதான் என்றேதான் பொதுமக்கள்
மனம்நொந்தால் எக்கணமும் அவ்வரசு வீழ்ந்துவிடும்!

சந்திக்க வருகின்ற மக்களையோ இழுத்தடிக்கும்
கொடுங்கோலன் செல்வங்கள் பேய்காத்த செல்வந்தான்!
கடுஞ்சொற்கள் கருணையற்ற பார்வையும் கொண்டவனின்
செல்வங்கள் வளராமல் விரைந்தேதான் அழிந்துவிடும்!

அனல்சொற்கள், வரம்புகளை மீறிய தண்டனைகள்
இவையெல்லாம் அரசாங்கம் வலுவிழக்க அரமாகும்!
அமைச்சரைக் கலக்காமல் தன்னலமாய் முடிவெடுக்கும்
அரசெல்லாம் செல்வத்தை இழந்தேதான் தவித்திருக்கும்!

வருமுன்னே காக்காமல் பகைதிரண்டு வந்தபின்பு
அச்சத்தில் நடுங்குபவன் அஞ்சியஞ்சி அழிந்திடுவான்!
கற்காத அறிவற்றோர் துணையாக உள்ளவனோ
பூமிக்குச் சுமையாவான்! அச்சுமைபோல் வேறில்லை!

கண்ணோட்டம் -58
அன்பும் இரக்கமும் அருமைப் பண்புகள்!

அன்புடன் இரக்கமே கண்ணோட்டப் பேரழகு!
அத்தகையப் பண்புகளால் இவ்வுலகம் வாழ்கிறது!
இத்தகையப் பண்புகளோ இல்லாமல் வாழ்பவர்கள்
இவ்வுலக நிலத்திற்குச் சுமையாவார் நாள்தோறும்!

பாடலுக்கு ஒன்றாத பண்ணாலே என்னபயன்?
கண்ணோட்டம் இல்லாத கண்களாலே பயனில்லை!
கண்ணோட்டம் காட்டாத கண்களிங்கே முகந்தன்னில்
இருந்தாலும் எந்தவிதப் பயன்களுமே இல்லையென்போம்!

கண்களுக்கு அணிகலனோ இரக்கமென்னும் பண்பாகும்!
இரக்கமற்ற கண்களெல்லாம் கண்களல்ல புண்கள்தான்!
இரக்கத்தைக் காட்டுகின்ற கண்ணிருந்தும் காட்டாதோர்
மண்மீது எழுதிவைத்த இயங்காத மரம்போல்தான்!

கருணைமனம் கொண்டவரின் கண்கள்தாம் கண்களாகும்!
இப்பண்பு இல்லாதோர் கண்ணற்றோர் எனப்படுவார்!
தன்கடமை தவறாமல் கருணைக்கண் கொண்டவர்க்கே
இவ்வுலகப் பரப்பெல்லாம் உரிமைதான் எனச்சொல்வோம்!

தண்டிக்க வேண்டிய மாந்தரிடம் பரிவுகாட்டி
குற்றத்தைப் பொறுப்பதே பெருந்தன்மைப் பண்பாகும்!
கண்ணோட்டம் உள்ளவர்கள் தம்முடனே நெருக்கமாகப்
பழகுவோர்கள் நஞ்சையே தந்தாலும் ஏற்பார்கள்!
(தொடரும்)





 



Post a Comment

Previous Post Next Post