சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-43

சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-43


வெற்றியின் இரகசியம்
“உலகில் வெற்றியடைய வேண்டுமானால் ஏற்கனவே வெற்றி அடைந்தவர்களாகக் காட்சியளிக்க வேண்டும்." என்பது ஒரு பொன் மொழி. இதோஓர் அருமையான குறள்:

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்-(குறள்-620)

எனும் குறள் மூலம், யார் ஒருவர் தாம் எடுத்த செயலில் சோர்வு இல்லாமல், தொடர் முயற்சியுடன், காலத்தை வீணாக்காமல் கடுமையாக உழைப்பவர்கள் தம் செயலுக்கு இடையூறாக வரும் விதியைக் கூட தோல்வியுறச் செய்வார் என்று கூறுகிறார். என்ன ஆழமான கருத்து. 

சரியான நேரத்தில், சரியான செயலைச் சரியான முறையில் செய்பவர்களுக்கு இந்த உலகமே வேண்டினும் கைகூடும்... “சிரமங்கள் இல்லாமல் சிகரத்தைத் தொடமுடியாது" "வேதனைகள் இல்லாமல் சாதனைகள் கிடையாது" "வியர்வை சிந்தாமல் வெற்றிக்கனி பறிக்க இயலாது"

"TIME IS GOLD" என்றும், “காலம் பொன் போன்றது” என்றும் கூறுவர். நம்மிடம் பணம் இருந்தால் தங்கம், வைரம் மட்டுமல்ல இவ்வுலகில் எதனையும் வாங்கலாம். ஆகவே, காலத்தைத் தங்கத்துடன் ஒப்பிடுவது எமக்குப் பொருத்தமாகத் தெரியவில்லை. அப்படி எனில் காலத்தை எதனுடன் ஒப்பிடுவது?... ஆம் காலம் என்பது நம் உயிரைப் போன்றது. "TIMEIS LIFE" என்று கூறலாம். உயிர் சென்றுவிட்டால் அது திரும்பாது. அது போன்றது தான் காலமும்... காலம் ஒருமுறை வீணாகிவிட்டால் அது மீண்டும் வராது.

விடாமுயற்சியும், கடின உழைப்பும் கொண்டவர்கள் வாழ்க்கையில் உன்னத நிலைக்குச் சென்றுவிடுவார்கள். இதில் எவ்வித ஐயமுமில்லை. தாமஸ் ஆல்வா எடிசன் முதல் Dr.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் வரை எண்ணற்ற சான்றுகள் கூறலாம். “உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ” என்பார் பட்டினத்தார். அதைப்போல, அறிவியல், கல்வி, பொருளாதாரம் எனப் பல்வேறு துறைகளில் உலகின் மிகப் பெரிய சாதனையாளர்கள் எல்லாம் (TIME)காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களே!

இதைக்கூறும் போது ஒரு கதை... ஒருவன் வேலைத் தேடி அலைந்து திரிந்தான். குடும்ப சூழ்நிலையோ மிகக் கொடுமை... எங்கும் வேலை கிடைக்கவில்லை. அந்நிலையில் ஒருநாள் ஒரு மரம் அறுக்கும் தொழிற்சாலையில் வேலை கேட்க, அவன் மீது இரக்கப்பட்ட முதலாளி, “சரி ஒரு நிபந்தனை, இங்கு உனக்குச் சம்பளம் கிடையாது. 

ஆனால் வேலை செய்வதற்கு ஏற்ப கூலி கிடைக்கும். மரத்தை எத்தனை துண்டுகள் போடுகிறாயோ அதனடிப்படையில் வாரத்திற்கு ஒருமுறை கூலி கிடைக்கும்? சம்மதமா? என்றார்.”

அவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி... கிடைத்த வாய்ப்பு... சரி என்றான். அவனுக்கு 20 ஆண்டு கால அனுபவம் மிக்க மேற்பார்வையாளர் மூலம் வேலை கற்றுத்தந்து ஒரு கோபரியும் தரப்படுகிறது.

நிறுவன விதிமுறைப்படி முதல்வாரம் அவரவர் செய்த வேலைக்கான கூலி கணக்கிடப்படுகிறது. மேற்பார்வையாளருக்கு600 ரூபாய் கிடைக்கிறது. புதியதாய் வேலைக்குச் சேர்ந்தவனுக்கோ 1200 ரூபாய் கிடைக்கிறது. மறுவாரம் மேற்பார்வையாளருக்கு 900 ரூபாய் கிடைக்க, இவனுக்கோ 1800 ரூபாய் கிடைக்கிறது.மேற்பார்வையாளருக்குப் பொறுக்கவில்லை. இது எப்படி சாத்தியம்? இத்தனை ஆண்டுகள் பணியாற்றும் நமக்குத் தருவதை விட இப்போது வந்தவனுக்கு வாரச் சம்பளம் அதிகமாகத் தருகிறாரே முதலாளி என்று வருத்தத்துடன் அவரிடமே சென்று கேட்கிறார்.

அதற்கு அந்த முதலாளி அவரிடம், “இதற்கான காரணத்தை நீங்களே சென்று அப்புதியவனிடம் கேளுங்கள்” என்றார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. சரி என்று தம் ஈகோவை மறந்து அவனிடம் சென்று மெல்லப் பேச்சுக் கொடுத்து, இது எப்படி சாத்தியம்? காரணம் என்ன?
என்றுகேட்கிறார்.

அவன் சிரித்துக் கொண்டு, நமக்கான வேலை நேரத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்க, அதற்கு அவர், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தானே ! நான் காலை 8 மணிக்கு வந்தவுடன் சிறிது நேரம் ஓய்வெடுப்பேன். பின் மரம் வெட்டுவேன். 10 மணிக்கு தேநீர் பருகிவிட்டு சிறிது நேர ஓய்வு தூங்குவேன், பின் எழுந்து மரம் வெட்டுவேன், நண்பர்களுடன் சிறிது நேரம் பேசுவேன். இதுதானே நம் அன்றாடப்பணி, இதைத் தானே நீயும் செய்கிறாய்? என்றார்.

அதற்கு அவன் வேலை நேரம் ஒன்று தான், ஒரு சிறு திருத்தம், நீங்கள் தூங்கி, ஓய்வெடுத்து அரட்டை அடிக்கும் நேரத்தை நான் என் கோடரியைக் கூர்மையாக்குவதில் செலவிடுகிறேன். நீங்கள் 10 துண்டு அறுப்பதற்குள் நான் 20 துண்டுகள் என இரட்டிப்பாகச் செய்து அதிகக் கூலி வாங்குகின்றேன் என்று கூறுகின்றான். 

அதைக் கேட்ட மேற் பார்வையாளருக்குச் சுரீர் என்றது... உண்மை புரிந்தது.

ஆமாம் நண்பர்களே ! “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது போல நம் உயர்வு நம் கையில் ஒவ்வொரு வினாடியும் நமக்குப் பயன்தரும். முயற்சியுடன் உழைக்கத் தொடங்கினால் எத்தனை வளம் நம்மை வந்தடையும்... “காலத்தை வீணாக்கி உழைக்க மறுப்பவன் வாழ்வில் தவிக்கின்றான் ; உழைக்கத் தெரிந்தவன் வாழ்வில் செழிக்கின்றான்” இதுவே வெற்றியின் இரகசியம்... என்பதை எண்ணி, உணர்ந்து நாமும் உழைப்போம் ! உயர்வோம் !! நலம் பெற்று நீடு வாழ்வோம் !!
(முற்றும்)




 



Post a Comment

Previous Post Next Post